(எம்.மனோசித்ரா)

சர்வதேச வன்முறைகளற்ற தினமான நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளமை மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ' வாக்களிப்பது ஒவ்வொரு தனிமனிதனதும் உரிமை, குரல், பலம், எதிர்காலம் 'என்பதால் எவரும் வாக்களிப்பை புறக்கணிக்காது வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அத்தோடு இம்முறை தேர்தல் முடிவுகளை 18 ஆம் திகதி பகல் வேளையில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், தேர்தல் கடமைகளுக்காக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், ஏனைய அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 3 இலட்சத்து 75 ஆயிரம் பேர் நேரடியாக பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 

இராஜகிரியவில் உள்ள சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது : 

சட்டங்களை மீறினால் சிறை தண்டனை

அரச உத்தியோகத்தர்களே தபால் மூலம் வாக்களிக்கின்றனர். சாதாரண மக்களை விடவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியவர்கள் வாக்களிக்கும் போது அதனை புகைப்படம் எடுத்து முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருக்கின்றனர். இது தேர்தல் சட்டத்துக்கு அமைய தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறான தவறு செய்பவர்களுக்கு குறைந்தது 3 வருட சிறை தண்டணை வழங்கப்படும். 

எனினும் அரச அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொள்வது வெட்கப்பட வேண்டிய விடயம் என்பதோடு கவலையளிப்பதாகவும் இருக்கின்றது. மேலும் ஆள் அடையாளத்தை மறைத்து சட்ட விரோதமாக வாக்களித்து இனங்காணப்படுபவர்களுக்கு 7 வருட சிறை தண்டனை வழங்கப்படும். 

கடந்த 2015 ஆம் ஆண்டு இவ்வாறு தேர்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட அரச அதிகாரியொருவருக்கு வழங்கப்படவிருந்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு என்பன வழங்கப்படவிடாமல் நிறுத்தப்பட்டன. அதே போன்று  இம்முறையும் சட்ட ரீதியான நடவடிக்கைள் நிச்சயம் எடுக்கப்படும். 

ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படல்

அரச மற்றும் தனியார் இலத்திரனியல், அச்சு ஊடகங்களுக்கு பக்க சார்பாக நடந்து கொள்ள வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் பல சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் சில ஊடகங்கள் அதனை கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்தும் பக்க சார்பாக செயற்பட்டு வருகின்றன. 

ஊடகங்களின் இவ்வாறான செயற்பாடுகள் ' அரசியல் கடலில் அனாதையான காகங்களைப் போன்று ' தோன்றுகிறது. அச்சு ஊடகங்களில் செய்திகள் அச்சிடப்படுவது ஒரு தனியார் அச்சு பதிப்பகத்திற்கு இலாபமாக அமைகிறது. ஆனால் இலத்திரனியல் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலை வரிசை என்பது மக்களுக்கு சொந்தமானது. எனவே அவற்றுக்கு அதிக பொறுப்புக்கள் உள்ளன. 

சில ஊடகங்களின்  செயற்பாடுகளால் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூட விசனங்களும் வெளியாகியுள்ளதோடு, முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. எனவே அரச ஊடகமானாலும், தனியார் ஊடகமானாலும் தத்தமது விருப்பத்திற்கேற்ப பக்க சார்பாக செயற்படுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். 

விளம்பரங்களுக்குத் தடை

இம் மாதம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் வானொலி , தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்கள் பிரசுரிக்கப்படல் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும். 13 ஆம் திகதிக்கு பின்னரும் விளம்பரங்கள் ஒலி , ஒளிபரப்பட்டால் சட்ட ஆலோசனைக்கமைய அதற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

கார்ட்போர்ட் வாக்குபெட்டிகள்

இம்முறை வாக்கு பெட்டிகள் தரமான காட்போர்ட் அட்டையிலேயே தயார்படுத்தப்பட்டுள்ளன. மூன்று வௌ;வேறு அளவுகளில் இந்த பெட்டிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. கார்போர்ட் பெட்டிகளாக இருந்தாலும் இவை உறுதியுடையவை என்பதோடு பாதுகாப்பானவையாகவும் இருக்கின்றன. வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய இந்த மூன்று அளவிலான வாக்கு பெட்டிகளும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும். 

வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் என்பதோடு கொண்டு செல்லும் அதிகாரிகளுக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. 

வாக்களிக்கும் நேரம் அதிகரிப்பு

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தனிநபர் ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தினுள் சென்று வாக்களிப்பதற்கு கடந்த காலங்களை விடவும் இம்முறை அதிக காலம் தேவைப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. எனவே காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையான வாக்களிக்கும் நேரம் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாக்களிப்பதற்கு ஒரு மணித்தியாலம் நீடிக்கப்பட்டிருப்பதால் வாக்குகளை எண்ணும் பணிகள் அதற்கு ஏற்ப தாமதமாகும். 

தேர்தல் முடிவுகள் தாமதமாகும்

இம்முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தேர்தல் முடிவுகளை 18 ஆம் திகதி நண்பகல் வேளையில் வெளியிட எதிர்பார்த்திருக்கின்றோம். எனினும் பிரதான வேட்பாளர்கள் இருவர் என எடுத்துக் கொள்ளும் போது அவ்விருவருக்கும் 51 வீத வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு 4 மணித்தியாலங்கள் அதிகமாகத் தேவைப்படுகிறது. 

பிரதான வேட்பாளர்களை விட அடுத்தடுத்த வேட்பாளர்கள் குறைந்த வாக்குகளையே பெற்றிருப்பார்கள் எனில் மேலதிக 8 மணித்தியாலங்களுக்குள் எம்மால் முடிவுகளை அறிவிக்க முடியும். எனினும் பிரதான வேட்பாளர்களை அண்மிக்கும் வகையில் அடுத்தடுத்த வேட்பாளர்களின் வாக்குகள் அமைந்திருந்தால் முடிவை அறிவிப்பதில் 10 மணித்தியாலங்கள் தாமதமாகலாம். எனவே 18 ஆம் திகதி இரவு இறுதி முடிவுகள் வெளியாகக் கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றன. 

வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர்கள்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை மக்கள் நாட்டுக்கு வருகை தந்து வாக்களிக்கும் முறைமையே எமது நாட்டில் பின்பற்றப்படுகிறது. ஏனைய நாடுகளிலிருந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள் வாக்களிப்பதற்கென வௌ;வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தூதரகத்தின் மூலம், இணையதளத்தின் மூலம் மற்றும் தபால் மூலம் போன்ற வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 

எனினும் தற்போது பெரும்பாலான நாடுகள் இணையம் மூலம் வாக்களிப்பினை தவிர்த்து வருகின்றன. காரணம் அதில் இரகசியத் தன்மை பேணப்படுவது கடினம் என்று கூறப்படுகிறது. காரணம் தனிநபர் ஒருவருடைய வாக்கு என்றாலும் அது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது. 

எனவே வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை தராமல் வாக்களிப்பதற்காக வசதிகள் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவிலேயே ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். 

பொதுத் தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் அதற்கு இடமளிக்க முடியாது. காரணம் மாகாண சபைகளின் ஆயுட் காலம் நிறைவடைந்து சுமார் ஒரு வருடத்தையும் கடந்துள்ளது. எனவே மீண்டும் மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு இடமளிக்க முடியாது என்றார்.