அவுஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியானது அவுஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 போட்டிகள் விளையாடி வருகின்றது.

கடந்த 27 ஆம் திகதி இத் தொடரின் முதலாவது போட்டி அடிலெய்டில் நடந்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து 2 விக்கெட் இழப்புக்கு 233 ஓட்டங்களை குவித்தது. 

அணித் தலைவர் ஆரோன் பின்ச் 36 பந்துகளில் 64 ஓட்டங்களையும் மெக்ஸ்வெல் 28 பந்துகளில் 62 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 100 ஓட்டங்களையும்எடுத்தனர். 

பின்னர், களமிறங்கிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்களை மாத்தரம் பெற்று 134 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில், கசுன் ராஜித, 4 ஓவர்கள் வீசி 75 ஓட்டங்களை வழங்கியிருந்தார்.இதன் மூலம் அவர் சர்வதேச இருபதுக்கு -20 போட்டியில் அதிக ஓட்டங்களை வாரி வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார். 

இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந் நிலையில் இன்று பிற்பகல் இலங்கை நேரப்படி 1.40 மணியளவில் தொடரின் இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது.

ஏற்கனவே தொடரில் அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளதனால் இப் போட்டியை வெற்றிக்‍ கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது.

இந் நிலையில் இலங்கை அணி வீரர்கள் பந்து வீச்சிலும், துடுப்பாட்டத்திலும் கடந்த போட்டியில் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு அவுஸ்திரேலியாவின் அதிரடியான ஆட்டத்திற்கு கடிவாளம் இட வேண்டும் என்பதுடன், துடுப்பாட்டத்திலும், நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது.