காற்று மாசுக்கு மத்தியில் இந்திய, பங்களாதேஷ் அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று இருபதுக்கு - 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

சுற்றுப் பயணத்தில் முதலாவதாக இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்திய அணியில், அணித் தலைவர் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா அணியை வழிநடத்துகிறார். 

இதேவேளை பங்களாதேஷ் அணி முன்னணி வீரர்கள் இல்லாமல் தவிக்கிறது. சூதாட்ட தரகர் அணுகியதை மறைத்த குற்றத்துக்காக அணித் தலைவரம்‘நம்பர் ஒன்’ சகலதுறை ஆட்டக்காருமான சகிப் அல்ஹசனுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தொடக்க அதிரடி ஆட்டக்காரர் தமிம் இக்பால் தனிப்பட்ட காரணத்துக்காக இந்திய பயணத்தில் இருந்து ஏற்கனவே ஒதுங்கி விட்டார். மூத்த வீரர் மோர்தசா ஓய்வு பெற்று விட்டார்.

பங்களாதேஷ் அணித் தலைவர் மக்முதுல்லா, சவுமியா சர்கார், விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹிம், லிட்டான் தாஸ், வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் ஆகியோரைத் தான் மலைபோல் நம்பியுள்ளது. இவர்கள் சோபிக்காவிட்டால் பங்களாதேஷ் அணி நிலைமை மோசமாகிவடும்.

இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு 20 ஓவர் கிரிக்கெட்டில் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இவை அனைத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றிருக்கின்றது. இதனால் வரலாறு படைக்கும் முனைப்புடன் பங்களாதேஷ் அணி வீரர்கள் வியூகங்கள் வகுத்துள்ளனர்.

டெல்லியில் காற்றின் மாசு அபாயகரமான அளவை தாண்டியுள்ளமையினால் எங்கு, பார்த்தாலும் புகைமூட்டமாகவே காட்சி அளிக்கிறது. பங்களாதேஷ் அணியில் பெரும்பாலான வீரர்கள் சுவாச கவசம் அணிந்தபடி பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

இன்றைய ஆட்டத்தில், களத்தடுப்பின்போதும் இத்தகைய கவசம் அணிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதனிடையே சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டி 2005 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. இன்றைய இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையிலான மோதல், 1000 ஆவது சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

India squad: Rohit Sharma(c), Shikhar Dhawan, KL Rahul, Sanju Samson, Shreyas Iyer, Manish Pandey, Rishabh Pant(wk), Washington Sundar, Krunal Pandya, Yuzvendra Chahal, Rahul Chahar, Deepak Chahar, Khaleel Ahmed, Shivam Dube, Shardul Thakur

Bangladesh squad: Soumya Sarkar, Mohammad Naim, Mahmudullah (c), Afif Hossain, Mosaddek Hossain, Animul Islam, Liton Das, Mushfiqur Rahim, Arafat Sunny, Al-Amin Hossain, Mustafizur Rahman, Shaiful Islam, Abu Haider Rony, Mohammad Mithun, Taijul Islam.