(செ.தேன்மொழி)

நாட்டின் பல்வேறு பகுதிகளில்  நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது போதைப் பொருட்களுடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இந்த சோதனை முன்னெடுப்பின் போது  நவகமுவ பகுதியில் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் உட்பட இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவகமுவ பொலிஸ் பிரிவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே தம்பதியினரான சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணிடமிருந்து 610 மில்லி கிராம் கஞ்சாவும் , கடுவலை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து 20 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுன்டிக்குளம் பகுதியில் பொலிஸாரும் , கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவரிடமிருந்து 105 கிலோ 542 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கடல்மார்க்கமாக படகின் மூலம் இந்த கேரளா கஞ்சாவை கடத்தி வந்தப் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை ஆட்டுப்பட்டித்தெரு பகுதியில் கொழும்பு குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு -11 சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 21 கிராம் 710 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.