ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தீர்மானித்துள்ளது. வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீண்ட கலந்துரையாடலை நடத்தியிருக்கின்றோம். இது தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பில் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பாராளுமன்றக் குழுக்கூட்டங்களிலும் ஆராயப்பட்டிருந்தது. எமது மத்திய செயற்குழுவும் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளது என்று அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவர் தொடர்பில் நாம் ஆராய்ந்தோம். அவர்களுடைய கடந்த கால செயற்பாடுகள், தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக பல விடயங்களை நாம் ஆராய்ந்து இன்றைய சூழலில் எமது மக்களுக்கு உபயோகமான ஒரு நடவடிக்கையாக சஜித்தை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை ஏகமனதாக எடுத்துள்ளோம் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைமைக்கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ள போதிலும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளான புௌாட், ரெலோ ஆகியவற்றுடன் கலந்துரையாடி கூட்டமைப்பின் முடிவினை அறிவிப்பதற்கான பொறுப்பு அதன் தலைவர் இரா. சம்பந்தனிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. சம்பந்தன் இரண்டு கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடி கூட்டமைப்பின் பொதுவான நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தபால் மூல வாக்களிப்பும் நிறைவு பெற்றுள்ள சூழலில் இலங்கை தமிழரசுக்கட்சி தனது முடிவினை அறிவித்திருக்கிறது. ஆனாலும் இன்னமும் கூட்டமைப்பின் முடிவு குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனாலும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளான புௌாட், ரெலோ ஆகியனவும் இணக்கம் தெரிவிக்கும் என்றே பெரும்பாலும் எதிர்வு கூறப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை அடுத்து தமிழ் தரப்பின் சார்பில் பொதுவான முடிவு எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனடிப்படையில் தமிழ் தேசியக்கட்சிகளுடன் கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் மக்கள் பேரவையானது ஆரம்பத்தில் இதற்கான முயற்சியை எடுத்திருந்தது. தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரன், ஈ.பி.ஆர். எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
ஆனால் இந்தப் பேச்சுக்களின்போது தமிழ் மக்களின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்றும் அதற்கு தமிழ் தேசியக்கட்சிகள் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுவேட்பாளராக சம்பந்தனை போட்டியிடுமாறு கோரிய அவர்கள் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தபோது பொது வேட்பாளராக போட்டியிடுமாறு சி.வி. விக்கினேஸ்வரனிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் இந்த முயற்சி கைகூடியிருக்க வில்லை. இதனையடுத்து ஆறு தமிழ் தேசியக்கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பொதுவான நிலைப்பாடொன்றுக்கு வந்து ஜனாதிபதி தேர்தலில் இறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான முயற்சியில் யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்த மாணவர் ஒன்றியத்தின் முயற்சி ஓரளவிற்கு வெற்றி பெற்றிருந்தது. இலங்கை தமிழரசுக்கட்சி, ரெலோ, புௌாட், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய ஆறு கட்சிகளின் தலைவர்களும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். ஆறு கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டை எடுத்ததுடன் அது தொடர்பில் 13 அம்ச திட்டத்தையும் தயாரித்திருந்தன.
ஆனால் இந்த பொது ஆவண விவகாரத்தில் எழுந்த முரண்பாடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த முயற்சியில் இருந்து விலகிக்கொண்டது. இதனை அடுத்து ஏனைய ஐந்து கட்சிகளும் 13 அம்ச கோரிக்கையில் கைச்சாத்திட்டதுடன் அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு முடிவு செய்திருந்தன. இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் தென் பகுதியில் எழுந்த இனவாத பிரசாரம் காரணமாக பிரதான வேட்பாளர்கள் 13 அம்சக் கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கே முன் வரவில்லை. பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ மற்றும் அந்தக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் 13 அம்ச கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தயாரில்லை என்று அறிவித்திருந்தனர்.
தென்பகுதி இனவாத பிரசாரம் காரணமாக புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும் இந்த விவகாரம் தொடர்பில் மௌனம் சாதித்திருந்தார். இத்தகைய நிலையில்தான் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆகியோரது தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகியிருந்தன.
இதனடிப்படையிலேயே தற்போது இலங்கை தமிழரசுக்கட்சியானது சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கான முடிவினை எடுத்துள்ளது. ஐந்து தமிழ் தேசியக்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான நிலைப்பாடொன்றுக்கு வந்து அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த முயற்சி உரிய வகையில் கைகூடவில்லை.
கடந்தவாரம் ஐந்து கட்சிகளின் தலைவர்களும் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதிலும் இறுதி இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில்தான் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்கினேஸ்வரன் தனது கட்சியின் நிலைப்பாட்டை முந்திக்கொண்டு அறிவித்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கடந்த கால வரலாற்றையும் தற்போதைய அகப்புற சூழல்நிலையையும் கருத்தில் எடுத்து தமது ஜனநாயக உரித்தை பலப்படுத்தவேண்டும். 13 அம்ச கோரிக்கைகளை பிரதான கட்சிகளின் சிங்கள வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ளாமையினால் எந்தவொரு சிங்கள வேட்பாளரை நோக்கியும் கைகாட்டி ஆதரவளிக்க கோர முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதிலிருந்து மக்கள் சுயாதீனமாக தேர்தலில் வாக்களிக்கவேண்டும் என்றும் கடந்தகால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவினை தமிழ் மக்கள் எடுக்கவேண்டும் என்றும் அவர் தனது நிலைப்பாட்டை கூறியிருந்தார். இவ்வாறு ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முடிவினை எடுக்க இருந்த நிலையில் அவசரப்பட்டு விக்கினேஸ்வரன் தனது நிலைப்பாட்டினை அறிவித்திருந்தார்.
இதேபோன்றே ஆறு கட்சிகளின் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தேர்தலை பகிஷ்கரிக்கவேண்டும் என்று அவசரப்பட்டு அறிவித்திருந்தது.
இவ்வாறான ஒரு சூழலில்தான் தமிழரசுக்கட்சியும் தமது தீர்மானத்தை தற்போது எடுத்துள்ளதுடன் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி பொதுத் தீர்மானத்திற்கு வருவதற்கு முயற்சி எடுத்து வருகின்றது.
தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் தலைமையானது தீர்மானித்து அதனை அறிவிக்கவேண்டியது இன்றியமையாததாகும். மக்கள் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம் என்றோ அல்லது தேர்தலை பகிஷ்கரிக்கவேண்டும் என்றோ கோருவதற்கு தமிழ் தலைமைகள் அவசியமில்லை. தமிழ் மக்கள் உங்களை தமது தலைவர்களாக தெரிவுசெய்துள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டுவதே தலைமைத்துவமாகும்.
இந்த விடயத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி யாரை ஆதரித்துள்ளது என்பது விடயமல்ல. ஆனால் ஒரு உறுதியான முடிவினை எடுத்துள்ளமை பாராட்டத்தக்கது. இதேபோன்றே யாருக்கு ஆதரவு வழங்கினாலும் பரவாயில்லை. ஆனால் தமிழ் தலைமைகள் தமது முடிவுகளை ஆணித்தரமாக அறிவிக்கவேண்டும். இதுவே இன்றைய தேவையாகும்.
( 05.11.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )