(நா.தனுஜா)
முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தேர்தலுக்கு முன்னரேயே அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படும் எதிரணியினர், ஆட்சியைக் கைப்பற்றினால் எவ்வாறு செயற்படுவார்கள் என்ற கேள்வி எழுகின்றது. கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றால் ஒரு பாரிய இராணுவ ஆட்சியொன்றே உருவாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்த்தரப்பினரால் வாக்காளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள், அவர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகித்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் நிலையொன்று தற்போது தோன்றியிருக்கிறது. ஜனாதிபதி சட்டத்தரணியான அலி சப்ரி, தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் 'கோத்தாபய ராஜபக் ஷ ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டார். எனவே அதன் ஒரு பங்குதாரர்களாக முஸ்லிம் மக்கள் மாறவேண்டும். அல்லாவிடின் ஆபத்து நேரிடும்' என்ற தொனியில் கருத்து வெளியிடுகின்றார். ஜனாதிபதி சட்டத்தரணியான அவர், தேசிய பட்டியல் மூலமான உறுப்புரிமையையோ அல்லது அதற்கும் மேலான உயர் பதவியையோ எதிர்பார்த்து இவ்வாறு அச்சுறுத்தும் விதமாகக் கருத்து வெளியிடுவது கவலையளிக்கின்றது. முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தேர்தலுக்கு முன்னரேயே இவ்வாறு செயற்படக்கூடியவர்கள், ஆட்சியைக் கைப்பற்றினால் எவ்வாறு செயற்படுவார்கள் என்ற கேள்வி எழுகின்றது. எனவே அவர் வெற்றி பெற்றால் ஒரு பாரிய இராணுவ ஆட்சியொன்றே ஏற்படப்போகின்றது என்பது தெளிவாகின்றது.
அதேபோன்று அமைச்சுக்களின் செயலாளர்களாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிப்பதற்கு எதிரணியினர் திட்டமிட்டு வருவதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. இராணுவத்தில் பணிபுரிந்த அவர்களால் சுதந்திரம், அமைதி என்பவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. எதிரணியினர் ஆட்சிக்கு வந்தால், வெளியே சென்ற தனது மகன் பேஸ்புக்கில் மேற்கொண்ட பதிவிற்காக வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டாரா இல்லையா என்று அவரது தாய் அச்சத்துடன் வாழும் நிலையே ஏற்படும். எமது வாக்குரிமையைப் பயன்படுத்தி, அத்தகையதொரு அச்சசூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமா என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாட்டின் ஜனாதிபதியாகப் போகின்ற ஒருவரிடம் நாட்டின் அனைத்துத் துறைகள் தொடர்பிலும் ஒரு தெளிவான இலக்கும், அதனை அடைவதற்கான கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்களும் காணப்பட வேண்டும். அவ்வாறானதொரு கொள்கையும், இலக்கும் சஜித் பிரேமதாஸவிடம் இருப்பதாலேயே அவருடனான விவாதமொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம். ஆனால் கோத்தாபய ராஜபக் ஷ விவாதத்தைத் தவிர்த்து வருகின்றார்.
உண்மையிலேயே அவர்களிடம் நாட்டை முன்நிறுத்திய தெளிவான இலக்கு இருக்குமானால் விவாதத்திற்கு முன்வரவேண்டும். நாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டு, நாட்டைப் பிளவுபடுத்துவதற்குத் திட்டமிடுவதாக அவர்கள் சமூகவலைத்தளங்களின் ஊடாக பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். ஆனால் வடக்கிற்குச் சென்று வேறொரு கதையைக் கூறுகின்றனர். அதேபோன்று கிழக்கில் மற்றொரு கருத்தையும், தெற்கில் மற்றொன்றையும் கூறுகின்றனர். எனவே ஒரே மேடையில் பகிரங்க விவாதமொன்றின் ஊடாக அவர்களுடைய சந்தேகங்களை நேரடியாகத் தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.
அடுத்ததாக நாம் எதிர்வரும் 31 ஆம் திகதி புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடத் தீர்மானித்திருக்கின்றோம். அதில் நாட்டை முன்நிறுத்தி அனைத்துத் துறைகள் தொடர்பிலும் எமது அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் செயற்திட்டங்கள் தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும். அதனை வெளியிட்டதன் பின்னரேனும் எதிரணியினர் விவாதத்திற்கு வரவேண்டும். உண்மையில் கோத்தாபய ராஜபக் ஷவிற்கு அவருடைய திட்டம், கொள்கை என்னவென்பதே தெளிவாகத் தெரியாது. ஆகையினால் அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறப்போவதும் இல்லை. மேலும் சஜித் பிரேமதாஸ அடிப்படைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஒழிக்க வேண்டும் என்பதில் எவ்வித இரட்டை நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அவர் விடுதலைப் புலிகளின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவரின் மகனாவார். அப்பயங்கரவாதிகளுடன் போரிட்டு, குண்டுகளின் பாகங்களை உடலில் கொண்டிருக்கும் ஒருவரே நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பொறுப்பேற்றுக்கொள்ளப் போகின்றார். எனவே பயங்கரவாதத்திற்கு எமது நாட்டில் இடமில்லை.
தேசப்பற்றாளர்கள் போன்று வேடமிட்டுக் கொண்டிருப்போரே எதிரணியில் இருக்கின்றனர். எனினும் எமது பக்கத்தில் உண்மையான தேசப்பற்றாளர்களே உள்ளனர். எனவே எந்தவொரு கட்சியினதும், எத்தகையதொரு தரப்பினரதும் நிபந்தனைகளுக்கு நாம் அடிபணிய மாட்டோம். நாம் யாருடனும் திரைமறைவில் எவ்வித ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவில்லை. சஜித் பிரேமதாஸவின் கொள்கைகள் தெளிவாகப் பகிரங்கமாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றுடன் உடன்படுபவர்கள் எம்முடன் வந்து இணைந்துகொள்ள முடியும். நாம் யாருக்கும் பின்னால் செல்ல மாட்டோம். அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் எவையும் எம்மிடம் கையளிக்கப்படவில்லை.
நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்தேர்தல் ஒன்றின் ஊடாக புதிய பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்குவோம். ஆனால் எதிரணியில் கோத்தாபய வெற்றியடைந்தால் அவருடைய சகோதரன் பிரதமராவார். மற்றைய சகோதரன் அமைச்சராவார். அவருடைய பிள்ளைகள் அனைவரும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM