மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம் குளவி கொட்டுக்கு இலக்காவதினால் அவர்கள் தோட்டங்களில் மிகுந்த கஸ்டங்களுக்கு மத்தியில் பணிபுரிய வேண்டியுள்ளதாக பெருந்தோட்ட தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்டங்களில் பணிபுரியும் போது கடந்த 10 மாதங்களில் பாரிய அளவில் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளதாகவும் அதில் பலர் மரணித்துள்ளனர் எனவும் இதனால் பீதியடைந்துள்ளனர் என தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் முதியவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், யுவதிகள், ஆண்கள், பாலூட்டும் தாய்மார்கள் அடிக்கடி குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவது தற்போது அதிகமாகியுள்ளன.

மலையக பகுதிகளில் குறிப்பாக டயகம, லிந்துல, நுவரெலியா, நானுஒயா,தலவாக்கலை, பூண்டுலோயா, ராகல,ஹங்குரங்கத்தை, பொகவந்தலாவ, கொட்டகலை, பத்தனை, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், மஸ்கெலியா,  சாமிமலை, நோட்டன், கினிகத்தேன, நாவலபிட்டிய மற்றும் மாத்தளை, கண்டி பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள் இவ்வாறான குளவி கொட்டுக்கு இலக்காகி நாளாந்தம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இதற்கு அரசாங்கமும்,தோட்ட கம்பனிகளும் முன்வந்து தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதுடன் குளவி கொட்டுக்கு இலக்காகி மரணித்தவர்களுக்கு நஷ்டஈட்டையும் குளவி கொட்டுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களுக்கான நாளாந்த வேதனத்தையும் வழங்க முன்வருமாறு தொழிற்சங்கவாதிகள் கோரிக்கை விடுகின்றனர்.