“எயார் டெல் ஸ்ரீலங்கா ஃபாஸ்டர்ஸ் பந்துவீச்சாளர் பட்டத்தை வென்ற பந்து வீச்சாளர்களான இரு தமிழ் இளைஞர்களுக்கு முன்னணி விளையாட்டுக் கழகங்களில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதேவேளை, குறித்த போட்டியில் “எயார் டெல் ஸ்ரீலங்கா ஃபாஸ்டர்ஸ்  பட்டத்தை வென்ற இளம் வீராங்கனையான ஷயானி சேனாரத்ன 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கிண்ணப் போட்டியில் இலங்கையின் ACC மகளிர் அணியின் 15 பேர் கொண்ட குழாமில் இடம்பிடித்துள்ளார். 

அத்துடன் பெண்களுக்கான பகிரங்க அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய போட்டியில் இரண்டாவது இடத்தை வென்ற மல்ஷா மதுஷானியும் ஆசிய கிண்ணப் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“எயார் டெல் ஸ்ரீலங்கா ஃபாஸ்டர்ஸ் போட்டியில் 14 பேரில் 8 முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இலங்கையின் கிரிக்கெட்டின் தேசிய மட்டத்திற்கு செல்வதற்கான இடத்தைப் பிடித்துள்ளனர்.

‘சிலிங்க மலிங்க’ என அனைவராலும் அழைக்கப்படும் ஷயாணி சேனாரத்ன கண்டியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் குறித்த போட்டியில் பங்குபற்றியதுடன் அவரது பந்து வீச்சு வேகமானது மணிக்கு 104 கிலோ மீற்றர் ஆகும். என்றபோதிலும் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட போது ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் அவரது பந்து வீச்சு வேகமானது மணிக்கு 88 கி.மீ. ஆகும். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் அநுஷ சமரநாயக்கவின் வழிநடத்தலின் விளைவாக மூன்றாம் சுற்றுக்கு முன்னேறும் மணிக்கு 98 கி.மீ. வேகத்தில் பந்து வீசி இறுதிச் சுற்றுக்கான 14 பேருக்குள் தெரிவானார்.

அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஏஷான் மாலிங்க எனும் பொடி மாலிங்க இறுதிச் சுற்றில் மணிக்கு 141 கி.மீ. வேகத்தில் பந்து வீசி வெற்றிபெற்றதோடு தற்போது கொழும்பு கிரிக்கெட் விளையாட்டுக் கழகத்தில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளார். 

அவர் இந்த போட்டித் தொடரில் பங்குபற்றிய ஆரம்ப சுற்றுகளின் போது மணிக்கு 131 கி.மீ. வேகத்தில் பந்து வீசியமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 19 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டித் தொடரின் போது மணிக்கு 140 கி.மீ. பந்து வீச்சு வேகத்தை பதிவு செய்திருந்ததோடு அவர் பங்குபற்றிய ஆரம்பச் சுற்றுகளில் மணிக்கு 123 கி.மீ. வேகத்தையே பந்து வீச்சு வேகமாக பதிவு செய்திருந்தார். அவருக்கு தற்போது BRC கிரிக்கெட் கழகத்தில் விளையாட சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

மேலும், இறுதிச் சுற்றுக்குத் தெரிவான 14 பேரில் 19 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய திருகோணமலையைச் சேர்ந்த முஹம்மட் ஃபாமி பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கும், ரசாஞ்சன அரவிந்து தமிழ் யூனியன் விளையாட்டுக் கழகத்திற்கும் கொழும்பைச் சேர்ந்த அருண் பிரகாஷ் முவர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் ரஞ்சன அரவிந்து சம்பத் வங்கி விளையாட்டுக் கழகத்திற்கும் தெரிவாகினர். 

அத்துடன் 19 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கான போட்டியில் பங்குபற்றிய ச்சிராத் தீக்ஷண மற்றும் மலிஷ துரன் ஆகியோர் தற்போது BRC விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வேகமான பந்துவீச்சாளரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கையின் முதலாம் கட்டத்தை குறிக்கும் வகையில் “எயார்டெல் ஸ்ரீலங்கா ஃபாஸ்டர்ஸ்” போட்டித் தொடர் 2019 பெப்ரவரி மாதம் ஆரம்பமாகியதுடன் 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 10000க்கும் அதிகமான போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். இந்த போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுக்காக 145 வீர வீராங்கனைகள் தெரிவாகி அவர்களுடைய பூரண திறமைகளை காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. முதலாவதாக அவர்களது உடற்தகுதி சோதனையிலிருந்து இறுதி பயிற்சி வரை இலங்கை கிரிக்கெட் வீரர்களான அநுஷ சமரநாயக்க, தற்போதைய இருபதுக்கு - 20 அணித் தலைவரும் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளருமான லசித் மாலிங்க உட்பட சமிந்த வாஸ், ஹஷான் திலக்கரத்ன மற்றும் உபுல் சந்தன உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களின் வழிகாட்டல்களின் கீழ் சிறந்த பயிற்சிகள் வழங்கப்பட்டமையினால் தற்போது தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் எதிர்காலத்தில் சர்வதேச மட்டம் வரை செல்வது உறுதியென எயார்டெல் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.