(செ.தேன்மொழி)

மிஹிந்தலை பகுதியில் ஜீப்புடன் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகாவெல பகுதியில் இன்று காலை 10.35 மணியளவில் அனுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற ஜீப் வண்டியும் எதிர் திசையில் வந்த வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் வேனில் பயணித்த ஐந்து பேர் மிஹிந்தலை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில் 45 வயதுடைய பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜீப் வண்டியின் சாரதி உட்பட ஆறு பேர் காயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவரின் சடலம் மிஹிந்தலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.