பாரிஸின் பருவநிலை மாற்றம் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான அறிவிப்பினை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்துள்ளது.

பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் உலகின் முதல் விரிவான ஒப்பந்தமான பாரிஸ் காலநிலை ஒப்பந்தமானது கடந்த 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுமதியுடன் நிறைவேற்றப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

உலகை மாசுபடுத்தும் நாடுகள் அனைத்தும், ஏழை பணக்கார நாடு என்ற வித்தியாசமின்றி, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக தங்கள் பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

எனினும் பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் வேலைகளை இழக்கச்செய்யும் நியாயமற்ற ஒப்பந்தம் என்று கூறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.

அர்த்தமுள்ள கடமைகளை உலகின் முன்னணி மாசுபாட்டாளர்கள் மீது சுமத்த முடியாதுபோது, அமெரிக்காவை தண்டிக்கும் இந்த ஒப்பந்தத்தை ஒத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் அதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இந் நிலையில் அமெரிக்காவனது பருவநிலை மாற்றம் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பித்துள்ளதாகவும், அதன் உத்தியோகபூர்வ அறிவிப்பினை ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

பாரிஸின் பருவநிலை மாற்றம் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் படி, குறித்த ஒப்பந்தத்திலிருந்து ஒரு நாடு விலகுவதானால் ஒரு வருடத்துக்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்திருக்க வேண்டும். 

அதன்படி குறித்த அறிவிப்பினை ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்துள்ள அமெரிக்கா எதிர்வரம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் திகதி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறலாம் என்பதும் குறிப்பிடத்க்கது.