ஜனாதிபதி தெரிவில் தமிழர்களுக்கு  ஏற்பட்டுள்ள குழப்பம் ; பேராசிரியர் உயன்கொட

Published By: Digital Desk 4

03 Nov, 2019 | 12:23 PM
image

 தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் தமிழ் மக்களுக்கு மட்டும் தான் முக்கியமானதாக இருக்கின்றதே தவிர சிங்கள தேசிய பரப்பினுள் அதற்கான இடமில்லாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு தேசிய இனப்பிரச்சினை உட்பட தமிழர்களுக்கு தீர்வுவளிக்கப்பட வேண்டிய பல விடயங்கள் தேர்தலின் பிரதான பரப்பிலிருந்து நீங்கியுள்ள நிலையில் தான் தமிழர்கள் சஜித் அல்லது கோத்தா ஆகிய பிரதான வேட்பாளர்களிலிருந்து ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய சவால் ஏற்பட்டுள்ளதால் குழப்பத்துக்குள்ளாகியுள்னர் என்று பேராசிரியர் ஜயதேவ உயன்கொட வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, 

கேள்வி:- ஆரம்ப காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து செயலாற்றியிருந்த நீங்கள் தற்போது அரசறிவியல்துறையில் பேராசிரியராக பரிணமித்துள்ள நிலையில் தங்களை லிபரல் ஜனநாயகவாதியாக கொள்ள முடியுமா?

பதில்:- லிபரல் ஜனநாயக சோஷலிசவாதி என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும். காரணம், ஜனநாயகத்தில் இருக்கின்ற குறைபாடான  பொருளாதார சமத்துவமின்மையை சோஷலிசமே நிவர்த்தி செய்கின்றது. ஆகவே தான் லிபரல் ஜனநாயக சோஷலிசவாதி என்று கொள்வதை அதிகம் விரும்புபவனாக இருக்கின்றேன்.

கேள்வி:- நெருங்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கும் இடையில் எவ்வாறான வேறுபாட்டினை காண்கின்றீர்கள்? 

பதில்:- அனைத்து தேர்தல்களிலும் இவ்வாறானதொரு கேள்வியே எம்முன் ஏற்படுவது வழமையான விடயமாக இருக்கின்றது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதிருந்த பிரச்சினைகள் தற்போது உக்கிரமடைந்து விட்டன. இலங்கை அரசியலின் தலையெழுத்தானது நலிவடைந்த ஜனநாயக முறைமையிலா அல்லது சர்வாதிகார முறைமை என்று அறியப்படும் ஜனநாயகத்திற்கு நேர்மறையான முறைமையிலா தீர்மானிக்கப்படவுள்ளது என்பது தான் பிரச்சினையாகவுள்ளது. அத்துடன், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக மாற்றத்தினை முன்வைத்த அணியானது ஒன்றுபட்டிருந்தது. ஆனால் இம்முறை அந்த அணிகள் பிரிவடைந்தே இருக்கின்றன. 

கேள்வி:- பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ, கோத்தாபய ராஜபக்ஷ இடையில் எத்தகைய கொள்கை ரீதியிலான வேறுபாட்டினை காண்கின்றீர்கள்? 

பதில்:- பிரதான வேட்பாளர்களாக சஜித் பிரேமதாஸவும் கோத்தாபய ராஜபக்ஷவும் இருக்கின்றார்கள். அதற்கு அடுத்ததாக அநுரகுமார திஸாநாயக்கவும், மகேஷ் சேனாநாயக்கவும் இருக்கின்றார்கள். கோத்தாபயவைப் பொறுத்தவரையில் அவர் ஜனநாயக மாற்றத்தை முன்மொழியவில்லை. கடுமையான அதிகாரப்போக்கும், பெரும்பான்மை சிங்கள தேசியவாத அரசியலையே முன்மொழிகின்றார்.

சஜித்தைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்திவந்த தாராளவாத பொருளாதார சிந்தனையிலிருந்து வேறுபட்டதொரு முன்மொழிவையே செய்கின்றார். அதாவது, தாராளவாத பொருளாதார பொறிமுறை மற்றும் அரச நலன்புரி கொள்கைகள் இணைந்ததான பொருளாதார சிந்தனையையே முன்மொழிகின்றார். 

மேலும் சஜித் பிரேமதாஸ ஜனநாயகத்திற்கு எதிரானவர் அல்லர். ஆனால் அவருடைய தரப்பில் வலுவான ஜனநாயகம் காணப்படவில்லை. நலிவடைந்த ஜனநாயகமே காணப்படுகின்றது. கோத்தாபய ராஜபக்ஷ பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பில் ஜனநாயகம் சம்பந்தமான நம்பிக்கையைக் கொண்டவர்கள் இல்லை. அவர்களுக்கு ஜனநாயகத்துடன் கோபமே உள்ளது. இவை தான் பிரதான வேட்பாளர்களிடையே காணப்படும் பிரதான வேறுபாடுகளாகின்றன.

அந்த வகையில் நாட்டின் பிரஜைகளில் கோத்தாவின் நிலைப்பாட்டினையும் சஜித்தின் நிலைப்பாடுகளையும் ஆதரிக்கும் பெரும் எண்ணிக்கையானவர்கள் பரஸ்பரம் இருக்கின்றனர். எவ்வாறாயினும் பிரஜைகள் விரும்பியோ விரும்பாமலோ இந்த இரண்டு தெரிவுகள் தான் முன்னுள்ளன. இதுதான் பிரஜைகள் முன்னுள்ள சவாலாக இருக்கின்றன. 

கேள்வி:- உள்நாட்டு போர் நிறைவுக்கு வந்த நிலையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:-இந்;நிலையில் பிரதான வேட்பாளர்களிடையே வேறுபாடுகள் இல்லாமலில்லை. தேசிய பாதுகாப்பு விடயத்தில், கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் படைகள், பொலிஸ் பிரிவுகள் உள்ளிட்ட அரசின் ஒடுக்குமுறை ஆற்றலை மேம்படுத்துவது ஊடாக தேசிய பாதுகாப்பினை வலுப்படுத்த முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார். 

சஜித் பிரேமதாஸவைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு நாட்டில் துன்பப்படும் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்க வேண்டும் என்று கருதுகின்றார். பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அரசு சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியாதவொரு சூழலுக்குள் தள்ளப்படும் ஆபத்திருப்பதால் அவ்விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கருதுகின்றார். இவை இருவரிடத்திலும் உள்ள அடிப்படை வேறுபாடுகளாக உள்ளன. 

கேள்வி:- இம்முறை ஜனாதிபதித் தேர்தல் அரங்கிலிருந்து தேசிய இனப்பிரச்சினை என்ற விடயம் நீக்கம்பெற்று தென்னிலங்கையில் வாக்குகளைப் பெறுவதற்காக இனவாதம் உக்கிரமடைந்துள்ளமையை உணர்கின்றீர்களா?

பதில்:- ஆம், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தில் தேசிய இனப்பிரச்சினை விடயம் பிரதான தொனிப்பொருளாக இடம்பெற்றிருந்தது. நீங்கள் குறிப்பிட்டது இம்முறை தேசிய இனப்பிரச்சினை பிரதான பேசுபொருளிலிருந்து நீங்கியுள்ளது. ஆகக்குறைந்தது ஜே.வி.பி கூட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினாலும் அதிகாரப்பகிர்வு சம்பந்தமான விடயத்தினை பரிந்துரைக்கவே இல்லை. 

நாட்டில் அடிப்படை சிங்களவாத சிந்தையானது குறைந்தளவிலேயே காணப்பட்டது. எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அச்சிந்தனையானது மிகவும் வலுவடைந்து உக்கிரமடைந்து விட்டது. குறிப்பாக, சிங்கள மக்கள் மத்தியில்  அடிப்படைவாத சிந்தனை மிகக் கூடுதலாக ஏற்பட்டு விட்டது. இதனால் சிறுபான்மை சமூகங்களின் சமத்துவ உரிமைக் கோரிக்கைகள் கருத்திற்கொள்ளப்படாத நிலை உருவாகியுள்ளது.

தென்னிலங்கையில் இவ்வாறான நிலைமையிருக்கையில், கடந்த மாத நடுப்பகுதியில் ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. அதில் புதிய விடயங்கள் ஒன்றுமில்லை. கடந்த காலங்களில் தமிழர் தரப்பு முன்வைத்த விடயங்களே உள்ளன. இதன்மூலம் சிங்கள, தமிழ் அரசியல் தரப்புக்களிடையே இருந்த கருத்தாடல் முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளமை தெளிவாகியுள்ளது.  

அதுமட்டுமன்றி தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் தமிழ் மக்களுக்கு மட்டும் தான் முக்கியமானதாக இருக்கின்றதே தவிர சிங்கள தேசிய பரப்பினுள் அதற்கான இடமில்லாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சிங்கள தேசிய பரப்பில் ஒருசில தலைவர்களே அவ்விடயம் சம்பந்தமான கரிசனை கொண்டவர்களாகவும் இருக்கின்றமை துரதிர்ஷ்டவசமானதாகும். 

கேள்வி:- இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பின் வகிபாகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்? 

பதில்:-2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோது நீண்டகாலமாக இருக்கும் தமது பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இருந்தது. இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்திருந்த நிலையில் தமது பிரச்சினைகளை முன்வைத்து தீர்வுகளை பெறுவது இலகுவானது என்றே கருதப்பட்டது. குறிப்பாக, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிலைமாறுகால நீதிப்பொறிமுறை, ஜெனீவா தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தல், பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் நடைமுறை சாத்தியமாகும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஒருசில சிறிய விடயங்களை தவிர முன்னேற்றகரமாக எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. 

அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நட்பு சக்தியான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், தேசிய பிரச்சினை தொடர்பில் முற்போக்காக சிந்திக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் தலைமைப்பொறுப்பிலும், பிரதமராகவும் இருந்தபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் கிடைத்திருக்கவில்லை. இவ்வாறான நிலையில் தற்போதைய வேட்பாளர்களிடத்திலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சஜித் பிரேமதாஸ மென்போக்கினை கடைப்பிடித்தாலும் அவரால் தீர்வு வழங்கமுடியுமா என்பது கேள்விக்குள்ளாகின்ற விடயமாகவே உள்ளது. 

இவ்வாறு, தேசிய இனப்பிரச்சினை உட்பட தீர்வளிக்கப்பட வேண்டிய விடயங்கள் தேர்தலின் பிரதான பரப்பிலிருந்து நீங்கியுள்ள நிலையில் தான் தமிழர்கள் பிரதான வேட்பாளர்களிலிருந்து ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். 

கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் தமிழ் அரசியல் தரப்புக்கள் மாறுபட்ட தீர்மானங்களைக் கொண்டிருக்கின்ற நிலையில் குழப்பமடைந்திருக்கும் தமிழ் மக்களுக்கு என்ன கூறுவீர்கள்?

பதில்:- உங்களின் வினாவுக்கு தீர்க்கமான பதிலொன்றை என்னால் கூறமுடியாது விட்டாலும், இந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் அல்லது கோத்தாபய ஆகிய இருவரில் ஒருவரே வெற்றிபெறப்போகிறவராக இருக்கின்றார். இதில் யாரைத் தெரிவு செய்வது என்பது தான் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து பிரஜைகளின் முன்னாள் உள்ள சவாலாக இருக்கின்றது. விசேடமாக தமிழ் மக்கள் யாருடைய ஆட்சியில் வாழ விரும்புகின்றார்கள் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டிய இக்கட்டுக்குள் இருக்கின்றார்கள். 

கேள்வி:- தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்பதை விடவும் கலந்துரையாடலுக்கு கூட தயாரில்லாத வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா என்றொருவாதம் முன்வைக்கப்படுகின்றதே? 

பதில்:- 2005ஆம் ஆண்டு வடக்கில் தேர்தல் பகிஷ்கரிப்பு இடம்பெற்றது. இதனால் தான் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்திருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றால் அவரை இலகுவாக கையாளமுடியும் என்று கருதினார்கள். ஆனால் முடிவு வேறுவிதமாக அமைந்திருந்தது. ஆகவே ராஜபக்ஷவினரை ஆட்சிக்கு கொண்டுவந்தமையால் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு முன் அனுபவம் உள்ளது. ஆகவே அவர்கள் அதனை மறந்திருக்க மாட்டார்கள் என்று நான் கருதுகின்றேன். மேலும் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக ஆகக்குறைந்தது சுயாதீனமாக சிந்தித்து செயற்படுவதற்காகவாவது அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். 

கேள்வி:- அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் 2015ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியாளர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுத்து செயற்பட்டமையானது தற்போது பேரம்பேசும் சக்தியை மலினப்படுத்தியிருக்கின்றது எனக் கொள்ள முடியுமா? 

பதில்:- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேரம்பேசல் அணுகுமுறை வெற்றியடையவில்லை. 

தமிழ்த் தரப்பில் உள்ள கடும்போக்காளர்களை விடவும் கூட்டமைப்பு மாறுபட்ட குணாம்சங்களைக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக தென்னிலங்கையின் பிரதான அரசியல் சக்திகளுடன் நட்புறவைக் கொண்டிருக்க வேண்டும் என்ற மனநிலை கூட்டமைப்புக்கு உள்ளது. அதே மனநிலை தான் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுக்கும் உள்ளது. ஆனால் அவர்கள் நட்புக்கொண்டிருக்கும் தரப்புக்கள் தான் வேறுபட்டவையாக இருக்கின்றன. இது தவறான விடயமொன்று அல்ல. அதேபோன்று பல்லின நாட்டில் பெரும்பான்மை தரப்புக்களை நிராகரித்து சிறுபான்மை அரசியல் சக்திகளுக்கு தனியாக செயற்பட முடியாது. கூட்டமைப்பும் சரி, டக்ளஸ் போன்றவர்களின் தரப்பும் சரி தாம் நட்புக்கொண்டுள்ள பெரும்பான்மை தரப்புக்களிடமிருந்து தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் முழுவதும் கிடைக்கப்போவதில்லை என்ற யதார்த்தத்தினை உணர்ந்து கொண்டுள்ளார்கள்.  இதில் கூட்டமைப்பு தமது நட்பு சக்தி ஊடாக தமிழ் மக்களுக்கு சில விடயங்களில் முன்னேற்றத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. குறைந்தது, சோதனைச்சாவடிகள் இன்றி வடக்கிற்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. 

அவ்வாறிருக்க, தற்போதைய சூழலில் கடும்போக்கு தமிழ் தேசிய அரசியல் தரப்புக்கள் சக்திபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு தென்னிலங்கையில் நட்புறவுகொள்வதற்கு மாற்று சக்திகள் இல்லாத சூழலே உள்ளது. அதுமட்டுமன்றி கடும்போக்கு நிலைப்பாட்டில் போராட்டங்களை முன்னெடுக்கவோ மக்களை அணிதிரட்டவோ முடியாத நிலையே உள்ளது. ஆகவே கடும்போக்கு தமிழ்த் தரப்புக்களால் தற்போது தமிழ் மக்களுக்கு காணப்படும் உரிமைகளையே பாதுகாக்க முடியாத நிலைமை உள்ளது. மேலும் வடக்கு மக்கள் கடும்போக்கு அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் மனநிலையில் உள்ளார்களா என்பதும் முக்கிய விடயமாகின்றது. அத்துடன் முஸ்லிம் கட்சிகள் கூட தென்னிலங்கை அரசியல் தரப்புக்களுடன் கூட்டணி அமைத்தே செயற்படுகின்றன. முழுமையான நலன்களை அடைய முடியாது விட்டாலும் பகுதியளவிலாவது நலன்களை எட்ட முடியும் என்று கருதுகின்றார்கள்.

கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் தரப்பினை தொடர்ந்தும் புறந்தள்ளிச் செல்ல முடியுமா?

பதில்:- பிரதான வேட்பாளர்களைப் பொறுத்தவரையில் வடக்கினை விடவும் ஏனைய பகுதியில் உள்ள முதல் தடவையாக வாக்குரிமை பெற்றுள்ளவர்கள் அதிகமாக உள்ளார்கள். அவர்களின் ஆதரவினைப் பெறுவதன் ஊடாக வெற்றியை தக்க வைக்க முடியும் என்று கருதுகின்றார்கள். ஆனால் அவர்களால் தமிழ் தரப்பினை புறந்தள்ள முடியாது. அரசியல் கட்சிகளுடன் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருந்தாலும் நிச்சயமாக தமிழர் தரப்புகளுடன் கலந்துரையாடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும் இம்முறை கூட்டமைப்பு 2015 போன்று பூரண ஆதரவை வேட்பாளருக்கு வழங்குவார்களா என்பதையும் அப்பிரதேச மக்களின் வாக்களிப்பு வீதம் கணிசமாக இருக்குமா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. 

கேள்வி:- தமிழ் தரப்பு தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சர்வதேசத்தின் தலையீட்டினை கோருகின்ற நிலையில் அதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றனவா?

பதில்:- தமிழர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் போக்கு உலக நாடுகளிடையில் இல்லை. பிரச்சினைகள் தீர்க்கப்படாது காலம் நீடித்துக்கொண்டு செல்லப்பட்டமையால் தான் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. தற்போது உலகநாடுகளின் ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்கள். அந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அத்துடன் ஐஸ் பயங்கரவாதம் சம்பந்தமாகவே சிந்திக்கின்றார்கள். மேலும் உலகநாடுகள் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான கரிசனைகள் குறைந்துள்ளன. சிறுபான்மையினர் தமது ஆட்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளார் என்றே உலகநாடுகளில் கருதுகின்றன. பல்லின கலாசாரத்தினை மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்வதிலிருந்து விலகியுள்ளன. தற்போது சிறுபான்மையினம், தனிநபர் உரிமைகளை விடவும் தேசிய பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் அளிக்கும் நிலைமைகள் தோற்றம் பெற்றுள்ளன. 

கேள்வி:- தமிழர் அரசியலில் செல்வாக்கு செலுத்திய அயல்நாடான இந்தியாவுடன் உரிய அணுகுமுறைகளை தமிழ் அரசியல் தரப்புக்கள் மேற்கொண்டிருந்தால் முன்னேற்றங்களைக் கண்டிருக்க முடியும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- தமிழர்களின் உரிமைகளை மையமாக வைத்து இந்தியா செயற்படவில்லை. அமெரிக்கா, சீனா ஆகியவற்றுடன் காணப்பட்ட பூகோள அரசியல் போட்டியை மையப்படுத்தியே இந்தியா செயற்படுகின்றது. குறிப்பாக பிரதமர் மோடி அரசாங்கம் சிறுபான்மை உரிமைகள் தொடர்பில் புரிந்துணர்வைக் கொண்டதொன்றல்ல. அந்த அரசாங்கம் அரச பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கின்றது. அதேநேரம் இலங்கை தமிழர்கள் விடயத்தினை கையாள்வதற்கு ராஜபக்ஷ தரப்பினை சார்ந்த நிலைப்பாட்டினை மோடி அரசு இதுவரையில் எடுக்கவில்லை. 

கேள்வி:- மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல், ஜெனீவா தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை போன்ற விடயங்கள் எதிர்காலத் தலைவர்களால் கருத்திலெடுத்து கையாளப்படும் எனக்கருதுகின்றீர்களா? 

பதில்:- சிங்கள அரசியல் சூழமைவுகள் மாற்றம் கண்டுள்ள நிலையில் எவர் ஆட்சியின் தலைமையினை ஏற்றாலும் இந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நான் கருதவில்லை. 2015ஆம் ஆண்டு ஜெனீவாவில்  இணை அனுசரணையை இலங்கை அரசாங்கம் வழங்கினாலும் அதனை செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்கவில்லை. இவ்வாறான விடயங்களை முன்னெடுப்பதென்றால் சிங்கள தேசிய அரசியல் தரப்புக்களிடையே ஒற்றுமையும், தமது மக்களை மனதளவில் தயார்படுத்தும் மனநிலையும் அவசியமாகின்றது. அந்த வகையான தயார் நிலையில் சிங்கள் தேசிய அரசியல் தரப்புக்கள் இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Factum கண்ணோட்டம்: ரைசியின் மரணத்தின் மூலம்...

2024-06-12 18:03:09
news-image

இலங்கை ஒருகாலத்தில் செய்தது போல இஸ்ரேல்...

2024-06-12 10:58:31
news-image

தேர்தல் நிச்சயமற்ற தன்மையே பொருளாதார மீட்சியை...

2024-06-11 15:21:50
news-image

தமிழ் பொது வேட்பாளர் குறித்த கரிசனைகளை...

2024-06-10 18:29:19
news-image

தமிழ் பொது வேட்பாளரால் தமிழ் கட்சிகளுக்குள்...

2024-06-10 18:24:08
news-image

அரசாங்கத்தின் மறைமுக எச்சரிக்கையை உணரவில்லையா கம்பனிகள்?...

2024-06-10 17:59:48
news-image

இடம்பெயர்ந்து வரும் பாலஸ்தீனியர்கள் போல வந்து...

2024-06-10 16:19:25
news-image

இரத்தினபுரி மாவட்ட தமிழர் அரசியல்…! :  ...

2024-06-10 10:50:01
news-image

ஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

2024-06-10 10:38:40
news-image

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த தமிழ்...

2024-06-10 10:27:47
news-image

வெளியிடப்படாத நவாஸ் ஆணைக்குழு அறிக்கை ஏற்புடைய...

2024-06-09 17:31:23
news-image

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் தகவல்களைப் பகிர்வதற்கான...

2024-06-09 19:16:51