- பி.கே.பாலச்சந்திரன் 

 இந்து தேசியவாதமும் பாகிஸ்தானுடனான ஒரு இராணுவ மோதலும் சேர்ந்த கலவையே 2019 ஏப்ரல் - மே பாராளுமன்றத் தேர்தலிலும் அண்மைய மகாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தலிலும் கூட  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவந்தன. ஆனால், மோடியின் அதிகார இருக்கையான இந்திய தலைநகருக்கு சற்று  வெளியே ஹரியானாவில் அந்த கலவை பயனளிக்கத் தவறிவிட்டது.

 இந்திய பாராளுமன்றத் தேர்தலில் 2019 ஏப்ரில் -- மேயில் அந்த கலவை வழிமுறையின் பெருவெற்றியை அடிப்படையாகக்கொண்டு மகாராஷ்டிராவிலும் ஹரியானாவிலும் அக்டோபர் 21 சட்டசபை தேர்தல்களிலும்  அதே வழிமுறை பயனளிக்கும் என்று பொதுவில் எதிர்பார்க்கப்பட்டது. உண்மையில், வாக்களித்துவிட்டு வெளியே வருபவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளில் (Exit Polls ) 99 சதவீதமானவை இரு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சியே அமோக  வெற்றிபெறும் என்று எதிர்வுகூறியிருந்தன.இந்தியா ருடேயின் வாக்களிப்புக்கு பின்னரான கருத்துக்கணிப்பு மாத்திரமே ஹரியானாவில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காமல் ' தொங்கு சட்டசபை' ( Hung Assembly) யொன்றே தெரிவாகும் என்று எதிர்வுகூறியது. ஆனால், மேற்கூறப்பட்ட கலவை வழிமுறை, கவனத்தை பெரிதும் ஈர்க்கின்ற அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட வெற்றிகண்ட அதேவேளை, ஹரியானாவில் முற்றுமுழுதாக தோல்விகண்டுவிட்டது.

288 ஆசனங்களைக்கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பாரதிய ஜனதா 105 ( 25.8 சதவீத வாக்குகள் ) ஆசனங்களைக் கைப்பற்றியது. அதன் நேச அணியான சிவசேனை  56 ஆசனங்களை ( 16.4 சதவீதம் ) பெற்றது.காங்கிரஸ் கட்சி 15.9 சதவீத வாக்குகளைப் பெற்று 44 ஆசனங்களையும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 16.7 சதவீத வாக்குகளுடன் 54 ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் 25.2 சதவீத வாக்குகளுடன் 29 ஆசனங்களையும் வென்றன.

90 ஆசனங்களைக்கொண்ட ஹரியான சட்டசபையில் பாரதிய ஜனதா 36.5 சதவீத வாக்குகளுடன் 40 ஆசனங்களையும் காங்கிரஸ் கட்சி 28.1சதவீத வாக்குகளுடன் 31 ஆசனங்களையும் ஜனநாயக் ஜனதா கட்சி 14.9 சதவீத வாக்குகளுடன் 10 ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் 25.2 சதவீத வாக்குகளுடன் 9 ஆசனங்களையும் 19 ஆசனங்களையும் கைப்பற்றின.

மகாராஷ்டிராவில் இந்துத்வா கட்சிகள் ( பாரதிய ஜனதாவும் சிவசேனையும் )சேர்ந்து  288 ஆசனங்களில் 161 ஆசனங்களை ( 56 சதவீதமானவை) பெற்றிருக்கின்றன. இவற்றை வாக்குகளாக நோக்குகையில் 42.2 சதவீதமாகும் .இந்துத்வாவை பொறுத்தவரை இது ஒரு சிறப்பான செயற்பாடுதான்.ஆனால், சிவசேனை ஒரு  மகாராஷ்டிர பிராந்திய  கட்சியாகவும் இருக்கிறது. பிராந்திய மராத்தி அடையாளத்தையும்  அரசியல் நிகழ்ச்சி நிரலையும்  அது வெளிப்படுத்துவதால், அது ஒரளவுக்குத்தான் இந்துத்வாவாக இருக்கிறது.

ஹரியானாவில்  இந்துத்வாவின் செயற்பாடு ஒப்பீட்டளவில் மோசமானதாகவே இருக்கிறது.90 ஆசனங்களைக் கொண்ட சட்டசபையில் ஆக 40 ஆசனங்களே இந்துத்வாவின் பங்கு. அது 36.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கின்ற அதேவேளை, இந்துத்வா அல்லாத கட்சிகள் 63.5 சதவீத வாக்குகளுடன் 50 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றன.

மகாராஷ்டிராவில் அமைச்சரவையை 50 : 50 என்ற விகிதத்தில் பிரிப்பது என்று வழங்கிய  வாக்குறுதியை பாரதிய ஜனதா மதித்துச்செயற்படுமானால், அது சிவசேனையுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் ஒன்றை அமைக்கும்.ஆனால், இது பாரதிய ஜனதாவுக்கும் அதன் ' தேசியவாதத்துக்கும் ' ஒரு பின்னடைவாகும்.

ஹரியானாவில்  தொங்கு சட்டசபையில் ' கிங் மேக்கராக ' விளங்கும் ஜன்நாயக் ஜனதா கட்சியுடன் சேர்ந்து பாரதிய ஜனதா ஆட்சியமைத்து மோகன்லால் கட்டார் இரண்டாவது தடவையாகவும் ஞாயிறன்று முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.

மகாராஷ்டிராவிலும் ஹரியானாவிலும் ஏற்கெனவே பதவியில் இருந்த பாரதிய ஜனதா அரசாங்கங்கள் மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் கவனம் செலுத்தாமல் இந்து தேசியவாதத்தையும் முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான உணர்வுகளையும் மக்கள் மத்தியில் பிரசாரப்படுத்ததிச் செலுத்துவதில் கவனத்தைக் குவித்தமையே  மகாராஷ்டிராவில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை பெறமுடியாமல் போனதற்கும் ஹரியானாவில் மோசமான செயற்பாட்டுக்கும் காரணம் என்று இப்போது கூறப்படுகிறது. 

மகாராஷ்டிரா கிராமிய பிரச்சினைகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.அதன் விளைவாக பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.      பொதுவில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நலிவுநிலை மகாராஷ்டிராவை பாதித்தது.  அதற்கு காரணம் இந்தியாவின் நிதித்துறை தலைநகரமான மும்பை மகாராஷ்டிரா மாநிலத்திலேயே அமைந்திருக்கிறது.

பெரிய மற்றும் சிறியரக தொழில்துறைகளுக்கு பெயர்போன ஹரியானாவில் தெழிற்சாலைகள் மூடப்பட்டுவருகின்றன அல்லது பொதுவான பொருளாதாரச் சரிவின் காரணமாக கேள்வி குறைவடைந்ததன் விளைவாக தொழிற்சாலைகள் உற்பத்தியை குறைத்துவருகின்றன. தொழிற்சாலைகள் மூடப்படுவதால் வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரித்தது.குற்றச்செயல்கள் 36 சதவீதத்தால் அதிகரித்தன.மாநிலத்தில் பெரும்பான்மையினராக வாழ்கின்ற ஜாற் சாதியினர் தங்களுக்கு உரித்தானவை கிடைக்கவில்லை என்று குறைபட்டுக்கொண்டு பெரிய எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்தார்கள்.

மோடியின் பாரதிய ஜனதா கட்சி இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்துச் செய்ததன் மூலமாக ( முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்ற ) சுயாட்சி அதிகாரங்களைக் கொண்ட ஜம்மு -- காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுக்குள் முழுமையாக உள்வாங்கியதைச் சுட்டிக்காட்டி வாக்காளர்களைக் கவர்ந்திழுக்க முயற்சித்தது. ஜம்மு -- காஷ்மீரில் பாகிஸ்தானின் அனுசரணையுடனான பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டதைப் பற்றியும்  காஷ்மீர் தகராறு தொடர்பில் சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் அவமதிப்புக்குள்ளானது பற்றியும் மோடி பேசினார்.தேசிய பிரஜைகள் பதிவேட்டை ( National Register of Citizens - NRC) ) ஹரியானா மாநிலத்துக்கும் விரிவுபடுத்தி பங்களாதேஷ் முஸ்லிம் குடியேற்றவாசிகளை அப்புறப்படுத்தப்போவதாக மோடி மக்களுக்கு கூறினார்.அவரைப் பொறுத்தவரை, அந்த பங்களாதேஷ் குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாக வந்தவர்கள் என்பதுடன் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்.

ஆனால், இந்த பேச்சுக்கள் ஓரளவுக்கு மாத்திரமே தாக்கத்தை ஏற்படுத்தின. " சுவராஜ்  இந்தியா " அமைப்பின் தலைவரான பேராசிரியர் யோகேந்திர யாதவ் தெரிவித்திருக்கும் தகவல்களின்படி ஹரியானாவின் மொத்த கடன்கள் கடந்த ஐந்து வருடங்களில் கடுமையாக அதிகரித்திருந்தது. அத்தகைய உயர்ந்த கடன் பளுவில் இருந்து ஹரியானாவை விடுவிப்பதாக வாக்குறுதியளித்துக்கொண்டே கடந்த தடவை பாரதிய ஜனதா அதிகாரத்துக்கு வந்தது.தற்போது அந்த மாநிலத்தின் கடன்கள் ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 744 கோடி ரூபாய் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய பொருளாதார கண்காணிப்புக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்ட இவ்வருட மே -- ஆகஸ்ட் காலகட்டத்துக்கான அறிக்கையை மேற்கோள்காட்டிய பேராசிரியர் யாதவ் ஹரியானாவில் தொழில்வாய்ப்பின்றி இருப்போரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டிவிட்டது இதில் 450,000 பேர் பல்கலைக்கழக பட்டதாரிகள் அல்லது பட்டப்பின் படிப்பு பெற்றவர்கள்.

 2004 -- 2014 காலகட்டத்தில் ஹரியானாவின் முதலமைச்சராக இருந்த புபிந்தர் ஹூடா மாநிலத்தின் பாரதிய ஜனதா ஆட்சியை " இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிளவுபடுத்துகின்ற அரசியலை மேம்படுத்துகின்ற ஊழல்நிறைந்த ஒரு  அரசாங்கம் " என்று வர்ணித்தார்.

2014 ஹரியானா சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா 47 ஆசனங்களை வென்ற அதேவேளை இந்திய தேசிய லோக்தள் கட்சியும் காங்கிரஸும் முறையே 19,15 ஆசனங்களைப் பெற்றன.

பொருளாதார  பலவீனம்

பொதுவில் இந்தியாவின் பொருளாதார நிலைவரம் கடந்த ஐந்து வருடங்களாக படுமோசமாகியிருந்தது.ஆனால், மாடி அரசாங்கம் அதன் இந்து தேசியவாதம் மற்றும் முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான ஆக்ரோஷமான கொள்கைளினால் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பொருளாதார நிலைவரம் மீது கவனத்தைச் செலுத்தவில்லை.

பொருளாதாரத்துறைக்கான இவ்வருடத்தைய நோபல் பரிசைப் பெற்றிருக்கும் இந்திய அமெரிக்கரான பேராசிரியர் அபிஜித் பானர்ஜி இந்திய பொருளாதாரம் ஒரு பின்னடைவான நிலையில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.தொழில் வாய்ப்பு புள்ளிவிபரங்கள் மனச்சோர்வைத் தருபவையாக உள்ளன.மக்களின் நுகர்வு மிகவும் வீழ்ச்சி  கண்டிருக்கிறது.வாகனத் தயாரிப்பு போன்ற முக்கியமான துறைகளில் விற்பனை தாழ்நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இரு வாரங்களுக்கு முன்னர் தனது அமெரிக்க மனைவியுடன் சேர்ந்து நோபல் பரிசை வென்ற பிறகு பேராசிரியர் அபிஜித் மசாசூசெற்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றியபோது " எனது அபிப்பிராயத்தில் இந்திய பொருளாதாரம் படுமோசமான நிலையில் இருக்கிறது " என்று குறிப்பிட்டார்.

தேசிய வகைமாதிரி ஆய்வினால் ( National Sample Survey) வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களைச் சுட்டிக்காட்டிய அவர் அவை இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் சராசரி நுகர்வு பற்றிய மதிப்பீட்டை தருகின்றன என்று குறிப்பிட்டார்." 2014--15 க்கும் 2017 -- 18 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சராசரி நுகர்வு பற்றிய புள்ளிவிபரங்கள் சற்று கீழிறங்கியிருக்கின்றன.பல.... பல ....பல வருடங்களுக்குப் பிறகு முதற்தடவையாக அவ்வாறு நடந்திருப்பது மிகவும் தெளிவான ஒரு எச்சரிக்கைச் சமிக்ஞையாகும் " என்று அவர் கூறினார்.

   " எந்த தரவு சரியானது என்பது தொடர்பில் இந்தியாவுக்குள் பெரும் தகராறு மூண்டிருக்கிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அதற்கு அசொகரியத்தை தருகின்ற சகல தரவையும் தவறானவை என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கின்றது.ஆனால், அரசாங்கத்தின் இத்தகைய அணுகுமுறை பிரச்சினையொன்று இருக்கிறது என்பதை அதுவாகவே ஒத்துக்கொள்வதாகவே அமைகிறது என்று  நான் நினைக்கிறேன்.எனவே பொருளாதாரம் மிகவும் விரைவாக வீழ்ச்சி கண்டுவருகின்றது.எவ்வளவு விரைவாக என்பது எமக்குத் தெரியாது.தரவுகளைப் பற்றி ஒரு தகராறு இருக்கிறது.ஆனால், பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடைகின்றது என்றே நான் நினைக்கிறேன் " என்று பேராசிரியர் அபிஜித் முகர்ஜி செய்தியாளர் மகாநாட்டில் கூறினார்.

உண்மையில் திட்டவட்டமாக என்ன செய்யவேண்டும் என்று தனக்கு தெரியவில்லை என்று கூறிய அவர், " அரஞாங்கம் பெரியதொரு பற்றாக்குறையைக் கொண்டிருக்கிறது.ஆனால், இப்போது அரசாங்கம் சில பட்ஜெட் இலக்குகளையும் நிதித்துறை இலக்குகளையும் வைத்திருப்பதாக பாசாங்கு செய்வதன் மூலமாக குறைந்தபட்சம் சகலரையும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறது " என்று குறிப்பிட்டார்.

" கேள்வி ( Demand) தாழ்வாக இருப்பதன் காரணமாக பொருளாதாரம் பின்னடைவான நிலைக்குள் சென்றுகொண்டிருக்கின்றது.பொருளாதாரத்தில் கேள்வி இப்போது பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.தற்போதைய வங்கித்துறை நெருக்கடி அச்சந்தருவதாக இருக்கிறது. அரசாங்கத்துறை வங்கிகள் மத்திய கண்காணிப்பு ஆணைக்குழுவின் ( Central Vigilance Commission -- CVC) அதிகார வரம்பெல்லைக்கு வெளியில் இருப்பதற்கு வசதியாக அவற்றில் அரசாங்கத்தின் பங்குகள் 50 சதவீதத்துக்கும் கீழ் குறைக்கப்படவேண்டும்.அரசாங்கம் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருப்பதால் அரசாங்கத்துறை வங்கிகள் அவற்றின் தீர்மானங்கள் மத்திய கண்காணிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்குட்படுத்தப்படும் என்று அஞ்சுகின்றன.அதன் விளைவாக அரசாங்கத்துறை வங்கிகள் செயலில் முடங்கிப்போகின்றன"  என்று அபிஜித் பானர்ஜி விளக்கம் அளித்தார்.

புள்ளிவிபரவியல் அமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை மீளவும் நிலைநிறுத்துமாறு கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதமொன்றில் கையெழுத்திட்டவர்களில் பானர்ஜியும் ஒருவர்.

கோர்பரேட் வரிகள் குறைப்பு குறித்து மோடி பெருமைப்படுகிறார் என்று கூறிய பானர்ஜி தன்னை விடவும் கோர்பரேட் துறை மீது மோடி கூடுதில் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியைப் பெறுவதற்கு கோர்பரேட் துறையினருக்கு பெருமளவு பணத்தைக் கொடுக்கவேணடும் என்று நிர்வாகத்தில் உள்ள சிலர் நம்புகிறார்கள் என்பதையே அண்மைய வரிக்குறைப்புகள் வெளிக்காட்டுகின்றன.தனக்கு அதில் நம்பிக்கை கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 (நியூஸ் இன் ஏசியா )