ஜனா­தி­பதி தேர்தல் பிர­சாரப் பணிகள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்ற நிலையில் பிர­தான கட்­சி­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. பிர­தான அர­சியல் கட்­சி­களின் சார்பில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் பிர­சாரக் கூட்­டங்­களில் பங்­கேற்று மக்கள் மத்­தியில் தொடர்ச்­சி­யாக பாரிய வாக்­கு­று­தி­களை வழங்கி வரு­கின்ற சூழலில் தற்­போது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன.  

சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் சார்பில் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும்  கோத்­த­பாய ராஜபக் ஷவின் தேர்தல் விஞ்­ஞா­பனம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்ட நிலையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க கள­மி­றங்­கி­யுள்ள தேசிய மக்கள் சக்­தியின் விஞ்­ஞா­பனம் கடந்த சனிக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது.  

அடுத்த ஐந்து வரு­டங்­க­ளுக்கு தாம் ஆட்­சிக்கு வரும் பட்­சத்தில் எவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து நாடு முன்­னேற்­றத்தை நோக்கி செல்­லப்­படும் என்றும் பிரச்­சி­னைகள் எவ்­வாறு தீர்க்­கப்­படும் என்றும் பிர­தான வேட்­பா­ளர்கள் தமது விஞ்­ஞா­ப­னங்­களில் வாக்­கு­றுதி வழங்­கு­வார்கள். வேட்­பா­ளர்­களின் அர­சியல், பொரு­ளா­தார, சமூக, கலா­சார கொள்கைத் திட்­டங்கள் இந்த விஞ்­ஞா­ப­னங்­க­ளூ­டாக மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தப்­படும்.

இந்­த­நி­லையில் இந்த நாட்டில் புரை­யோடிப் போய்க் காணப்­ப­டு­கின்ற தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான பிர­தான கட்­சி­களின் அணு­கு­முறை என்ன என்­பது தொடர்­பான தமிழ் பேசும் மக்­களின் எதிர்­பார்ப்பு மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக காணப்­ப­டு­கி­றது. தமிழ் பேசும் மக்கள் இந்த தேசிய பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் பிர­தான வேட்­பா­ளர்­க­ளிடம் தெளிவா­ன­தொரு நிலைப்­பாட்டை எதிர்­பார்க்­கின்­றனர். இந்­த­நி­லை­யி­லேயே முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் இந்த அர­சியல் தீர்வு தொடர்­பான விடயம் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. இது தொடர்பில் பிர­தான கட்­சிகளின் வேட்­பா­ளர்கள் முன்­வைக்­கின்ற யோச­னைகள், அணு­கு­மு­றைகள், கொள்கைத் திட்­டங்கள் என்­பன தொடர்­பாக தமிழ் பேசும் மக்கள் மிகவும் ஆர்­வத்­துடன் எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர்.  

ஏற்­க­னவே கடந்த வெள்­ளிக்­கி­ழமை சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தனது தேர்தல் விஞ்­ஞா­ப­ன­த்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார். அதில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது தொடர்பில்  நேரடி யோச­னைகள் எதுவும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. மாறாக புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று கொண்­டு­வ­ரப்­படும் என்று அதில் வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பாது­காப்பு, பொரு­ளா­தாரம், தகவல் தொழில்­நுட்­பத்­துறை, கல்வி, சுகா­தாரம், போக்­கு­வ­ரத்து உட்­பட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் கோத்­த­பாய ராஜபக் ஷவின் கொள்கைப் பிர­க­டனம் உள்­ள­டக்­கங்­களைக் கொண்­டி­ருக்­கி­றது. எனினும் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் தெளிவான விடயம் இருக்­கின்­றதா என்­பது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. அதா­வது  நாட்டின் ஒற்­றை­யாட்சி முறை மற்றும் பௌத்த மதத்­துக்கான முன்­னு­ரிமை என்­பன தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­துடன் அனைத்து கட்­சி­க­ளி­னதும்  உள்­ள­டக்­கத்­து­ட­னான பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவின் ஊடாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும். புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி, பௌத்த மதத்­துக்­கான முன்­னு­ரிமை, மத சுதந்­திரம், அடிப்­படை மனித உரிமை ஆகி­யவை அர­சி­ய­ல­மைப்பின் முக்­கிய பகு­தி­க­ளாக இருக்கும். நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை, கலப்பு தேர்தல் முறை, மாகா­ண­சபை முறைமை மற்றும் சட்­டத்தின் ஆட்­சிப்­ப­டுத்தல் என்­பன தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­படும் என்று கோத்­த­பாயவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்­பாக தனது ஆட்சிக் காலத்தில் எவ்­வா­றான அணு­கு­முறை முன­்னெ­டுக்­கப்­படும். அதற்­கான பொறி­முறை என்ன, எந்தத் தரப்­பு­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும் போன்ற விட­யங்கள் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.  

இதே­வேளை ஆளும் கட்­சியின் பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­பனம் புதன்­கி­ழமை வெளி­யி­டப்­படும் என எதி­ர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. சஜித் பிரே­ம­தாச தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் எவ்­வா­றான அணு­கு­மு­றையை முன்­வைப்பார் என மக்கள் எதிர்­பார்த்­துள்­ளனர். இவ்­வாறு தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் அர­சியல் தீர்வு தொடர்­பாக முன் வைக்­கப்­படும் யோச­னைகள் மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக பார்க்­கப்­ப­டு­கி­றது.  

விசே­ட­மாக இரண்டு பிர­தான கட்­சி­க­ளி­னதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை ஆராய்ந்து பார்த்­து­விட்டே யாருக்கு ஆத­ரவு அளிப்­பது என்­பது தொடர்­பாக தீர்­மானம் எடுக்­கப்­படும் என்று பிர­தான தமிழ் கட்­சிகள் அறி­வித்­தி­ருக்­கின்­றன. அதன்­படி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­யி­லான ஐந்து தமிழ் கட்­சி­களும் இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளி­னதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை ஆரய்ந்து பார்த்­து­விட்டு விரைவில் தமது தீர்­மா­னங்­களை அறி­விக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.  

நாட்டின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தான ஒரு அணு­கு­மு­றையைப் பின்­பற்றி நியா­ய­மான மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்­தி­செய்­யக்­கூ­டிய ஒரு தீர்வுத் திட்டம் காணப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தமிழ் பேசும் மக்­க­ளுக்கு அர­சியல் தீர்வுத் திட்டம் ஒன்று அவ­சியம் இல்லை என்று எந்­த­வொரு வேட்­பா­ளரும் கரு­தி­விடக் கூடாது. தமிழ் பேசும் மக்கள் இலங்­கைக்கு சுதந்­திரம் கிடைத்த காலத்­தி­லி­ருந்து தமக்­கான தீர்வுத் திட்­டத்தை வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.  

வடக்கு, கிழக்கில் தமது அர­சியல் அபி­லா­ஷைகள் பூர்த்­தி­செய்­யக்­கூ­டிய வகை­யி­லான ஒரு அர­சியல் தீர்­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­பட வேண்டும் என்­பது தமிழ் மக்­களின் நீண்­ட­கால கோரிக்­கை­யா­க­வுள்­ளது. கடந்த காலங்­களில் இந்த அர­சியல் தீர்வை வலி­யு­றுத்­திய போராட்­டங்கள் பல வடி­வங்­களைப் பெற்ற போதிலும் அவை சரி­வு­களை சந்­தித்­த­போ­திலும் தமிழ் மக்­களின் அந்த கோரிக்கை நீடித்து வரு­கின்­றது. இதனை இரண்டு பிர­தான கட்­சி­க­ளி­னதும் வேட்­பா­ளர்கள் புரிந்­து­கொள்ள வேண்டும். தமிழ் பேசும் மக்­களின் அபி­வி­ருத்தி மற்றும் பௌதீக வளப் பிரச்­சி­னை­களை மட்டும் தீர்த்­து­விட்டால் போதும், அர­சியல் தீர்வு அவ­சி­ய­மில்லை என்று எந்த வேட்­பா­ளரும் கரு­தி­வி­டக்­கூ­டாது. இரண்டு வேட்­பா­ளர்­களில் யார் வெற்­றி­பெற்று இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­னாலும் அர­சியல் தீர்வுத் திட்­டத்தை காணும் விட­யத்தில் தமது பொறுப்­பி­லி­ருந்து விலகி செயற்­பட முடி­யாது. யார் வெற்றி பெற்­றாலும் யார் அடுத்த 5 வரு­டங்­க­ளுக்கு இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­னாலும் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தை புறக்­க­ணிக்க முடி­யாது. அதற்­கான தீர்வு யோச­னைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும்.

மாறாக வர­லாறு முழு­வதும் இடம்­பெற்­றதைப் போன்று தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னையை இழுத்­த­டித்­துக்­கொண்டு செல்­லலாம் என யாரும் எதிர்­பார்க்க முடி­யாது. தற்போதைய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் என பரவலாக நம்பப்பட்டது. அதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆளும் கட்சிக்கு ஆதரவை வழங்கி வந்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தைக் காப்பாற்றி தூக்கி நிறுத்தியது. எனினும் இறுதியில் கூட்டமைப்பின் அந்த விட்டுக்கொடுப்புகளும் முயற்சிகளும் வீணாகிப் போனதே  தவிர தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.  

எனவே அடுத்த ஆட்சியிலும் இவ்வாறான பாதக நிலைமைகள் நீடிக்கக்கூடாது. தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நியாயமான மற்றும் அவர்களது அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யக்கூடிய அரசி யல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டியது மிகவும் அவசி யமானதும் பொறுப்புமிக்கதுமாகும் என்பதை பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் புரிந்துகொண்டு செயற்படுவது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

(28.10.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம்)