இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்காக அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு இன்று காலை 8.30 மணிக்கு அரம்பமானது. இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக 6,59,514 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

தேர்தல் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பிற்கு மத்தியிலும், பொலிஸ் அதிகாரிகளின் பலத்த பாதுகாப்பின் மத்தியிலும் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமானது. இந்நிலையில்,  ஹற்றன் கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர்கள் தபால் மூல வாக்களிப்பை ஹற்றன் ஸ்ரீபாத வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், ஹற்றன் கல்வி வலையத்திற்கு உட்பட்ட சுமார் 2,000 ஆசிரியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், வாக்களிப்பு ஆரம்பமானதுடன் ஆசிரியர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டிருப்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது.இந்நிலையில், வடக்கு கிழக்கு பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான அரச ஊழியர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு, அம்பாறை மாவட்டத்திலும் பல்வேறு திணைக்களங்களில் தபால் மூல வாக்களிப்பு காலை 9 மணி முதல் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.


மேலும் கல்முனை பிரதேச செயலகம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம்   நாவிதன்வெளி பிரதேச செயலகம்  கல்முனை மாநகர சபை  நாவிதன்வெளி பிரதேச சபை ஆகியவற்றிலும் வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருவதுடன்  7,920 வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.