(எம்.மனோசித்ரா)

மனிதப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான பிள்ளையானை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலை செய்வேன் என்று கூறும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அருவறுக்கத்தக்கது என்று தெரிவித்த அமைச்சர் அஜித் மன்னப்பெரும, இவர்களிடம் எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை என்பதால் ஜனநாயகத்தைப் பற்றியும், ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளில் நடைபெறுகின்ற கொள்ளை ரீதியான விவாதங்கள் பற்றி அறிந்தவராவார். சஜித் பிரேமதாச விவாதம் பற்றி தனிப்பட்ட ரீதியிலும், நாமும் பல சந்தர்ப்பங்களில் அவருக்கு நினைவுபடுத்தியிருக்கின்றோம். எனினும் கோத்தாபய ராஜபக்ஷ இதற்கு தனிப்பட்ட ரீதியில் எவ்விதமான பதிலையும் கூறவில்லை. விவாதத்தில் பங்குபற்ற முடியும் என்றால் முடியும் என்றும், இல்லை என்றால் இல்லை என்றும் அவர் பகிரங்கமாகக் கூற வேண்டும். 

அதனை விடுத்து உதய கம்பன்பில போன்ற நகைச்சுவையாளர்கள் மூலம் விவாதத்திற்கு எம்மால் விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணிக்கின்றார்.

 உதய கம்பன்பில தேசிய ஆடை அணிந்திருந்தாலும் அவர் அவுஸ்திரேலியாவிலேயே கல்வி கற்றார். அவரது குடும்பமும் தற்போது அவுஸ்திரேலியாவிலேயே இருக்கிறது. அந்த நாட்டிலும் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர் இது போன்ற விவாதங்களில் பங்குபற்றுவார்.

அந்த விவாதங்களில் ஒவ்வொரு வேட்பாளர்களதும் தனிப்பட்ட விடயங்கள் பற்றி பேசப்பட மாட்டாது. ஒவ்வொருவருடைய கொள்ளைகள் பற்றி மாத்திரமே விவாதிக்கப்படும். எனவே அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றுள்ளார் என்ற அடிப்படையில் கம்பன்பிலவுக்கு அந்த நாட்டில் பின்பற்றப்படும் இந்த கலாசாரம் பற்றி நன்றாகத் தெரியும். 

கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் இந்த விவாதத்தில் கலந்து கொள்வதில் என்ன பிரச்சினை? ஏன் அவர் இதனை புறக்கணிக்கிறார். அவருக்கு உடல் நலக்குறைவு என்று கூறினால் பிரதான வேட்பாளருக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் இந்த விவாதத்தை கைவிட நாம் தீர்மானிக்கலாம்.

 எனினும் அவர் எந்த நிலைப்பாட்டையும் தெரிவிக்காது சுற்றியுள்ளவர்கள் விவாதத்தை புறக்கணிப்பதில் அடிப்படை சிக்கல் காணப்படுகிறது. எனவே பகிரங்க விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கின்றோம். 

அதன் மூலம் முழு நாடும் எமது கொள்கைகளை அறிந்து இருதரப்பு சார்பிலும் விவாதிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.