வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்த முதியவர், மருத்துவர் வருகை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்துள்ளார் இந்நிலையில் முதியவர் உயிரிழப்பை அடுத்து மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் அச்சுவேலி வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றது.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்த முதியவர், மருத்துவர் வருகை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பில் மருத்துவருக்கும் முதியவரின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையில் கூடிய முதியவரின் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவரைத் தாக்கியதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“முதியவர் சுவாசப் பிரச்சினையால் அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, மருத்துவர் சிகிச்சை வழங்குவதற்கு அக்கறை செலுத்தாது செயற்பட்டார். முதியவரை சுகாதார ஊழியர் ஒருவரே பார்வையிட்டார்.

நீண்ட நேரத்துக்கு பின் வருகை தந்த மருத்துவர் முதியவர் உயிரிழந்தார் என்று தெரிவித்தார். அதனாலேயே வாக்குவாதம் ஏற்பட்டு அவர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து மருத்துவரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.