(இராஜதுரை ஹஷான்)

போரின் போதும்,அதற்கு பின்னரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட நபர்கள் குறித்து மஹிந்த தரப்பினரிடமிருந்து தமிழ் மக்கள் நீதியை  எதிர்பார்க்க முடியாது.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அரசாங்கத்திடம் இருந்து நிவாரணத்தினை எதிர்பார்க்கவில்லை மாறாக  உண்மையான தீர்வினையே   எதிர்பார்க்கின்றார்கள். என தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின்  பாராளுமன்ற உறுப்பினர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

யுத்த காலத்தில் காணாமல் போனோரை எவ்வாறு கொண்டு வருவது என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளமை காணாமலாக்கப்பட்டுள்ளோரது உறவினர்களது எதிர்பார்ப்பினை அவமதிப்பதாகவே கருதப்படும். யுத்த காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் நபர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளமை சாதாரணமாகவே  காணப்பட்டுள்ளது.

ஆகவே நபர்களை காணாமலாக்கிய மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பிடம் காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் நீதியை எதிர்பார்ப்பது      சாத்தியமற்றது.காணாமலாக்கப்பட்டோருக்கும், அவர்களை எதிர்பார்த்திருக்கும் உறவுகளுக்கும் எமது ஆட்சியில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.

காணாமலாக்கப்பட்டோரது   உறவுகளுக்கு   அரசாங்கம் நிவாரணத்தினை மாத்திரம் வழங்கினால் தீர்வு  கிடைத்து விடும் என்பது  தவறாகும். காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் அரசாங்கத்தின் நிவாரணங்களை எதிர்பார்க்கவில்லை மாறாக தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை உண்மையாக அறிந்துக்  கொள்ளவே போராடுகின்றார்கள். அது  அவர்களின் உரிமையாகும்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கொள்கை  பிரகடனத்தில் காணாமலாக்கப்பட்டோருக்கும்,யுத்த்தில் பாதிக்கப்பட்டோருக்கும்  நீதி  கிடைக்கும் பொறிமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. யுத்த குற்ற விசாரணைகள்  சுயாதீனமாக முறையில் இடம் பெற வேண்டும். அந்த விசாரணைகள்  இராணுவத்தினருக்கு மாத்திரமல்ல விடுதலை புலிகள் அமைப்பின் மீதும் முன்னெடுக்கப்பட வேண்டும் அதுவே  நியாயமானதாகும்.

10வருட  ஆட்சி காலத்திலும் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், குறிப்பாக தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும்  செயற்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ  தற்போதும் தமிழ் சமூகத்தின் விடயத்தில் எவ்விதமான  மாற்றங்களையும் முன்னெடுக்கவில்லை. 

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தருணத்திலும்  தமிழ் மக்களுக்கு எதிராக பகிரங்க  கருத்துக்களும், தனி பௌத்த சிங்கள   வாக்குகளை  மாத்திரம் எதிர்பார்த்த போக்கினையும் நன்கு புலப்படுத்துகின்றது. இவ்வாறான  செயற்பாடுகளை முன்னெடுக்கும் நபருக்கு தமிழ் அரசியல்வாதிகள் இன்றும்  ஆதரவாக செயற்படுவது தன் இனத்தின் மீது  கொண்டுள்ள அக்கறையின்மையினை  வெளிப்படுத்துகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.