தஞ்சாவூர் அருகே, பூர்வீக வீட்டில் பாம்புப் புற்று உள்ளதால் அங்கு இருந்தவர்கள் கடந்த 17 ஆண்டுகளாக வேறு வீட்டில் வசித்து வருகின்றனர்.

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோவில் மணல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். பட்டுப் புடவை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (36). வசந்திக்கும் அவரது சகோதரர் வெங்கட்ராஜன் என்பவருக்கும் சொந்தமான பூர்வீக வீடு உள்ளது.

குறித்த வீட்டில் உள்ள பெரிய புற்றில் நாகப்பாம்பு இருப்பதால் கடந்த 17 ஆண்டுகளாக அந்த வீட்டில் வசிக்காமல் அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர்.

இது குறித்து வசந்தி தெரிவித்ததாவது,

“பூர்வீக வீட்டின் உத்திரத்தில் இருந்த நாகப்பாம்பு ஒன்றை எனது பெற்றோர் அடித்துக் கொன்று விட்டனர். ஓராண்டுக்கு பின்னர், வீட்டின் உள்ளேயே உருவான பெரிய புற்றுக்கு நாகப்பாம்பு ஒன்று வந்தது.

குறித்த பாம்பு யாரையும் தொந்தரவு செய்யவில்லை. இதனால், அந்த பாம்புக்கு இடையூறாக இருக்க வேண்டாம் எனக் கருதிய எனது பெற்றோர், அந்த வீட்டை காலி செய்துவிட்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குச் சென்று விட்டனர்.

பெற்றோருக்குப் பின்னர், நாங்களும் அந்த புற்றுக்கு மஞ்சள் நீர் தெளித்து வழிபட்டு வருகிறோம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் வந்து வணங்கிச் செல்கின்றனர்” என தெரிவித்தார்.