(செ.தேன்மொழி)

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நாளைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் அமைப்பு எனும் பெயரில் சந்திரிகா மற்றும் குமாரவெல்கம ஏற்பாடுசெய்துள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவரும் செல்லக்கூடாது என  மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார். 

அவ்வாறு கலந்து கொள்பவர்களுக்கு எதிராக மத்தியக் குழுவில் கடும் நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இராஜகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுனவின் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பு மத்தியநிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.  

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பாதுகாப்பவர்கள் எனக் கூறிக்கொண்டு கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் வாக்குகளை இல்லாமல் செய்து , சஜித் பிரேமதாசவை வெற்றிப்பெற செய்யும் வகையிலேயே சந்திரிக்கா - குமார வெல்கம ஆகியோர் செயற்படுகின்றனர்.

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு பயன்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும குமார வெல்கமவும் செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் ரணில் விக்ரமசிங்கவின் பினாமிகள். இவ்விருவரும் இணைந்து கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் வாக்குகளை இல்லாமல் செய்வதற்கே முயறிப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.