தங்கையின் திருமண செலவுக்காக, தனது உடல் உறுப்புகளை விற்பனை செய்ய கலெக்டரிடம் அண்ணன் அனுமதி கேட்ட சம்பவம் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் மதனபள்ளியைச் சேர்ந்த பாவாஜி அண்மை யில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு சென்று அங்கு, சப்-கலெக்டர் கீர்த்தி மற்றும் அதிகாரிகள், பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது, சப்-கலெக்டரிடம் சென்ற பாவாஜி, "எனது தங்கையின் திருமண செலவுக்காக எனது உடல் உறுப்புகளை விற்க தயாராக இருக்கிறேன். அதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்" என்றார். 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சப்-கலெக்டர் கீர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், இது குறித்து பாவாஜி யின் உறவினருக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, பத்து வயது முதலே சூதாட்டத்துக்கு அடிமையான பாவாஜி, அதன் மூலம் இலட்சக் கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அதை வைத்து, அவருடைய மூத்த சகோதரிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

தற்போது, அனைத்து பணத்தையும் சூதாட்டத்தில் இழந்த பாவாஜி,  இரண்டாவது தங்கை திரு மணத்துக்காக உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், பாவாஜிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாவாஜி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

"சூதாட்டத்தில், ஏராளமானோரை ஏமாற்றி பணம் சம்பாதித்தேன். என் வாழ்க்கையின் முழுமையான அர்த்தத்தை உணர, உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தேன்.

அதற்கு, கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி தரவில்லை. ஆனாலும், வேறு அரசு துறை அதிகாரிகளை சந்திப்பேன் இதற்கு அனுமதி கிடைக்கும் வரை ஓய மாட்டேன்" என்று தெரிவித்தார்.

குறித்த சம்பவம், ஆந்திர மாநிலத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.