‘சண்டக்கோழி 2’ படத்தை தொடர்ந்து ராகவா லோரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்குகிறார்.

விஷால், வரலட்சுமி சரத்குமார், கீர்த்திசுரேஷ் ஆகியோர் நடித்த ‘சண்டக்கோழி 2’ என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் லிங்குசாமி, தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். ‘காஞ்சனா 3’ என்ற வெற்றிப்படத்தில் நடித்த நாயகனான ராகவா லோரன்ஸ் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

கடந்த ஆண்டு ராம் சரண், சமந்தா நடிப்பில் தயாராகி தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘ரங்கஸ்தலம்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும், இயக்குனருமான ராகவா லோரன்ஸ் வாங்கியிருக்கிறார். அதில் அவர் கதையின் நாயகனாக நடிக்க, இப்படத்தை இயக்கும் வாய்ப்பு லிங்குசாமிக்கு கிடைத்திருக்கிறது.

ரீமேக் படத்தை இயக்கும் வாய்ப்பு என்றாலும், இயக்குநர் லிங்குசாமி, ராகவா லோரன்ஸின் மீதுள்ள அன்பால் அப்படத்தை இயக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். ராகவா லோரன்ஸ் தற்போது ‘காஞ்சனா 2’ என்ற படத்தை ஹிந்தியில் இயக்கி வருகிறார் என்பதும், சன் பிக்சர்ஸ் சார்பில் ‘காஞ்சனா 4’ என்ற படத்தை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.