(ஆர்.யசி)

ஒரு இனத்தை உயர்வாகவும் ஏனைய இனங்களை இழிவாகவும் கருதும் அரசியல் கலாசாரம் தூக்கி எறியப்பட வேண்டும் எனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் அனைவருக்கும் ஒரே விதமான பாதுகாப்பை வழங்கும் ஆட்சியை நாம் உருவாக்குவோம் என்றும் கூறினார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடியில் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் மாநாட்டில்  கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக இவற்றைக் கூறினார். 

நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ்  சிங்கள முஸ்லிம் சமூகத்தில் எந்தவொரு அடிப்படைவாத குழுவும் உருவாக்க இடமளிக்க மாட்டோம். நாம் ஒருபோதும் இனவாதம் மதவாதத்தை கையில் எடுக்க மாட்டோம். நாட்டின் பாதுகாப்பு அவசியம் என்றால் பிரதானமாக பொலிஸ் துறையை பயன்படுத்த வேண்டும். பொலிசார்தான் பொதுமக்களுடன் நெருக்கத்தை பேணும் நபர்கள். அவர்கள் போதுமானது. 

இந்த நாட்டினை ஆள்வதற்கு பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதிகள் தேவையில்லை. ஜனநாயக வாதிகளே போதுமானது. நாம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வாக்குறுதியை வழங்குவோம். வெறுமனே ஒரு இனத்துக்கு மாத்திரம் பாதுகாப்பு வழங்குவது தேசிய பாதுகாப்பு அல்ல. இந்த நாட்டில் சகல மக்களுக்கும் ஒரே விதமான பாதுகாப்பு வழங்க வேண்டும். அதனை நாம் வழங்குவோம். தமிழ் முஸ்லிம் மக்களும் எந்தவித அச்சமும் இல்லாது வாழக்கூடிய சூழலை உருவாக்கிக்கொடுப்போம். 

யுத்தம் முரண்பாடுகள் நிலவும் எந்தவொரு நாடும் அபிவிருத்தியடையாது. மாறாக வறுமையும் உயிரிழப்புகளுமே நிகழ்வும். முதலில் நாம் இனங்களாக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். ஒவ்வொரு இனத்தின் தாய்மொழியை உறுதிப்படுத்த வேண்டும். தாய்மொழியில் கல்வி, அரச நடவடிக்கைகளை முன்னெடுக்கும் உரிமையை வழங்க வேண்டும். தமிழ் மொழியில் அரச கருமங்களை முன்னெடுக்கும் சுதந்திரம் வேண்டும். ஆனால் இன்றுவரை அவ்வாறு தமிழ் மொழிக்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

தமிழ் மொழியை உறுதிப்படுத்தினால் மட்டுமே தமிழர்கள் இது தமது நாடு என்ற உணர்வை வெளிப்படுத்துவார்கள். அதுமட்டும் அல்ல மத சுதந்திரம் இருக்க வேண்டும். பெளத்த மதம் போன்று கிறிஸ்தவம், முஸ்லிம், இந்து மக்களின் மத உரிமையை தடைகளின்றி பின்பற்றும் சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். 

மத நம்பிக்கைகளை பின்பற்ற இடமளிக்க வேண்டும். ஒரு மதம் உயர்வானது ஏனைய மாதங்கள் கீழானது என எம்மால் ஒருபோதும் கூற முடியாது. எனவே நாம் அனைத்து மத உரிமைகளையும் சமமாக கருதும் ஆட்சியை வழங்குவோம் என்ற வாக்குறுதிகளை வழங்குகின்றோம். சகல மத கலாசாரம் தான் எமது நாட்டினை வண்ணமயமாக காட்டுகின்றது. ஆனால் நாம் எமது மதத்தையும் மொழியையும் பயன்படுத்தி மோதல்களை வெறுப்புணர்வை வெளிபடுத்தும் நிலைமை உருவாகியுள்ளது. அதனை நிராகரிக்க வேண்டும். ஒன்றாக பயணிக்கும் இலங்கையை  நாம் உருவாக்க வேண்டும். 

அண்மையில் பலாலி விமான நிலையத்தில் தமிழ் மொழி முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என தெற்கில் இனவாதம் கக்கியவர்கள் வடக்கில் தமது காரியாலையத்தில் தமிழ் மொழியில் பதாகை வைத்தனர். இவ்வாறாக  தமது அரசியல் சுயநலத்திற்காக இனப்பிரச்சினையை உருவாக்குகின்றனர்.