கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரிவாக செயற்பட்டுவரும் தமிழரசுக் கட்சியானது ஜனாதிபதிக்கான தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது தொடர்பாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழரசுக் கட்சியைப் பற்றிப் புரியாமல் நம்பியிருந்தவர்களுக்கு இது ஏமாற்றத்தைத் தந்திருப்பது இயல்பே என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான வரதராஜாப் பெருமாள் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

தமிழரசுக் கட்சியின் இந்த முடிவு யாழ்ப்பாண மற்றும் கிழக்குப் பல்கலைக் கழக தமிழ் மாணவர் சமூகத்தையும் யாழ்ப்பாண தமிழ்த் தேசிய பிரமுகர்களையும் கேவலப்படுத்தியுள்ளது.

2015ஆம் அண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதும், 2015ஆம் ஆண்டு ஆகஸ்டு பாராளுமன்றத் தேர்தலின் போதும் தமிழர்களுக்கு அதிக உயர்பட்சமான அதிகாரப் பகிர்வைத் தரப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி வாக்குறுதி வழங்கியமை அனைவருக்கும் தெரிந்த விடயமே.

ஆனால் அரசியல் யாப்பு சபை, மக்கள் கருத்தறியும் ஆணைக்குழு, இடைக்கால அறிக்கை என போலி நாடகங்களை நடத்தி தமிழ் மக்களை கடந்த 5 வருடங்களாக ஏமாற்றி காலத்தைக் கடத்தியது ஐக்கிய தேசியக் கட்சி. தமிழ் மக்களை எமாற்றுவதில் தமிழரசுக் கட்சியும் அதன் தீவிரமான கூட்டாளியாகவே செயற்பட்டது.

சஜித் பிரேமதாசா கடந்த 5 ஆண்டுகளாக அரசாங்கத்தில் ஒரு பிரதானமான அமைச்சராகவும் கடந்த 19 ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் இந்த காலகட்டத்தின் எந்த வேளையிலும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றியோ, தமிழர்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைகள் பற்றியோ தமிழர்களுக்கு சாதகமாக பேசியதில்லை. வெறும் சிங்கள அரசியலை மட்டுமே நடத்தி வந்தவர். அத்துடன் யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் இலங்கை அரச படைகளுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்தார்.

இப்போது வானத்திலிருந்து திடீரெனக் குதித்தவர் போல வாக்குறுதிகளை அள்ளி வழங்குகிறார். இவை பொய்யானவை, தமிழர்களை ஏமாற்றி வாக்கு வேட்டையாடும் நோக்கம் கொண்டவை என்பது அனைவராலும் புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்றாகும்.

எனவே! புல்கலைக் கழகங்களின் தமிழ் மாணவர் சமூகமும், தமிழ்த் தேசிய பெருங்குடி பிரமுகர்களும். தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவளிக்கும் இலக்குகளுடன் செயற்படும் தமிழ் ஊடகங்களும் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்து ஐக்கிய தேசியக் கட்சியை தொடர்ந்தும் ஆட்சிபீடத்தில் வைத்திருப்பதற்கு துணை போக மாட்டார்கள் என நம்புகிறோம்.

இன்னுமொரு 5 வருடங்களுக்கு தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியும் இல்லாமல் அரசியற் தீர்வும் இல்லாமல் தமிழ் மக்கள் எமாளிகளாக வாழுகின்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதே எமது எச்சரிக்கையாகும்.

அமெரிக்காவின் கைக் கூலியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒட்டுக்குழுவாகவும் செயற்பட்டு வரும் தமிழரசுக் கட்சியின் பொய்யான பிரச்சாரங்களுக்கும் ஏமாற்று வார்த்தை ஜாலங்களுக்கும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாறக் கூடாது என்பதே எமது வேண்டுகோளாகும் என அந்த செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.