“பாரதி தேடல்­களில் ஈடு­பட்டு வரும் சீனி விஸ்­வ­நாதன் அவர்கள் தனது 85வது வயதில் ‘பிரிட்டிஷ் அரசின் பார்­வையில் பாரதி’ என்ற ஆவண பதிவு நூலை வெளிக் கொணர்ந்­துள்ளார். இதன் முதல் தொகுதி கடந்த வருடம் டிசம்­பரில் வெளி­வந்­தது. இனி வர­வி­ருக்கும் தொகுதி இவ்­வ­ருடம் டிசம்பர் அளவில் வெளி­வ­ர­வி­ருப்­ப­தாக தெரிய வரு­கின்­றது.

ஓர் 60 வரு­டமாய், சளைக்­காது பாரதி தேடல்­களில் ஈடு­பட்டு வரும் சீனி விஸ்­வ­நாதன் அவர்கள் ஏற்­க­னவே ‘கால­வ­ரி­சைப்­ப­டுத்­தப்­பட்ட பாரதி படைப்­புகள்’ என்ற வகையில் 12 பெரிய தொகு­தி­களைக் கொண்­டு­வந்தார் - (1998–2010). இதுபோக 2015இல் “கால­வ­ரி­சையில் கண்­ட­றிய வேண்­டிய பாரதி படைப்­புகள்”; என்ற ஒரு தொகு­தி­யையும் கொண்டு வந்தார். இதை அல்­லயன்ஸ் புத்­தக நிறு­வ­னத்­தினர் தமது 14ஆம் தொகு­தி­யாக வெளி­யிட்­டனர். ஆனால் தற்­போது கொண்­டு­வந்­துள்ள ஆவ­ண­ப­திப்பு நூல்கள் பார­தியின் பிறி­தொரு முகத்தை காட்டி நிற்­ப­தா­கவே படு­கின்­றது.

 காரணம் இது பார­தியின் உள்­ளக்­கி­டக்கையல்ல. மாறாக பாரதி பொறுத்து ஓர் பிரிட்டிஷ் உளவு யந்­தி­ரத்தின் உளவு அறிக்­கை­க­ளையும் கூற்­றுக்­க­ளையும் உள்­ள­டக்­கு­வ­தாக அமை­கின்­றது. இவ் உண்­மை­க­ளுக்­கூ­டாக, பார­தியின் பிறி­தொரு முகம் துலாம்­ப­ர­மாக தெரி­வ­தாக படு­கின்­றது. இவ் ஆவ­ண­ப்ப­திப்­பு­களின் முன்­னோ­டி­யாக முனைவர் கோ.கேச­வனை இனங்­கா­ணு­கின்றார் விஸ்­வ­நாதன். இவை வெறும் ஆவண தேடல்கள் என்­ப­தா­காது. அதையும் தாண்டி பிறி­தொரு பரி­மா­ணத்தை தொட முயற்­சிக்­கின்­றன எனலாம்.


விஸ்­வ­நா­தனின் தேடல்கள்

பார­தியின் சிறப்­புகள் என எம்மால் வரி­சைப்­ப­டுத்­தப்­படும் அணி­க­ளுக்­கூடு, நாம­றி­யாது, ஓர் எதிர்­மறை அம்­சமும் குடி­யே­று­வ­துண்டு.

மாபெரும் ஆளு­மை­களின் சித்­தி­ரங்­களை தீட்டும் ஓர் நிகழ்வு போக்கில் வந்­து­சே­ரக்­கூ­டிய ஓர் சோத­னையே இது.

அதா­வது, தனித்த ஓர் ஆளு­மையின் விவ­ரிப்­பிலே உள்­ள­டங்­கக்­கூ­டிய ஓர் நாடகத் தன்­மையின் விளை­வாக ஏற்­ப­டக்­கூ­டிய பின்­ன­டைவு இது என்றும் இதனை விவ­ரிக்­கலாம். மேலும் துலக்­கமாய் கூறு­வ­தானால், இத்­த­கைய பெரும் மனி­தர்­களில் உள்­ளடங்கக்­கூ­டிய அம­ரத்­தன்­மை­க­ளோடு ஓர் நாடகத் தன்­மையும் ஒன்றும் போது அது மொத்த ஆளு­மையின் சித்­த­ரிப்பை ஓர் தெய்­வீக உரு­வ­கத்தை நோக்கி அசைத்து செல்­வதாய் முன்­னேற்றம் அடை­கின்­றது.

இத்­த­கைய ஒரு நிலை­மையின் சாதக பாத­கங்கள் விவா­தத்­திற்­கு­ரிய பொரு­ளா­கலாம்.

இது­போ­லவே, இத்­த­கைய சித்­த­ரிப்­புகள், குறித்த ஆளு­மையை ஓர் நடை­முறை வாழ்­வி­லி­ருந்து பிய்த்­தெ­டுத்து அல்­லது பிரித்­தெ­டுத்து ஓர் தெய்­வீக அல்­லது இன்னும் குறிப்­பாக கூறு­வ­தானால் ஓர் அமா­னுஷ்ய நிலைக்கு உயர்த்­து­வ­தற்­கூடு  அச்­சித்­த­ரிப்­பையே ஓர் அந்­நிய தன்மை மிக்­க­தாக அல்­லது குறைந்­த­பட்சம் கரு­வி­லி­ருந்து திரு என்ற அடை­மொ­ழியை நோக்கி நகர்த்­து­வ­தாக அமைந்து விடு­கின்­றது. பாரதி பொருத்த சித்­த­ரிப்­புகள், பொதுவில் எமது சரா­சரி வாச­கர்­க­ளுக்கு கொண்­டு­வந்து சேர்த்­துள்ள சோத­னை­களில் இதுவும் ஒன்­றாகும்.

இப்­ப­டியாய் பார­திக்கு ஓர் தெய்­வீகத் தன்­மையை அளித்து அவரை ஓர் சட்­ட­கத்துள் வைத்து பூட்டும் ஆர்­வத்தின் பின்னால், அவர் மேல் கொண்­டுள்ள பிடிப்பும் மோகமும் கார­ணமாய் அமை­வது போலவே பல நிச்­ச­யித்த நலன்­களும் நின்று செயற்­படும் சாத்­தி­யங்­களும் உண்டு என்­பதும் மனங்­கொள்­ளத்­தக்­கதே.

உண்­மையில், கட்­டி­யெ­ழுப்­பப்­படும் இவ் அந்­நி­ய­த்தன்மை என்­பது பார­தியின் நடை­மு­றை­க­ளுக்கே ஒவ்­வா­தது மாத்­தி­ர­மல்ல மாறாக எதி­ரா­னதும் கூட. ஏனெனில் எளிய பதங்­க­ளையும் எளிய மெட்­டுக்­க­ளையும் தேடி அலைந்த மகா­கவி; அவன். அனைத்துப் புகழும் உந்­த­னுக்­கே–­பி­ரம்­ம­தேவன் கலை இங்கு நீரே என்று அறி­விக்கக் கூடிய நாக­ரிகம் படைத்­த­வ­னா­கவும் ‘என் கவிதை எங்­கெங்கு குறை­பாடு கொண்­டுள்­ளது – நான் எங்­கெங்கு, தவ­றி­யுள்ளேன் என்­பதை – நான் அறிவேன்’ என்று மொழிந்த ஒரு தாகூர், தன் நெஞ்­சார எதிர்­பார்த்துக்  காத்­துக்­கி­டந்த “பூமிப்­பு­ழு­தி­யி­லி­ருந்து” தோன்­றிய வர­க­வி­யா­கவும்; இருந்­தவன் இவன். இருந்தும், அவன் வாழ்­நிலைச் சித்­த­ரிப்பு என்­பது தவிர்க்க முடி­யா­த­வண்ணம், அவன் கழு­தையை கட்­டி­ய­ணைப்­ப­தி­லி­ருந்து அவ­னது சின்­னஞ்­சிறு குழந்­தை­யான கண்­ணம்­மாவில் கர்வம் கொள்­வது வரை­யிலும் மேலும் முஸ்­லிம் -­தலித் மக்­களை நெஞ்­சார  தழு­விக்­கொள்ளும் தோழமை ஈறாக பல பல அம்­சங்­களை உள்­ள­டக்­கவே செய்­தி­ருந்­தது.

இத்­த­கைய சித்­த­ரிப்­பு­க்களிலிருந்து, வேர்­கொண்டு கிளை பிரி­யக்­கூ­டிய மேற்­படி சில ஆர்­வங்கள் சில சம­யங்­களில் இன்னும் சில­வற்றை கூட்­டியும் குறைத்தும் வர்­ணிப்­ப­தற்­கூடு அவனைத் தொட்­டு­விட முடி­யாத ஒரு தொலை தூரத்­திற்கு அழைத்துச் சென்று அவனை ஒரு தெய்­வீகப் புள்­ளி­களில் இருத்தி நிறைவு காண்­பதும் உண்டு.

சுருக்­க­மாக சொன்னால் வாழ்க்­கை­யி­லி­ருந்து அகன்ற, ஓர் அந்­நியத் தன்­மையை அவனில் பொதிக்க இவை வழி செய்­கின்­றன. இத்­த­கைய ஓர் பின்­ன­ணி­யி­லேயே சீனி விஸ்­வ­நாதன் அவர்­களின் தேடல்கள் தமி­ழு­லகை வந்­த­டை­கின்­றன.

இத்­தே­டல்­களின் விளை­ப­யன்கள் பன்­முகம் படைத்­தவை.

பாரதி என்ற ஓர் பிர­மாண்டம் உரு­வெ­டுத்த வித்­தை­யி­னையும் அப்­பி­ர­மாண்­ட­மா­னது தன் வாழ்வுப் போக்கில் எப்­ப­டி­யொரு பிர­மாண்­ட­மான அரசின் கட்­டு­மா­னங்­க­ளையும் அது­போ­லவே அன்­றைய சமூ­கத்தின் பல்­வேறு சமூக கட்­டு­மா­னங்­க­ளையும் சேர்த்து அசைத்துப் பார்த்­தது என்­ப­தை­யெல்லாம் விஸ்­வ­நாதன் அவர்­களின் தேடல்கள் வெளிக்­கொ­ணர்­வதாய் உள்­ளது.

ஓர் மனி­த­னுக்கு அல்­லது ஓர் கவி­ஞ­னுக்கு அல்­லது ஒரு புரட்­சிக்­கா­ர­னுக்கு எதி­ராக எப்­படி எப்­ப­டி­யெல்லாம் ஓர் அரசும் அதன் நலன்­களும் செயற்­ப­டு­கின்­றன - அவற்றை எப்­படி எப்­ப­டி­யெல்லாம் இம்­ம­னிதன்- இக்­க­விஞன் எதிர்­கொண்­டான். -­இ­வற்­றை­யெல்லாம் தாண்டி எப்­படி எப்­படி இவன் தன் வாழ்வை நுரை­பொங்க சுழித்­தோடச் செய்தான் என்­ப­துவும் இத்­தே­டல்­களின் பெறு­பேறாய் அமை­யவே செய்­கின்­றது.

அரசு தனது மோப்­ப­வ­லையை விரிப்­ப­துவும் இவன் அவற்றைத் தாண்டி எதிர்­வி­னை­யாற்ற முற்­ப­டு­வதும் அறி­வு­பூர்­வ­மாக, பிரக்­ஞை­பூர்­வ­மாக நடந்­தேறும் செய்­கை­யாக இங்கே சான்­று­பூர்­வ­மாக நோக்­கப்­பட்டு படைத்­த­ளிக்கப் படு­கின்­றது.

இவற்­றை­யெல்லாம் தன் கடும் உழைப்பால் இரத்­தமும் சதை­யு­மாக எம் கண்­முன்னே கொணர்ந்து நிறுத்­தி­யுள்ளார் விஸ்­வ­நாதன். இது எளி­தான ஒரு காரியம் அல்ல. முது­கெ­லும்பை உடைத்துவிடக்­கூ­டிய உழைப்­பிது. விழிகள் சோர்ந்து தான­றி­யாது களைத்து கவிழ்ந்து வீழ்­கையில் இரு­கரம் கொண்டு விழி­பி­ரித்து ஊன்­றித்­தேடும் கடும் உழைப்பின் பாற்­பட்­டது இது. தேநீரை, உணவை மறக்கச் செய்யும் உழைப்பு இது.

விஸ்­வ­நாதன் அவர்­களின் இத்­தகு ஓர் உழைப்பே பார­தியை இப்­படி இரத்­தமும் சதை­யுமாய் தொட்­டுப்­பார்க்­கக்­கூ­டிய அள­வுக்கு படைத்­துக்­காட்­டு­வதில் வெற்றியீட்­டி­யுள்­ளது.

ஒரு சிறு உதா­ரணம்:

பாரதி, குறித்த ஒரு கால­கட்­டத்தில் (1908) சென்­னையை விட்டு நீங்கி புதுச்­சே­ரிக்கு அகல்­கிறார். பார­தியின் இந்­நி­கழ்வு குறித்து பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள் தமிழ் இலக்­கிய – விமர்­சன உலகில் உண்டு. பார­தியின் “தோற்ற மன நிலையை” இது பிர­தி­ப­லிக்­கின்­றது என்­போரும் பார­தியை இதற்காய் “தவறு” கண்­டு­பி­டிப்­போரும் நிறை­யவே உண்டு. 

அது போலவே பாரதி ஒரு பொது­ந­லனை முன்­னிட்டே சென்­னையை விட்டு அகன்றார் என மொழி­வோரும் உண்டு. ஒரு வழியில் பார்த்தால் இவை சான்­றில்லா சச்­ச­ர­வு­க­ளா­கவே திகழ்ந்­தன. (மறை­முகச் சான்றாய் பார­தியின் எழுத்தில் ஒளிர்ந்த வீச்சும் “ஒளியும் காணப்­பட்­டாலும்) இச்­சூ­ழ­லி­லேயே குறித்த சம்­பவம் தொடர்பில் பார­தியின், அக­லுதல் தொடர்பில் விபின சந்­தி­ர­பாலர் தொடர்­பி­லான கூற்­றையும் சிதம்­ப­ரத்­தாரின் கூற்­றையும் முன்­வைத்து பாரதி புது­வைக்கு அகன்ற சூழ்­நி­லை­களை சான்று பூர்­வ­மாக முன்­வைக்­கின்றார் விஸ்­வ­நாதன். தன் சைனியம் ஆயத்­த­மாகும் முன்­பாக எதி­ரிகள் சைனி­யத்தின் முன்­பாக போய் தலை­நீட்டிக் கொண்­டி­ருக்கும் சேனா­தி­ப­தியை புத்­தி­மா­னென்று சொல்­ல­லாமா? என்று 1908 இல் விபின சந்­தி­ர­பாலர் தொடர்­பாக பாரதி எழு­தி­யுள்­ளதை குறித்துக் காட்டி, பார­தியின் உளப்­பாங்கை அல்­லது சிந்­த­னைப்­பாங்கை வெளிக்­கொ­ணர்­கிறார் விஸ்­வ­நாதன். விடு­தலை போரா­ளிகள் என்போர் நடை­முறை -யதார்த்­த-­கள நிலை­மை­களை கருத்­திற்­கொண்டு எத்­த­னையோ சந்­தர்ப்­பங்­களில் மறை­விடம் நாடுதல் என்­பது, 

ஒரு போராட்ட வாழ்வில் எப்­படி சக­ஜமோ அதே போன்று இம்­மியும் பிச­காது பார­தியும் குறித்த காலப்­ப­கு­தியின் கள நில­வ­ரங்­க­ளுக்­கேற்ப செய்தான் என்­ப­தற்­கான சான்­றா­தா­ரங்­களை தரு­வ­தற்­கூடு, பார­தியை இன்னும் சற்று நெருக்­கத்தில் எம்­மிடம் கொணர்ந்து சேர்க்­கின்றார் விஸ்­வ­நா­தன்-­இந்த தன் தேடல்கள் மூலம்.

இவை­ய­னைத்­தையும் ஒன்­று­கூட்டி பார்க்­கு­மி­டத்து, பாரதி என்ற ஒரு மனிதன் (அல்­லது ஒரு கவிஞன்) தாகூர் எதிர்ப்­பார்த்­தி­ருந்த குறித்த “பூமிப்­பு­ழு­தி­யோடு” எவ்­வ­ளவு தூரம் பிணிக்­கப்­பட்­ட­வ­னா­யி­ருந்தான் என்­பது வெளிப்­ப­டு­வ­தாக அமை­கி­றது. அதா­வது பார­தியை ஒரு சட்­ட­கத்­துக்குள் பூட்டி வைத்து அவ­னுக்கு ஒரு தெய்­வீகத் தன்­மையை தந்து “அழகு” பார்ப்­பதில் இருந்து அவனை மீட்­டெ­டுத்து தாகூர் எதிர்ப்­பார்த்த ஒரு வர­க­வி­யாக அவனை உயிர்த்­தெழ செய்­வதில் இத்­தே­டல்கள் பெரும்­பங்­காற்­று­கின்­றன, என கூற துணி­யலாம்.

இவை இத்­தே­டல்­களின் ஒரு­பக்கம். மறு­பு­றமாய் பார்த்தால் பார­தியின் புல­மை­யு­லகை வரை­யறை செய்­யவும் அப்­பு­ல­மை­யு­ல­கா­னது ஒரு தமிழ்ப் புல­மை­யு­லகை எப்­படி எப்­படி எவ்வெவ் வழி­க­ளி­லெல்லாம் பாதிப்­புறச் செய்­தது என்­ப­த­னையும் அது தொடர்­பி­லான விட­யங்­களை பிரக்­ஞை­பூர்­வ­மாக தொட்டு உண­ரவும் இத்­தே­டல்கள் வழி­செய்­துள்­ளன என்றும் துணி­யலாம்.

இது தொடர்பில் பார­தியை பெரிதும் விதந்­தி­ருக்­க­கூ­டிய ஒரு கைலா­ச­ப­தியின் இறு­திக்­கா­லத்து கூற்­றுக்­களில் ஒன்­றான பின்­வரும் கூற்றை நினை­வு­ப­டுத்தல் விரும்­பத்­தக்­கது:

“பார­தியின் சிறந்த பாடல்­களில் ஒன்று “தமிழ்­சாதி” என்­ற­பாடல். துர­திர்ஸ்­ட­வ­ச­மாக அந்­தப்­பாடல் முற்­றுப்­பெ­ற­வில்லை” ( நாவலர் பற்றி கைலா­ச­ப­தி-­பக்கம் 111)

இக்­கூற்றில் இரண்டு விட­யங்கள் முன்­நிலை படுத்­தப்­ப­டு­கின்­றன.

ஒன்று, பார­தியின் புல­மை­யு­லகை எடை­போட்டு வரை­ய­றுக்க முனையும் கைலா­ச­ப­தியின் அவா இங்கே உள்­ள­டங்­கு­கின்­றது. மற்­றது அவ­ரது ஆய்­வுச்­சிந்தை திருப்­தி­யுற்­றி­ருக்­கக்­கூ­டிய அளவில் மூலப்­பொ­ருட்­களின் கிட்­டாமை குறித்த ஏக்­கமும் இவ் வரி­களில் தொணிக்­கி­றது எனலாம்.

இத்தகைய ஓர் பின்னணியிலேயே விஸ்வநாதன் அவர்களின் உழைப்பின் விளைபயன் ஓர் குறிக்கத்தக்க பரிணாமத்தை பாரதி பொறுத்த ஆய்வுலகில் எட்டித்தொடுவதை நாம் காணலாம்.

இன்று திரு.விஸ்வநாதன் அவர்கள் சாதித்துதந்துள்ள எண்ணற்ற தேடல்களின் பெருந்தொகுப்புகளை - பெறுபேறுகளை, கவனித்து நோக்குமிடத்து கைலாசபதி போன்றோரின் இல்லாமை ஓர் பெருந்துயi ஏற்படுத்துவதாய் உள்ளது என்பது உண்மை.

காரணம், ஓர் உயரிய ஆய்வுக்காய் தேவையுறும் அரிய, ஆழமான மூலப்பொருட்களையெல்லாம் தன்கடும் உழைப்பால் தேடிதந்த ஓர் விஸ்வநாதனின் நிகழ்வு, கைலாசபதியின் காலத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என்பது துயரே.

ஆனால் இனிவரும் எத்தனையோ தலைமுறைகள் திரு.விஸ்வநாதன் அவர்கள் இன்று திரட்டிதந்துள்ள இத்தேடல்களின் குவியல்களை தத்தமது மூலப்பொருள்களாகக் கொண்டு தமிழ் சிந்தனைமரபையே வேறு ஒரு தளத்திற்கு நகர்த்தி செல்லக்கூடிய சாத்தியங்களையும் தம்வசம் கொள்வர், என்ற உண்மையில் நாம் ஒரு வகையில் அமைதி கொள்ளலாம்.

இத்தகைய ஓர் தீர்க்கமான பின்னணியிலேயே திரு.விஸ்வநாதன் அவர்களின் பெரும் பங்களிப்பை இன்று நாம் நிதானமாக, மிகக் கவனமாக எம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.