(நா.தனுஜா)

நாட்டின் சுற்றுலாத்துறையில் பாரிய சரிவை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களின் பாதிப்பிலிருந்து இலங்கை மீண்டுவருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருக்கின்றது.

பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பொறுத்தவரையில், அது இவ்வருடம் 2.7 சதவீதமான உள்ளபோதிலும் அடுத்த வருடம் 3.5 சதவீதத்தை எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நட்சத்திர ஹோட்டல்களையும், கத்தோலிக்க தேவாலயங்களையும் இலக்குவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகையில் சடுதியான வீழ்ச்சியொன்று ஏற்பட்டது. அதன் காரணமாக இவ்வருடம் சுற்றுலாத்துறை மூலமான வருமானத்தில் சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்தை அனுபவிக்க நேரிடும் என்று இலங்கை அரசாங்கம் கணித்துள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல்களினால் நாட்டின் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதுடன், பெறப்பட்ட வருமானத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி பணிப்பாளர் மிட்சுகிரோ புருஸவா தெரிவித்துள்ளார். 

2016 ஆம் திகதி அனுமதியளிக்கப்பட்ட இலங்கைக்கான 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் அடுத்தகட்ட வழங்கலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புக்களின் இருந்து இலங்கை மீண்டுவருவதாகக் குறிப்பிட்ட அவர், அவசரமான சமூக முதலீடுகள் தொடர்பில் முறையான நிதிக்கொள்கையை பேணுவது அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.