Published by R. Kalaichelvan on 2019-11-01 17:11:32
(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் கைச்சாத்திடப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹஷன் ஹலியின் தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தீர்மானித்ததை தொடர்ந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.பொதுஜன பெரமுன சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஹஷன் ஹிலியும் கைச்சாத்திட்டனர்.
முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளர் பதவியை வகித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹஷன் ஹலி முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பினை ஸ்தாபித்தார்.
கடந்த வாரம் அக்கட்சியிக் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க கட்சி ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த புரிந்துணர்வு கைச்சாத்திடல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் யாப்பா அபேவர்தன , டிலான் பெரேரா ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.