(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் தமிழ் கட்சிகள் உள்ளிட்ட 14 கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு இன்றையதினம் திங்கட்கிழமை  மிரிஹான பிரதேசத்தில் நடைபெற்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கையெழுத்திட்டார்.

இந்நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அதன் தவிசாளர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண , லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அகில இலங்கை தமிழ் மகா சபையின் செயலாளர் பேராசிரியர் கே.விக்னேஷ்வரன், ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் டீ.உதயராசா, இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் விஷ்ணுகாந்த், ஜனதா சேவக கட்சியின் செயலாளர் ஜயந்த விஜேசிங்க, ஐக்கிய நாட்டு மக்கள் கட்சியின் செயலாளர் நிஹால் பிரேமகுமார, இந்திய வம்சாவளி மக்கள் கட்சியின் செயலாளர் ரஷீதா பானு ரிஷாத், புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் வீ.ஜீ.யோகராஜா, தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் சுதத் தெவபத்திரன, முற்போக்கு மக்கள் சேவை கட்சியின் செயலாளர் இந்திக பெரேரா, தேசிய முன்னணி கட்சியின் செயலாளர் ரஞ்சித் பீரிஸ், ஐக்கிய ஜனநாயக மக்கள் கட்சியின் செயலாளர் கபுகெதர ரோஹித நவரத்ன, ஐக்கிய நாட்டு மக்கள் கட்சியின் செயலாளர் ருவான் திலக்க பேதுரு ஆராச்சி, தேசப்பற்றுள்ள முற்போக்கு மக்கள் முன்னணியின் செயலாளர் சிறிசேன ராஜபக்ஷ, இஸ்லாம் சோசலிச கட்சி எம்.எச்.ஏ.ஹஷன் மற்றும் ஜனநாயக மக்கள் காங்ரஸின் சார்பில் பிரபா கணேஷன் கையெழுத்திட்டனர்.