ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமையானதும் உலக பாரம்பரியத்தைக் கொண்டதும் அந்நாட்டு மக்களால் மதிக்கப்பட்டு வந்ததுமான ஷூரி அரண்மனையில் தீ  விபத்து ஏற்பட்டுள்ளது.

தெற்கு ஜப்பானிய தீவான ஒகினாவாவில் உள்ள குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனையிலேயே இந்த தீ பரவியுள்ளது.

இவ்வாறு தீபரவிய அரண்மனையான ஷூரி அரண்மனை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தீவிபத்தில் உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அருகில் குடியிருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

தீயணைப்பு குழுவினர் பல மணிநேரம் போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

பிரதான அரண்மனையில் தீ பரவ ஆரம்பித்து அனைத்து முக்கிய கட்டமைப்புகளுக்கும் தீ வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், ரியுக்யு வம்சத்தால் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மர அரண்மனை என்பதுடன் குறித்த அரண்மனை 1933 இல் ஜப்பானின் தேசிய சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது குறித்த அரண்மனை கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டது. தற்போதைய கட்டமைப்பு ஒரு புனரமைப்பு ஆகும்.

பிரதான கட்டடமும், கோட்டையின் வடக்கு மற்றும் தெற்கு கட்டமைப்புகளும் தற்போது எரிந்துவிட்டதாக அந்நாட்டு  ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஓகினாவாவின் தலைநகரான நஹா நகரின் ஒரு மலையின் மேல் அமைந்துள்ள ஷூரி அரண்மனையை வளைந்த கல் சுவர்களால் சூழப்பட்டுள்ளது.

இது 1970 ஆண்டுகள் வரை ஒகினாவாவின் மிகப்பெரிய பொது பல்கலைக்கழகத்திற்கான வளாகமாக செயல்பட்டது, பின்னர் ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது.

ஒகினாவாவின் சுற்றுலாத் தலத்தின் தகவல் படி, அரண்மனை மூன்று முறை எரிந்துள்ளது. ரியுக்யு வம்சத்தின் போது முதல் முறை எரிக்கப்பட்டது. மீண்டும் இரண்டாம் உலகப் போரில் ஓகினாவா போரின் போதும்  எரிந்தமை குறிப்பிடத்தக்கது.