எம்மில் பலரும் விதவிதமான உணவு முறையை பின்பற்றுகிறார்கள். எடை குறைவுக்கு ஒரு உணவு முறை, பொலிவான தோற்றத்திற்கு ஒரு உணவு முறை, திடகாத்திர தோற்றத்திற்கு ஒரு உணவு முறை, உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கு பிரத்யேக உணவுமுறை, உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கு ஒரு உணவு முறை என பல்வேறு உணவு முறைகளை கையாண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் துரித உணவுகள், உடற்பயிற்சியின்மை, மது, புகை, அதிகளவிலான அசைவ உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பக்கற்றுகளில் அடைக்கப்படும் உணவுகள் என பசிக்கும் போதும், மனதளவில் சோர்வாக இருக்கும்போது உணவை உட்கொள்வதால்  உடலின் பல பகுதிகளில் நச்சுக் கழிவுகள் உண்டாகி, உடலை விட்டு வெளியேறாமல் தேக்கமடைகின்றன.

இதன் காரணமாக மலசிக்கல் ஏற்படுவதுடன் கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கான பணிகளை இயல்பான அளவைக் காட்டிலும் கூடுதல் சுமையுடன் பணியாற்ற தொடங்குவதால், அவைகள் விரைவில் பழுதடைகின்றன. இந்நிலையில் இந்த உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்குவதற்கும், உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேறுவதற்கும் பிரத்யேகமான உணவு முறை ஒன்றை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

‘டீடாக்ஸ் டயட்’ எனப்படும் இந்த பிரத்யேக உணவு முறையை தொடர்ந்து மூன்று நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதன்போது திட உணவுகளை முற்றாகத் தவிர்த்து, திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும், காய்கறி சாறு, பழச்சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை அருந்தலாம். சிலருக்கு வைத்தியரின் அறிவுரையின்படி கிரீன் டீயும் பருகலாம். இந்த உணவு முறையை பின்பற்றும் போது, நமது கல்லீரல் மற்றும் செரிமான மண்டலம் நன்கு ஓய்வு பெற்று, உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. உடலும் உள்ளமும் உற்சாகமடைந்து பல்வேறு நன்மைகளையும் அளிக்கிறது.