(நா.தனுஜா)

அனைத்து வகையிலுமான பயங்கரவாத செயற்பாடுகளை இலங்கை கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை, அத்தகைய தீவிரவாத செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கு அணிசேரா இயக்கத்தின் அங்கத்துவ நாடுகள் கூட்டாக செயற்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அழைப்பு விடுத்திருக்கிறார்.

அணிசேரா இயக்கத்தின் 18 ஆவது உச்சி மாநாடு கடந்த 26 ஆம் திகதி அஸர்பைஜானின் பாகுவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கான இலங்கையின் பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமை தாங்கினார். 

மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் திலக் மாரப்பன, அணிசேரா இயக்கத்தின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த கொள்கைகள் தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை மீளவும் வலியுறுத்தினார்.

அத்தோடு வறுமை, பயங்கரவாதம் போன்ற சமகால உலகலாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு அணிசேரா இயக்கத்தினர் கூட்டாக செயற்பட வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார். 

2030 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் குறிக்கோள்களை அடைந்துகொள்வதற்கு வறுமை மிகப்பெரிய தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் அபிவிருத்தி உத்திகளில் வறுமை ஒழிப்பு, சமூக சமத்துவமின்மையைக் களைதல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சலுகைகள் குறைந்தவர்களுக்கு உதவுவதை நோக்காகக் கொண்ட நலன்புரி நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அணிசேரா இயக்கத்தின் அங்கத்துவ நாடுகளுக்கு விளக்கினார். 

மேலும் பயங்கரவாத செயற்பாடுகளை அனைத்து விதங்களிலும் இலங்கை கண்டனம் செய்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர் மாரப்பன, வன்முறை மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் சுட்டிக்காட்டினார். அதேவேளை காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளின் பாரதூரத்தன்மை குறித்தும் அவர் வலியுறுத்தினார்.