தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிற நிலையில், சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. அதில் பேசிய இளைஞர் விஜய் வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை  துண்டித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் உடனடியாக சோதனையிலிறங்கி, நீலாங்கரை உள்ள நடிகர் விஜயின் வீடு, சாலிகிராமம் அபுசாலி வீதியில் இருக்கும் மற்றொரு வீடு, வடபழனி அருணாசலா வீதியில் விஜயின் தாய் ஷோபா பெயரில் இருக்கும் திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களிலும் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லையென்றும், அது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. அத்தோடு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போதையில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. பிகில் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

மேலும் பொலிஸார் நடத்திய தேடுதலில், போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞரே இவ்வாறு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.