நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் நடக்கும் அநியாயத்திற்கும், கன்னியாவில் நடக்கின்ற அனியாயத்திற்கும் சஜித் பிரேமதாச தான் பொறுப்பு. அப்படிப்பட்டவர்கள் தாங்கள் பதவிக்கு வந்தால் தமிழ் மக்களுடைய வாழ்வில் ஒளி ஏற்றுவார்களாம் என முன்னாள் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கு இங்கு இடமே இல்லை. ஏனெனில் கோத்தாபயவே வெற்றி பெறுவார். ஐக்கிய தேசியக் கட்சியினுடைய வேட்பாளர் சஜித் பிரேமதாச சிங்கள மக்களினுடைய வாக்குகளைப் பெற மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை நம்பித் தான் தேர்தலில் இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான தமிழ், முஸ்லிம் மக்கள் கோட்டபாய அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து விட்டார்கள்.

கடந்த கால யுத்த்தின் போது நடந்த பல துன்பியல், சோகங்களையெல்லாம் கோத்தாபய ராஜபக்ஷ மீது சாட்டிவிட்டு தாங்கள் எல்லோரும் நல்லவர்கள் போல் தப்பிக் கொள்ளப் பார்கிறார்கள். ஆனால் தென்னிலங்கையில் பிரச்சாரம் செய்யும் சஜித் பிரேமதாச யுத்தத்தை நடத்தியதே கோத்தாபய ராஜபக்ச இல்லை. சரத்பொன்சேகா தான் நடத்தினார். அவர் தான் களத்தில் நின்று நடத்தினார். அவர்தான் எல்லாவற்றையும் அழித்தார். எல்லாத்தையும் ஒழித்தார் என்று சிங்கள மக்களுக்கு கூறுகிறார்கள். அப்படியென்றால் எது உண்மை?

அத்தனை அழிவுகளுக்கும், அத்தனை சோகங்களுக்கும் காரணமானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள். அவர்களுடைய பிரதிநிதியாக இருக்கின்ற சரத்பொன்சேகா தானே இந்த அழிவுகளுக்கு காரணம். சரத்பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக ஆக்கப்போகிறார்களாம். அவர் பாதுகாப்பு அமைச்சராக ஆகினால் முள்ளியவாய்காலில் என்ன நடந்ததோ அது தான் இங்கு தொடரப் போகின்றது.

கோத்தாபய ராஜபக்சவை பார்த்து அவர் வந்தால் வெள்ளைவான் வரும், தமிழர்கள் துன்பப்படுவார்கள் ஜனநாயகம் அழிந்து விடும் என்று சொல்வதெல்லாம் பச்சைப் பொய். அவர்கள் தமிழர்களுக்கு ஒரு கதையையும், சிங்களவர்களுக்கு இன்னொரு கதையையும் கூறுகிறார்கள். ஆகவே தமிழ் பேசும் மக்களே நீங்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எங்களுடைய பிரதேசம் 30 ஆண்டுகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அழிந்து சிதைந்து போய் கிடக்கிறது. வடக்கு, கிழக்கு பூராகவும் உள்ள தமிழ் மக்களது பிரதேசங்கள் இருண்ட பிரதேசங்களாக இருக்கின்றன. இவற்றை நாங்கள் ஒளிபெறச் செய்ய வேண்டும். இங்கு இருக்கின்ற 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலையில்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கின்ற நிலமைகள் உருவாக்கப்பட வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள் கையேந்தி நிற்கிறார்கள். அவர்களுக்கு கௌரவமான ஒரு வாழ்க்கையை கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தேடிக் கொடுக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை யார் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். சஜித் பிரேமதாச தான் ஜனாதிபதியாக வந்தால் அள்ளித் தருவேன். கொட்டித் தருவேன் என்கிறார். தம்பி சஜித் பிரேமதாச நீ இப்பையும் அமைச்சர் தானே. உன்னுடைய அரசாங்கம் தானே இருக்கிறது. நீ வேண்டுமென்றால் அவை எல்லாவற்றையும் இப்பவே செய்யலாம் தானே. உன்னுடைய அமைச்சுக்கு கீழே தானே தொல்பொருள் திணைக்களம் இருக்கிறது. ஆகையால் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் நடக்கும் அநியாயத்திற்கு சஜித் பிரேமதாச தான் பொறுப்பு. கன்னியாவில் நடக்கின்ற அனியாயத்திற்கும் சஜித் பிரேமதாச தான் பொறுப்பு. அப்படிப்பட்டவர்கள் தாங்கள் பதவிக்கு வந்தால் தமிழ் மக்களுடைய வாழ்வில் ஒளி ஏற்றுவார்களாம். 5 வருடங்களாக என்ன செய்தீர்கள். இப்பொழுதும் ஆட்சியில் இருக்கிறீர்கள். 2015 ஆம் ஆண்டு நீங்கள் ஆட்சிக்கு வந்த போது நாங்கள் நம்பினோம். 

இரண்டு கட்சியும் சேர்ந்து ஆட்சியமைக்கிறார்கள். நல்லாட்சி அமைகிறது என்று நம்பினோம். ஆனால் வந்தவுடனேயே இலங்கை மத்திய வங்கியில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்தார்கள். வந்து ஒரு மததத்திற்குள் இந்த நாட்டை குட்டிச்சுவர் ஆக்கினார்கள்.

தமிழர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் 2016 இற்குள் தீர்வு வரும். 2017க்குள் தீர்வு வரும். தீபாவளிக்குள் தீர்வு வரும். பொங்கலுக்குள் தீர்வு வரும் என்று தமிழர்களை ஏமாற்றினார்கள். இன்றைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கையில் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிருக்கிறது. இப்பொழுது கூட அரசியல் தீர்வை தரவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியைக் கொண்டு செய்யலாம். 

ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்களும் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆகவே நடக்கப் போகும் தேர்தல் உண்மையானவர்களுக்கும், பொய்யானவர்களுக்கும் இடையில் நடக்கப் போகும் தேர்தல். ஏமாற்றுக்காரர்களை நாங்கள் தோற்கடிக்க வேண்டும். எங்களை அழிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து கோத்தாபயவை ஜனாதிபதியாக்கி, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க ஒன்றுபடுவோம் எனத் தெரிவித்தார்.