பாப்பரசர் பிரான்சிஸ், எகிப்திய கெய்ரோ நகரிலுள்ள அல்–அஸார் பெரிய பள்ளிவாசலின் இமாமான ஷெய்க் அஹ்மெட் அல்–தாயிப்பை ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாடியுள்ளார்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கும் பள்ளிவாசலுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்பான 5 வருட கால தாமதத்தையடுத்து இந்த முக்கியத்துவம் மிக்க சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு மதத் தலைவர்களும் மத்தியகிழக்கில் நிலவும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையிலான பதற்றநிலை குறித்து கலந்துரையா டியுள்ளனர். இமாம் ஷெய்க் அஹ்மெட் அல்–தாயிப் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெறும் முஸ்லிம்களும் கத்தோலிக்கர்களும் கலந்து கொள்ளும் கூட்டமொன்றுக்கு செல்லும் வழியிலேயே பாப்பரசருடனான சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

இதற்கு முன் பாப்பரசராக இருந்த 16 ஆம் ஆசீர்வாதப்பரால் தெரிவிக்கப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் எதிர்மறையான கருத்தைக் கொண்டதென கூறப்படும் விமர்சனமொன்றையடுத்து 2011 ஆம் ஆண்டில் இரு தரப்பு சந்திப்புகளும் ஸ்தம்பிதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.