குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் பல இருந்தாலும் நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு முறையாக சொல்லக் கூடியது கருத்தடை சத்திர சிகிச்சையே ஆகும். கருத்தடை சத்திர சிகிச்சை முறையானது பெண்களின் பலோப்பின் குழாய்கள் கட்டுப் போடப்பட்டு வெட்டப்பட்டதன் மூலம் செய்யப்படுகின்றது. இதனை LRT சத்திர சிகிச்சையென அழைப்பார்கள். இவ்வாறான நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு முறையின் பின்னர் பெண் ஒருவர் தற்செயலாகக் கூட மீண்டும் கருத்தரிக்க முடியுமா? அவ்வாறு கருத்தரிக்கும் போது கருவான கர்ப்பப் பையினுள் வளருமா? அல்லது கர்ப்பப்பைக்கு வெளியே பலோப்பியன் குழாயில் தங்குமா என அறிய வேண்டும். இதற்கு விளக்கம் தர நான் அண்மையில் கண்ட உண்மைச் சம்பவத்தை தருகின்றேன்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் எனது கிளினிக்கில் என்னிடம் ஆலோசனை பெற வந்த தம்பதிகளில் ஒரு பெண்மணி அதிகூடிய வயிற்று வலியில் இருந்தார். அவர் 34 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய். அவரது 3 பிள்ளைகளும் சிசேரியன் முறை மூலமே பிரசவிக்கப்பட்டார்கள். மூன்றாவது சிசேரியன் பிரசவ நேரத்தில் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையான LRT செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இவ்வாறான LRT குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை இவருக்கு கடைசி சிசேரியன் பிரசவ நேரத்தில் 3 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் ஒரு பிரபல வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளது.
இம்முறை இவ்வாறு வயிற்று வலி வரும் போது அவர் ஏற்கனவே இரு இடங்களில் மருந்துகளை எடுத்துள்ளார். இதன்போது வயிற்று வலிக்கு பல காரணங்களை எண்ணி மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வயிற்று வலியோ குறைந்ததாகத் தெரியவில்லை. அவரது மாதவிடாய் சக்கரமும் ஒழுங்கற்றதாகவே இருந்து வந்துள்ளது. அத்துடன் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்துள்ளமையால் கருத்தரிக்க வாய்ப்பும் இல்லை. அதனால் ஏற்படும் சிக்கல்களையும் எவரும் எண்ணியிருக்கவில்லை.
எனினும் வயிற்று வலி ஒரு நடுத்தர வயதுடைய பெண்ணில் கடுமையாக வரும்போது நாம் எதற்கும் கருத்தரித்தால் வரக்கூடிய நோய்களையும் நினைக்கத்தான் வேண்டும். இதற்கமைய இப்பெண்ணின் சிறு நீரை பரிசோதித்து பார்த்தால் அதிர்ச்சியான தகவல்கள்தான் கிடைத்தது. அதாவது இப்பெண் கருத்தரித்துள்ளதாகவே அறிய வந்தது. இந்த தகவலை குடும்பத்தினருக்கு கூறும்போது கணவர் அதிர்ச்சியடைந்தார். எவ்வாறு ஒரு பெண் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்த பின்னரும் கருத்தரிக்க முடியும் என்றே கேட்டனர். அத்துடன் நாம் ஸ்கான் பரிசோதனை ஒன்றை செய்து வயிற்றில் உள்ள சரியான காரணத்தை கண்டறிய முயற்சித்தோம் அதன்போது தெரியவந்தது. அப்பெண் கருத்தரித்துள்ளார். ஆனால் கருவானது கர்ப்பப் பையில் தங்காது கர்ப்பப்பைக்கு வெளியே பலோப்பியன் குழாயினுள் தங்கியுள்ளது. இவ்வாறான நிலைமைகள் நிரந்தரமாக குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்த பெண்களில் சிலரில் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது 200 பெண்களில் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தால் அதில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்படும். எனவே இதனை அந்தக் குடும்பத்தினருக்கு விளக்க வேண்டி இருந்தது.
அடுத்ததாக பெண்களில் ஏற்படும் இந்த கர்ப்பப் பைக்கு வெளியிலான கருத்தங்கலானது எந்த அளவு கவனிக்கப்பட வேண்டியது என்று பார்க்க வேண்டும். இந்த பெண்ணுக்கு இதனை நாம் கண்டறிந்தவுடன் அடுத்ததாக இந்த கருக்கட்டிய பலோப்பியன் குழாய் வெடித்தால் வயிற்றினுள் பெண்ணுக்கு அதிகூடிய இரத்தப் போக்கு ஏற்பட்டு ஆபத்தான நிலைமைகள் கூட ஏற்படலாம். ஆகையால் சத்திர சிகிச்சை செய்து கருத்தங்கிய பலோப்பியன் குழாயை அகற்ற வேண்டும். அத்துடன் சிலர் கேட்கத் தோன்றும் இந்தக் கருவைக் காப்பாற்றி ஒரு குழந்தையாக பெற்றெடுக்க முடியுமா என்று. இதற்கு பதில் என்னவென்றால் இந்தக் கரு பலோப்பியன் குழாயில் வளர இடவசதி இல்லாததால் குழாயுடன் சேர்ந்து வெடித்தால் தாய்க்கு ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். எனவே இவ்வாறான சிக்கலை தவறவிடாமல் சரியான நேரத்தில் கண்டறிந்து சரியான சத்திர சிகிச்சையை உடனடியாக செய்வது தான் சிறந்த சிகிச்சை. இவற்றையெல்லாம் நாம் அந்த குடும்பத்தினருக்கு விளங்க வைத்து உடனடியான சத்திர சிகிச்சையை திட்டமிட்டோம்.
இந்த சத்திர சிகிச்சை பெண்ணை முழுதும் மயக்கித்தான் செய்யப்பட்டது. இதன்போது வயிற்றில் ஒரு சிறிய துளை மூலம் லப்ரஸ்கோப்பி கமராவை செலுத்தி வயிற்றுள் உள்ள பாதிக்கப்பட்ட வெடிப்படைந்த பலோப்பியன் குழாயை கண்டறிந்து அதனை அகற்றினேன்.
இதன் மூலம் வயிற்றுனுள் ஏற்பட்ட குருதி இழப்பைக் கட்டுப்படுத்தி பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடிந்தது. இந்த வகை சத்திர சிகிச்சை வயிற்றில் சிறிய காயத்துடன் கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குள் முடித்துவிட்டோம். அதனை தொடர்ந்து அப்பெண் முற்று முழுதாக குணமாகி மறுநாள் வீடு சென்றார். எனவே இதிலிருந்து நாம் அறியத் தருவது என்னவென்றால் கருத்தடை சத்திர சிகிச்சை LRT ஒரு நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு முறை. எனினும் ஒரு சிலரில் இம்முறையின் பின்னரும் கருத்தங்கக் கூடியவறான சிறிய சந்தர்ப்பம் ஒன்றுள்ளது. அதிலும் கருவானது பலோப்பியன் குழாயில் தங்கி வெடித்து வயிற்று வலி வரக்கூடிய வாய்ப்பும் உள்ளது. எனவே இதனை ஞாபகத்தில் வைத்து நடுத்தர வயது பெண்ணொருவருக்கு வயிற்று வலி சற்று அதிகமாக உள்ள போது கருத்தங்கல் தொடர்பாகவும் அதன் சிக்கல்கள் தொடர்பாகவும் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் போது தான் பெண்களில் ஏற்படும் மிகவும் ஆபத்தான பலோப்பியன் குழாய் கருத்தங்கலை தவறவிடாமல் கண்டறிந்து பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.
குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்த பெண்களில் இதனை மீள் இயங்க வைக்கலாமா?
நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்த பெண்கள் சில வேளை மனம் மாறி மீண்டும் ஒரு குழந்தை பெற வேண்டும் என நினைப்பது சில சந்தர்ப்பத்தில் ஏற்படுகின்றது. சில பெண்கள் கணவரை இழந்து மீள் திருமணம் செய்த சந்தர்ப்பத்திலும் அல்லது ஏற்கனவே இருந்த பிள்ளையை விபத்திலோ அல்லது டெங்கு போன்ற கொடிய நோயினால் இழந்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் ஒரு பிள்ளை வேண்டும் என்று திட்டமிடுவார்கள். இந்நிலையில் ஏற்கனவே நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்த பெண்கள் என்ன செய்வது என ஏங்குவதுண்டு. இவர்களுக்கு நாம் ஏற்கனவே செய்யப்பட்ட நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு LRT சத்திர சிகிச்சையை மீள் சீராக்கி மீண்டும் இயங்க வைக்க சத்திர சிகிச்சை செய்ய வேண்டிவரும். இவ்வாறு மீள் சீராக்கல் சத்திர சிகிச்சை கிட்டதட்ட நூற்றுக்கு ஐம்பது சதவீதம் வெற்றியளிக்க வாய்ப்புண்டு.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM