Published by R. Kalaichelvan on 2019-11-05 13:52:26
(செ.தேன்மொழி)
பொரலஸ்கமுவ பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் 16 வயதுடைய சிறுவனையும் மேலும் நான்கு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொரலஸ்கமுவ பகுதியில் மதுபான நிலையமொன்றில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
தெஹிவலை , கனேமுல்ல , வீரகெட்டி , பொரலஸ்கமுவ மற்றும் பெல்லம்பல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 - 44 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் சம்பவத்தின் போது குறித்த மதுபான நிலையத்தில் போலி நாணயத்தாளை கொடுத்து மதுபான போத்தல் ஒன்றை கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளார். பின்னர் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரு கிடைத்த தகவலை அடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 5000 ரூபாய் நாணயத்தாள்கள் மூன்று மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸார் சந்தேக நபரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணைகளை அடுத்து போலி நாணயத்தாள்களை தயாரித்து வந்த நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந் நிலையத்திலிருந்து 5000 ருபாய் நாணயத்தாள்கள் ஏழும் , மடிக்கணணி மற்றும் ஸ்கேன் இயந்திரமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.