(நெவில் அன்தனி)

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவலை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ். ஜயசுந்தர இன்று தனது இரண்டாவது புதிய சாதனையை நிலைநாட்டி பலத்த பாராட்டுதல்களைப் பெற்றார்.

35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசியும் பிரதானமானதுமான மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய தினம் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் இறுதி ஓட்டப் போட்டியில் குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவலை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ். ஜயசுந்தர  22.16 செக்கன்களில் ஓடி முடித்து தனது இரண்டாவது புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார்.

இவர் இன்று காலை நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் நிலைநாட்டிய 22.38 செக்கன்கள் என்ற சாதனையையே இறுதிப் போட்டியில் புதுப்பித்தார்.

இவர் போட்டியின் முதலாம் நாளன்று ஆண்களுக்கான 400 மீற்றர் அரை இறுதி ஓட்டப் போட்டியை 48.73 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய சாதனை நிலைநாடடியிருந்தார்.

இன்றைய மூன்றாம் நாள போட்டிகள் நிறைவில் மொத்தமாக 28 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன.

முதாலம் நாளன்று 4 புதிய சாதனைகளும் இரண்டாம் நாளன்று 11 புதிய சாதனைகளும் இன்றைய தினம் 13 புதிய சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன. அத்துடன் ஒரு சாதனை சமப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் சார்பாக 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் பங்குபற்றிய மட்டக்களப்பு அன் நூர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஏ. ஆர். ஏ. அய்மன் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கின் 200 மீற்றர் பயிற்சி அரங்கப் பகுதியில் இன்று காலை நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதலில் 15.03 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து ஏ. ஆர். ஏ. அய்மன் புதிய சாதனை நிலைநாட்டினார்.

மருதானை புனித சூசையப்பர் கல்லூரி சார்பாக 2017இல் நவீன் விஸ்வஜித்தினால் நிலைநாட்டப்பட்ட 13.55 மீற்றர் என்ற தூரத்தைக் கொண்ட சாதனையைவிட 1.48 மீற்றர் தூரம் அதிகமாக வீசியே ஏ.ஆர்.ஏ. அய்மன் புதிய சாதனையை ஏற்படுத்தினார்.

கிழக்கு மாகாணம் சார்பாக ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய கிண்ணியா மத்திய கல்லூரியைச் சேர்ந்த எச். எம் ரிஹான் 58.86 மீற்றர் தூரம் எறிநி;த வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இன்று நிலைநாட்டப்ட்ட ஏனைய புதிய சாதனைகள்

14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 80 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 11.64 செக்கன்களில் நிறைவு செய்த புனித பெனடிக்ற் கல்லூரியின் ஏஞ்சலோ விதுஷ புதிய சாதனையுடன் தங்கப் பதகத்தை சுவீகரித்தார்.

12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் மினுவாங்கொடை மாரப்பொல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த  என். மின்சர (5.18 மீ.) புதிய சாதனை நிலைநாட்டினார்.

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 13.80 செக்கன்களில் நிறைவு செய்த கொழும்பு றோயல் கல:லூரியின் நதுன் கே. பண்டார புதிய சாதனை நிலைநாட்டினார்.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 37.55 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த கந்தானை புனித செபஸ்தியார் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹேஷானி மஹேஷிக்கா புதிய சாதனையை நிலைநாட்டினார்.

16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை இரத்தினபுரி சுமானா பெண்கள் பாடசாலையைச் சேர்;ந்த டி. கஹங்கம புதிய சாதனை நிலைநாட்டினார்.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.55 செக்கன்களில் நிறைவுசெய்த பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலயத்தைச் சேர்ந்த செனுரி அனுத்தரா புதிய சாதனை நிலைநாட்டினார்.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 200 ஓட்டப் போட்டியை 24.88 செக்கன்களில் நிறைவு செய்த இராஜகிரிய கேட்வே கல்லூரியைச் சேர்ந்த சதீப்பா ஹெண்டர்சன் புதிய சாதனை நிலைநாட்டினார்.

18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.83 செக்கன்களில் நிறைவுசெய்த சிலாபம் புனித மரியாள் ஆண்கள் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ். மிலந்த பெரேரா புதிய சாதனை நிலைநாட்டினார்.

தொடர் ஓட்டப் போட்டியில் 3 சாதனைகள்

18 வயதுக்குட்பட்ட ஆ;ண்களுக்கான 4 தர 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் (42.15 செக்.) பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரி அணியினரும் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் (3 நி. 27.57 செக்.) குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல வித்;தியாலய அணியினரும் 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பெண்களுக்கான 4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் (3 நி. 56.77 செக்.) வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலய அணியினரும் புதிய சாதனைகளை நிலைநாட்டினர்