சீனாவில் கட்டுமான பணிகளின் போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியான நிலையில். இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கட்டுமான பணியின்போது விபத்து- 8 பேர் பலி

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது குயாங் மாகாணம். இம்மாகாணத்தில் உள்ள குவான்ஷு மாவட்டத்தில் தரைத்தளத்தின் கீழ் கார் நிறுத்துமிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று மாலை வேளையில் சுமார் 14 ஊழியர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 14 நபர்களில் மூவர் அதிர்ஷடவசமாக உயிர்தப்பினர். ஒருவரை மீட்புப்படையினர் உடனடியாக மீட்டனர். மீதமுள்ள 10 பேர் இடிபாடுகளில் முழுவதுமாக சிக்கிக்கொண்டனர்.

இடிபாடுகள் அதிகமாக இருந்ததால் மீட்புப்பணிகள் தாமதம் ஆகின. இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் இறந்த நிலையில் 8 பேரின் உடல்களை கண்டெடுத்தனர், மேலும் இரண்டு பணியாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.