தனியார் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் ஜனாதிபதித் தேர்தல் விளம்பரங்களை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்டவிதிகளுக்கு முரணானது எனவும் அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முரணான வகையில் தனியார் பஸ் வண்டிகள், மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களின் படங்கள் மற்றும் கட்சிகளின் சின்னங்கள் ஆகியவற்றை ஆதரிக்கும் வகையில் வசனங்கள் மற்றும் சின்னங்கள், ஸ்ரிக்கர்கள் கொடிகள், ஆகியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இவ்வாறு வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கு அனைத்து பொலிஸ் அதிகாரப் பகுதிகளையும் உள்ளடக்கியவகையில், திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்தந்த பொலிஸ் மா அதிபர்களுக்கும் வலயப் பொலிஸ் பொறுப்பு அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் உத்தரவிடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.