கடந்த சில நாட்களாக  நாட்டில் நிலவுகின்ற  சீரற்ற காலநிலையினால்   நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் என்பன ஏற்பட்டுள்ளன. 

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

காலநிலை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கேற்ப,  அம்பாறை  லஹுகல பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்த்தில்   சிக்கித் தவித்த பொதுமக்களை  பாதுகாப்பான பகுதிகளுக்கு இராணுவ வீரர்கள் வெளியேற்றியுள்ளனர்.

இப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்த பருவ மழை காரணமாக  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால்  இராணுவம் தனது யுனிபஃபெல் ட்ரூப் கேரியர்களில் ஒன்றைப் பயன்படுத்தி மக்களை பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி கொண்டு சென்றது.

இதேவேளை, கடற்படை தனது நிவாரண குழுக்கள் மற்றும் படகுகளை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு  வழங்கும் பொருட்டு குறித்த பிரதேசங்களில் சேவையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.