ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாக்குறுதிகள் அதிகரித்துவருவதுடன் தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளும் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக 1835 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட ஒக்டோபர் 7ஆம் திகதியிலிருந்து கடந்த 26ஆம் திகதி வரையான காலப்பகுதிகளிலேயே இத்தகைய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மாவட்ட மட்ட, மத்திய நிலையங்களிலிருந்து 1249 முறைப்பாடுகளும் தேசிய தேர்தல் முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு 586 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. தேர்தல் நெருங்க நெருங்க இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகின்றது.
நாட்டில் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலானது நீதியானதாகவும் சுதந்திரமானதாகவும் நடத்தப்படவேண்டியது இன்றியமையாததாகும். தேர்தல் சட்ட விதி மீறல்கள் வன்முறைகள் அற்ற வகையில் தேர்தலை நடத்த வேண்டியது அவசியமாகின்றது. ஆனால் தற்போதைய நிலையில் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள போட்டா போட்டி நிலைமை தேர்தல் சட்டவிதி மீறல்களுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலில் இரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் வாக்கெண்ணும் பணிகளில் மட்டும் சுமார் 48 ஆயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதனைவிட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் வாக்களிப்பு நிலையங்களில் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நலன்புரி மற்றும் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் 8 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட தேர்தல் தின பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களமும் திட்டங்களை வகுத்துள்ளது. குறிப்பாக வாக்களிப்பு நிலையங்களின் நேரடி பாதுகாப்புக்கு மட்டும் சுமார் 60 ஆயிரம் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஒரு வாக்களிப்பு நிலையத்துக்கு குறைந்த பட்சம் ஆயுதம் தரித்த இரு பொலிஸார் பாதுகாப்பளிக்கவுள்ளதுடன் இந்த எண்ணிக்கை தேவைக்கேற்ப மாறுபடும் என்றும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழுவும் பொலிஸ் திணைக்களமும் மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமையினால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. இத்தகைய வன்முறைகளை கட்டுப்படுத்தி நீதி நியாயமான தேர்தலுக்கு வழி சமைக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் தலைவர்களது பொறுப்பாகவுள்ளது.
வன்முறைகள் இவ்வாறு பதிவாகிவரும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பெருமளவான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வலியுறுத்தி வரும் வேட்பாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தார். அதில் பல்வேறு விடயங்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார். நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படும், ஒற்றையாட்சி பௌத்தத்துக்கு முனனுரிமை வழங்கப்படும். தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும். ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராய ஆணைக்குழு அமைக்கப்படும். காணிப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வற் வரி குறைக்கப்படும் உட்பட பல்வேறு வகையான வாக்குறுதிகளை அவர் வழங்கியிருக்கின்றார். 10 அம்ச திட்டங்களின் அடிப்படையில் அவரது உறுதிமொழி அமைந்திருக்கின்றது.
இதேபோன்றே ஜே.வி.பி.யின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை சனிக்கிழமை வெளியிட்டுள்ளதுடன் பல்வேறு வாக்குறுதிகளையும் அவர் வழங்கியிருக்கின்றார். இரு தரப்பிலும் இடம்பெற்ற யுத்தக் குற்றம் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு அமைக்கப்படும் என்றும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி வழங்கியிருக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது. அதற்கு முன்னரேயே வேட்பாளர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுக்கு பல்வேறு விதமான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார். தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும். நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பன உட்பட வெவ்வேறு தேர்தல் மேடைகளிலும் வெவ்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டு வருகின்றபோதிலும் அந்த விடயம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முழுமையாக குறிப்பிடவில்லை. அரசியல் தீர்வு தொடர்பில் எத்தகைய நடவடிக்கை எடுப்பேன் என்பது குறித்து எந்த விடயமும் கோத்தபாய ராஜபக் ஷவினது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை. இவரது தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்துள்ளதாகவும் விரைவில் அது தொடர்பில் விரிவான அறிக்கையொன்றினை கூட்டமைப்பு வெளியிடும் என்றும் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் திட்டங்கள் உள்ளடக்கப்படுமா என்பது தொடர்பிலும் தற்போது கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் கோரிக்கை விடுக்கும்போது அதனை தென்பகுதி அரசியல் தலைமைகள் இனவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலைமை மேலோங்கியிருக்கின்றது.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவான இணக்கப்பாடொன்றுக்கு வந்திருந்தன. இந்த விடயங்கள் தொடர்பில் 13 அம்சத் திட்டமொன்றும் தயாரிக்கப்பட்டு பிரதான வேட்பாளர்களுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் அந்த திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரேயே தென்பகுதியில் அரசியல் சுய லாபத்துக்காக இனவாத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பொதுஜன பெரமுனவின் கோத்தபாய ராஜபக்ஷ இந்தத் திட்டத்தை நிராகரித்ததுடன் இதுகுறித்து பேசுவதற்கே தயாரில்லை என்று அறிவித்திருந்தார். புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச சார்பிலும் இன்னமும் இந்தத் திட்டம் தொடர்பில் உரிய நிலைப்பாடு தெரிவிக்கப்படவில்லை.
இரு பிரதான வேட்பாளர்களும் நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவருகின்றபோதிலும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் இன்னமும் அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை என்று கூறவேண்டியுள்ளது. இத்தகைய நிலைப்பாடு மாற வேண்டும்.
இதேபோன்றே மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் விடயங்கள் தொடர்பிலும் இருதரப்பினரும் வாக்குறுதி வழங்கி வருகின்றனர். பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தான் ஜனாதிபதியானவுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவேன் என்று சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தால் அல்லது வாக்குறுதிகளை அளித்தால் மாற்றுத் தரப்பு அதனை இனவாதக் கண்ணோட்டத்துடன் அணுகி சிங்கள மக்களின் வாக்குகளில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிரதான வேட்பாளர்கள் கருதுவதாகவே தெரிகின்றது.
தற்போதைய நிலையில் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். ஆனால் வழங்கப்படும் வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பின்னர் நிறைவேற்றக் கூடியதாக அமையவேண்டியது இன்றியமையாததாகும். ஏனெனில் தேர்தல் வெற்றிக்காக வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அதனை நடைமுறைப்படுத்தாதுவிட்டால் மக்கள் மத்தியில் அதிருப்தியே ஏற்படும். எனவே இதனை உணர்ந்து வேட்பாளர்கள் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.
( 29.10.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM