எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில், பிர­தான இரு கட்­சிகள் சார்பில் கள­மி­றங்­கி­யுள்ள இரு வேட்­பா­ளர்­க­ளையும் மக்­களின் ஒப்­பீட்டு பார்­வையில் நோக்­கு­மி­டத்து, நேர­டி­யாக மக்­க­ளி­டத்­திற்கே சென்று அவர்­களின் சுக துக்­கங்­களில் பங்கு கொள்ளும் ஒரு மக்கள் சேவ­க­னாக சஜித் பிரே­ம­தா­ச­வும், பொது­மக்­க­ளுடன் நேரடி தொடர்பில் அல்­லா­ததும், பாது­காப்­புத்­து­றை­க­ளுடன் மட்டும் சம்­பந்­தப்­பட்ட மக்­க­ளுக்கு பரீட்­ச­ய­மற்ற ஒரு அதி­கா­ரி­யா­க­ கோத்தபாய ராஜ­பக்­ ஷவும் உள்ளனர் என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். தில­கராஜ் தெரிவித்தார்.

செவ்வியின் முழு விபரம் வரு­மாறு:

கேள்வி: எதிர்­வரும் தேர்­தலில் பிர­தான இரு வேட் பா­ளர்­க­ளாக கள­மி­றங்­கி­யி­ருக்கும் சஜித் பிரே­மதாச மற்றும் கோத்­தபாய ராஜ­பக்ஷ குறித்து உங்களின் தனிப்­பட்ட நிலைப்­பா­டென்ன?

பதில்: எனது நிலைப்­பாடு என்­ன­வென்றால், இரு­வ­ருக்­குமே இந்த நாட்டில் ஒரு அர­சியல் வர­லாறு இருக்­கி­றது. அதில், சஜித் பிரே­ம­தா­சவை எடுத்­துக்­கொண்டால், அவ­ரது தந்தை இந்­நாட்டு ஜனா­தி­ப­தி­யாக இருந்தார் என்­பதும், அவரின் மறைவின் பின்னர் அவர் தந்­தையின் வழி­யி­லேயே அர­சி­யலில் ஈடு­பட்­டு­ வந்­த­தாக அவ­ருக்கு ஒரு அர­சியல் வர­லாறு இருக்­கி­றது. அதே வகையில், கோத்தபாய ராஜ­பக்­ஷவை எடுத்து நோக்­கினால், அர­சி­யல்­வா­தி­யாக இல்­லாமல், ஒரு அதி­கா­ரி­யா­கவே அவ­ருக்­கான வர­லாறு அமை­கி­றது.

அதா­வது, அவ­ரது சகோ­தரர் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில், பாது­காப்பு, இரா­ணு­வத்­து­றை­களில் பணி­யாற்­றி­யி­ருந்­த­மையால், அவ­ரது தளம் வேறு­பட்­ட­தாக காணப்­ப­டு­கி­றது. இரு­வ­ருமே நாட்டின் முந்­தைய ஜனா­தி­ப­தி­க­ளோடு இரத்­த­வழி தொடர்­பு­பட்டு வந்­த­வர்­க­ளாக இருப்­பினும், ஒருவர் அர­சி­யல்­வா­தி­யா­கவும், மற்­றொ­ருவர், பாது­காப்பு, இரா­ணு­வத்­து­றைகள் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­யா­க­வுமே நான் பார்க்­கிறேன்.

கேள்வி: பிர­தான இரு வேட்­பா­ளர்­களில், சஜித் பிரே­ம­தா­சவுக்கே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பலத்த ஆத­ரவு இருப்­ப­தாக கூறப்­படும் நிலைப்பாட்டின் உண்­மைத்­தன்மை பற்றிகூறு­வீர்­களா..?

பதில்: நான் ஏற்­க­னவே கூறி­ய­தைப்­போன்று, சஜித் பிரே­ம­தாச ஒரு அர­சி­யல்­வா­தி­யாக இருந்து வந்­தவர் என்­பதால், மக்­க­ளி­டத்தில் சென்று, பேசி சேவை­யாற்றும் ஒரு மக்கள் சேவ­க­னாவும் இருந்­தி­ருக்­கிறார். அத்­தோடு, சஜித்தின் தந்­தை­யா­ரான ரண­சிங்க பிரே­ம­தாச, சாதா­ரண குடும்­பத்­தி­லி­ருந்து வந்­த­வரும், மக்­க­ளோடு மக்­க­ளாக அவர்­களின்  சுகதுக்­கங்­க­ளோடு கலந்­து­கொண்­ட­வரும், ஏழை­களின் ஜனா­தி­ப­தி­யா­கவும் வாழ்ந்து மறைந்­தி­ருக்­கிறார். மறுபக்கம் கோத்தபாய ராஜ­பக்­ஷ   ஒரு அதி­கா­ரி­யாக செயற்­பட்­டதன் கார­ண­மாக அவர் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களை மட்டும் வழி­ந­டத்­த­கூ­டி­யதும், பொது­மக்­க­ளி­டத்தில் பரீட்­ச­யமே அல்­லாத ஒரு பிரதேசசபை உறுப்­பி­ன­ரா­கக்­கூட மக்­க­ளி­டத்தில் பரீட்­சய­மற்­ற­வ­ரா­கவே மக்கள் பார்க்­கின்­றனர். இதில் சிறு­பான்மை மக்கள் மாத்­தி­ர­மல்ல, சிங்­கள மக்­களும் கூட இவர் பரீச்­சய­மில்­லா­தவர் என்­பதால் சற்று தூரத்தில் நிறுத்­தியே பார்க்­கின்­றனர்.

இதில், சிறு­பான்­மை­யி­னரை எடுத்த நோக்­கினால், கடந்த கால யுத்­தத்­தின்­போது, அதற்கு முன்­னின்று தலைமை தாங்­கி­ய­வ­ரா­கவும், அதனை வெற்­றி­கொண்­ட­வ­ரா­கவும், கோத்­தபாயவை நோக்­கு­மி­டத்து, அந்த யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட சிறு­பான்மை மக்கள் மத்­தியில் ஒரு வெறுப்­பு­ணர்வு ஏற்­க­னவே இருக்­கி­றது. இந்­நி­லையில், சிறு­பான்மை மக்­கள் இரு­வ­ரையும் ஒப்­பீட்டு பார்க்­கின்­றனர். இதில் சஜித் பிரே­ம­தா­சவே தமது தெரி­வாக இருக்­கக்­கூடும் என கரு­து­கி­றார்கள்

கேள்வி: ஐ.தே.க.வின் தலை­வரும் பிர­த­ம­ருமான ரணில் விக்­கி­ர­ம­சிங்க , அக்­கட்­சியின் பிரதித்தலை­வ ரான சஜித் பிரே­ம­தா­சவை இறுதி தறுவாய் வரையும் தனது கட்­சியின் வேட்­பா­ள­ராக கள­மி­றக்க தயங்­கி யதேன்?

பதில்: தயக்கம் என்­ப­தற்கு அப்பால், அதற்குள் ஒரு கார­ண­மி­ருக்­கி­றது. ஜனா­தி­பதி தேர்­தலில், மாற்று அணியைப் பொறுத்­த­வரையில், விரும்­பியோ விரும்­பா­மலோ அவர்­களின் வேட்­பா­ள­ராக கோத்தபாயவையே கள­மி­றக்­கு­வ­தாக அண்மைக் காலங்­களில் பெரி­தாகத் பேசப்­பட்டு­ வந்­தது. ஐ.தே.க. வைப் பொறுத்­த­வ­ரைக்கும் சஜித்தை பார்க்­கிலும் மூத்த தலை­வர்கள் பலர் இருக்­கின்­றார்கள். இருந்­த­போதும், மேற்­கத்­தேய நாடு­களில் தற்­போது இளை­ய ­த­லை­வர்கள் புதிய விட­யங்­களை உள்­வாங்கி நாட்டை சிறப்­பாக கொண்­டு­செல்வர் என்ற ஒரு நம்­பிக்கை மக்கள் மத்­தி­யிலும் எழத்­தொடங்­கி­யது. இத­ன­டிப்­படை­யி­லேயே சஜித்தை கட்­சியின் ஒரு இளைய தலை­வ­ராக்க அனை­வரும் ஒற்­று­மை­யாக ஒன்று சேர்ந்து ஒரு­ம­ன­தாக தெரிவு செய்து, களத்தில் இறக்­கினர்.

கேள்வி: அண்­மையில், ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்தபாய ராஜ­பக்­ஷ தமிழ் அர­சியல் கட்­சி­களின் கோரிக்­கை களை ஒரு போதும் ஏற்­க­மாட்டார் என்ற  பாரா­ளு மன்ற உறுப்­பினர் விமல வீர­வன்­சவின் சூளு­ரைக் கான காரணம் என்ன?

பதில்: அவர்­களின் கட்­சியைப் பொறுத்­த­வரையில் நேர்த்­தி­யான திட்­ட­மிட்ட தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கி­றார்கள். அதா­வது, பெரும்­பான்­மை­யினர் மத்­தியில் ஒரு வித­மா­கவும், பொது­வான மக்கள் மத்­தியில் நான் உங்கள் சகோ­தரன், உங்­களை பாது­காப்பேன் என ஒரு வித­மா­கவும் பேசு­வ­தாக அவர்­களின் தந்­திரம் அமைந்­தி­ருக்­கி­றது. இதற்கு சற்று மாறாக கோத்தபாயவுக்கு பேச்­சாற்­றலே இல்­லை­யேன்றே கூற­வேண்டும். அவரின் ஒரே இலக்­காக தேசிய பாது­காப்பு அமை­கி­றது. இதைப்­பற்றி மட்­டுமே அவர் திரும்ப திரும்ப மேடை­களில் பேசு­வதை நாம் அவ­தா­னிக்­கிறோம். நாட்டில் தேசிய பாது காப்பு முக்­கியம் பெறு­கின்ற அதே­வேளை, தேர்­தலில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்கும் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து, இவ்­வாறு பாது­காப்பை பற்றி மட்­டுமே பேசு­வது நாட்டின் எதிர்­கா­லத்­துக்கு எவ்­வ­ளவு தூரம்  சாத்­தி­ய­மாக அமை­யு­மென கூற­மு­டி­யாது. அத்­தோடு, அண்­மையில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் இவ்­விடயம் அம்­ப­ல­மா­னது. ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க முடி­யா­த­வ­ரா­கவும், அர­சியல் சார்ந்த எது­வித அனு­ப­வமும் அற்­ற­வ­ரா­கவும், பல்­லின மக்கள் வாழும் நாட்டின் அபி­வி­ருத்தி குறித்தோ, பொரு­ளா­தாரம் குறித்தோ அடிப்­படை அறி­வில்­லா­த­வ­ரா­கவே தெரி­ய ­வ­ரு­கி­றது. இந்­நிலையில் விமல் வீர­வன்­சவின் இக்­க­ருத்­தா­னது, தேர்­தலை வெற்­றி­கொள்­வ­தற்­காக பெரும்­பான்­மை­யின மக்­களை கவ­ரு­வ­தற்­கான ஒரு யுக்­தியே என நான் கரு­து­கிறேன்.

கேள்வி: நல்­லாட்சி அர­சாங்­கத்தால் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­யாக கரு­தப்­படும் சம்­பள பிரச்­சி­னைக்கு கடந்த 4 வரு டங்க­ளா­கவே ஒரு முழு­மை­யான தீர்வு பெற்று கொடுக்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில், மலை­யக மக்கள் ஐ.தே.க.வின் வேட்­பா­ளரை ஆத­ரிப்­பார்கள் என நினைக்­கின்­றீர்­களா...?

பதில்: பெருந்­தோட்ட மக்­களின் சம்­ப­ளப்­பிரச்­சி­னை­யென்­பது, நல்­லாட்சி அர­சாங்­கத்தில் மாத்­திரம் காணப்­பட்­ட­தொன்­றல்ல. இதற்­கொரு பெரிய வர­லாறே இருக்­கி­றது. சம்­ப­ளப்­பி­ரச்­சினை மாத்­திரம் தான் இவர்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­யென கூறு­வது முற்­றிலும் தவ­றா­னதோர் கருத்­தாகும். சம்­ப­ளப்­பி­ரச்­சினை இருக்­கின்­றமை உண்­மைதான். இந்த நாட்டில் பல வருட கால­மாக பேசப்­பட்­டு­வரும் பிரச்­சி­னை­களும் பெருந்­தோட்ட மக்­களின் சம்­ப­ளப்­பி­ரச்­சி­னையும் ஒன்­றாகும். ஆனால் கடந்த நான்கு வரு­டங்கள் மாத்­திரம் தான் இப்­பி­ரச்­சினை காணப்­ப­டு­கி­ற­தென யாரா­வது கூறு­வார்­க­ளாயின், அது நகைப்­புக்­கு­ரிய விட­யமே.

இதற்கு உதா­ர­ண­மாக, பத்து சதம் சம்­பள பிரச்­சி­னைக்­காக 1940ஆம் ஆண்டு உயிர் நீத்த போராட்ட தியாகி முல்­லோயா கோவிந்­தனை குறிப்­பி­டலாம். எனவே நாற்­ப­து­க­ளி­லி­ருந்து இருக்­கக்­கூ­டிய பிரச்­சி­னையை நல்­லாட்சி அர­சாங்­கத்தில் மாத்­தி­ரமே மட்­டுப்­ப­டுத்­து­வது தேர்­தலை இலக்­காக கொண்­டது.

இந்­நி­லையில் இச்­சம்­பளப் பிரச்­சி­னையில் அர­சாங்­கத்தில் தலை­யீடு குறைந்­த­மைக்­கான பிர­தான காரணம் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் என்­பதே உண்மை. ஆரம்­பத்­தி­லி­ருந்தே இந்த கூட்டு ஒப்­பந்­தத்தை நாங்கள் வன்­மை­யாக கண்­டித்தோம். அர­சாங்­கத்­திடம் கலந்­து­ரை­யாடி, முழு­மை­யாக தனியார் கையில் கொடுத்­ததன் மூலம், அர­சாங்க பொறி­முறைக்கு அப்­பாற்­பட்­ட­தொன்­றாக மாற்றம் பெற்­ற­தனால், இச்­சம்­பளப் பிரச்­சி­னைக்கு கார­ணமே அன்றி நல்­லாட்சி அர­சாங்­க­மென்­பது, அவர்­களே அவர்­களின் முகத்­தி­ரையை கிழித்­துக்­கொள்­கின்ற செயற்­பா­டாகும்.

கேள்வி: ஐ.தே.க வின் வேட்­பாளர் சஜித் பிரே­ம தாச­வுக்கு ஆத­ரவு வழங்க, தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியால் முன்­வைக்­கப்­பட்ட முக்­கிய நிபந்­த­னைகள் எவை?

பதில்: நாங்கள் நிபந்­த­னை­களை முன்­வைக்­க­வில்லை. நாங்கள் பிர­தா­ன­மான பத்து கோரிக்­கை­களை முன்­வைத்­துள்ளோம். நாட்டின் ஒட்­டு­மொத்த மக்­களும் ஒன்­றி­ணைந்து, ஒரு ஜனா­தி­ப­தியை தெரி­வு­செய்யும் ஒரு தேர்­தலே ஜனா­தி­பதி தேர்­த­லாகும். இந்­நி­லையில், முப்­பது, நாற்­பது நிபந்­த­னை­களைக் கொண்டு சென்று முன்­வைத்து பேசு­வதில் எது­வித பய­னு­மில்லை. எனவே நாங்கள் எங்­க­ளது மலை­யக மக்­க­ளுக்கு மிக அவ­சி­ய­மா­ன­வற்றை வரை­ய­றுத்து, நிலம், வீடு,கல்வி, சுகா­தாரம், நிர்­வாகம், மொழி என்­கின்ற அடிப்­ப­டையில் சுருக்­க­மாக விளக்­கி­ய­தான விஞ்­ஞா­ப­னத்தை நாம் சமர்ப்­பித்­துள்ளோம்.

கேள்வி: மலை­ய­கத்­துக்­கான தனி­யொரு பல்­க லைக்­க­ழகம் அமைக்­கப்­ப­டு­மென கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்ட நிலை­யிலும், இது­வ­ரையில் இது­தொ­டர்­பி­லான எது­வித நட­வ­டிக் கை­களும் எடுக்­கப்­ப­டா­மைக்­கான காரணம் என்ன?

பதில்: கடந்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் நாங்கள் 23 கோரிக்­கை­களை முன்­வைத்தோம். அதில், 17 கோரிக்­கை­களை நாங்கள் நிறை­வேற்­றி­யி­ருக்­கிறோம். நாங்கள் வெளி­யிட்ட கோரி­க் கைகள் பத்­தி­ரி­கையில் வெளி­வந்­தி­ருந்­தன. அதை நேர­டி­யாக மக்கள் பார்­வை­யிட்டு எங்­களை கணித்­துக்­கொள்­ள­லா­மென நான் தைரி­ய­மாக கூறு­கிறேன். இதில் நாங்கள் செய்­து­ மு­டிக்­காத ஒரு வேலைத்­திட்­ட­மாக இப்­பல்­க­லைக்­க­ழக விடயம் இருக்­கி­ற­தென்­பது உண்மை. ஆனால் இது தொடர்­பாக நாங்கள் எதுமே செய்­ய­வில்லை என்­றில்லை. வெறு­மனே அர­சி­யல்­வா­திகள் மாத்­திரம் ஒன்­றி­ணைந்து இவ்­வி­டயம் தொடர்­பாக ஆரா­ய ­மு­டி­யாது. எனவே பல கல்­வி­மான்கள், பட்­ட­தாரிகள், அறி­ஞர்கள், பேரா­சி­ரி­யர்­களை ஒன்று சேர்த்து, அமைச்சர் மனோ கணேசனின் தலை­மையில் ஒரு குழுவை நிய­மித்து, நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் இப்­பல்­க­லைக்­க­ழகம் அமை­ய­வேண்டும் என தீர்­மா­னித்து, ஒரு சாத்­தி­யப்­பாட்­ட­றிக்­கையை ஒழுங்கு செய்­துள்ளோம். இதற்கு நாம் 'ஹட்டன் பல்­க­லைக்­க­ழகம்' என பெய­ரிட்­டுள்ளோம்.

மாறாக இவ்­வா­றான சாத்­தி­யப்­பாட்­ட­றிக்­கைகள் ஏது­மில்­லாமல், நேர­டி­யாக அர­சாங்­கத்தை நாடி, இப்­பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் பேசி­யி­ருந்தால் சில­வே­ளை­களில், அது அவர்­க­ளுக்கு சார்­பாக அமைந்­தி­ருக்­கலாம். எனவே வெற்­றி­க­ர­மாக மலை­ய­கத்­திற்­கென்று ஒரு பல்­க­லைக்­க­ழகம் அமை­ய­வேண்­டு­மென கரு­தியே, முதலில் எமக்கும் முக்­கிய விட­யங்கள் தொடர்பில் ஆராய்ந்தே அர­சாங்க உத­வியை பெற தீர்­மா­னித்­துள்ளோம். இது­தொ­டர்பில், ஊட­கங்­களில் பேசப்­ப­டா­த­போதும் கூட அர­சியல் மட்­டத்தில் நாங்கள் மலை­ய­கத்­திற்­கென ஓர் பல்­க­லைக்­க­ழகம் அமைப்­பதில் உறு­தி­யா­கவே இருக்­கிறோம்.

கேள்வி: தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் நுவரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற ரீதியில், நீண்ட நாட்­க­ளாக இழு­ப­றி­யாக இருக்கும் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்பளப் பிரச்சி­னைக்கு தீர்வு தான் என்ன?

பதில்: ஆம். சம்­பள பிரச்­சினை தொடர்­பாக நான் ஏற்­க­னவே கதைத்­தி­ருக்­கிறேன். ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற ரீதியில், நான் இலங்கை எல்­லை­யைத்­தாண்டி ஐ.நா. வரை இது தொடர்­பாக பேச ஆரம்­பித்­து­விட்டேன். உண்­மையில் கூறப்­போனால், இந்­தச்­ச­மூகம் நாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது, மலை­யக மக்கள் என்ற பெயரில் அல்ல. நாம் வைத்­துக்­கொண்ட பெயர் தான் அது. இன்­று­வரை இலங்­கையின் சட்ட ஏடு­களில் 'இந்­தி­யத்­த­மிழர்' என்றே கூறு­கின்­றார்கள். இதைக்­கூற கார­ண­மென்­ன­வென்றால், இவ்­வாறு வெவ்­வேறு பெயர்­களால் அழைக்­கப்­பட்ட மலை­யக மக்­களின் ஆதி­கா­லத்தை எடுத்து நோக்­கினால், அவர்­களை "கூலி" என அழைத்­தி­ருக்­கி­றார்கள். அதனால், அவர்கள் சம்­பந்­தப்­பட்ட அனைத்து விட­யங்­க­ளுமே இந்த கூலி என்ற சம்­ப­ளத்­தோடு சம்­பந்­தப்­ப­டுத்தி பார்த்­தி­ருக்­கி­றார்கள். இந்த கூலி­க­ளோடு பேசு­வ­தற்கே பிரித்­தா­னியர், ஒரு­வி­த­மான தமிழைக் கண்­டு­பி­டித்து, அக­ரா­தி­யொன்­றையும் உரு­வாக்கி, கற்­றி­ருக்­கி­றார்கள். இதற்கு பெயர் "கூலித்­தமிழ்" அதா­வது, கூலித்­தொ­ழி­லா­ளி­க­ளுடன் பேசு­வ­தற்­கான தமிழே அது. இன்றும் நாம் பரி­ணாம வளர்ச்­சி­யினால் அதை விட்டு வெளியே வந்­தாலும் கூட, புற சமூகம் தொடர்ச்­சி­யாக அவர்கள் அவ்­வாறே பார்ப்­ப­தனால், அவர்­க­ளுக்கு இதை தவிர்த்து பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்ற போதிலும் கூட, இந்த சம்­ப­ளப்­பி­ரச்­சி­னையை மட்டும் பூதா­க­ர­மாக்கி காட்ட முற்­ப­டு­கின்­றனர்.

ஒட்­டு­மொத்த மலை­யக மக்­களின் தொகை பதி­னைந்து இலட்­ச­மாக இருக்­கின்ற போதிலும், அதில் ஒன்­றரை இலட்சம் மக்கள் மாத்­தி­ரமே இச்­சம்­ப­ளப்­பி­ரச்­சி­னைக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர். ஆனால் மாறாக ஒட்­டு­மொத்த மலை­யக மக்­க­ளுக்­குமே இது மாத்­தி­ரமே ஒரு பிரச்­சி­னை­யாக சித்­த­ரிக்க முற்­ப­டு­வது ஒரு தவ­றான பக்­க­மாகும். ஆனால் இந்த ஒன்­றரை இலட்சம் மக்­களின் பிரச்­சி­னையும் பிர­தான பிரச்­சி­னையே.ஆனால் இதனை எவ்­வாறு தீர்­க­்கலா­மென்றால், உலக அரங்கில் இலங்கை தேயி­லைக்­கென ஒரு முக்­கிய இடம் இருக்­கி­றது. இலங்­கையில் எவ்­வாறு தேயிலை உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­ற­தென்­பது தொடர்பில் வெளி­நா­டு­க­ளுக்கு தெரி­யப்­படுத்த வேண்டும். இது தொடர்­பா­கவே நான் ஐ. நா. வரை சென்று பேச ஆரம்­பித்­துள்ளேன்.

இலங்கை தேயி­லையில், உயர் நிலை, தாழ் நிலை என இரு பிரி­வு­க­ளாக ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்ற நிலை­யிலே இதில், 72 வீதம் தாழ்­நிலை தேயி­லை­யி­லி­ருந்தும் 28 வீதம் உயர் நிலை­யி­லி­ருந்­துமே ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றது. இருப்­பினும் தேயிலை உற்­பத்­திக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் நிலத்தில் 70 வீதம் உயர் நிலை தேயிலை உற்­பத்­திக்கும், 30வீதம் நிலம் தாழ் நிலை தேயிலை உற்­பத்­திக்கும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. எனவே அதி­க­ள­வான நிலத்தை பயன்­ப­டுத்தி குறை­வான உற்­பத்­தி­யையும், குறை­வான நிலப்­ப­ரப்பை பயன்­ப­டுத்தி அதி­க­ள­வான தேயி­லை­யை­யுமே ஏற்­று­மதி செய்­கின்­றனர். இது பெரும் பார­பட்­ச­மாகும். இதை­விட முக்­கி­ய­மாக கூறக்­கூடி­ய­தென்­ன­வென்றால், அந்த 28 வீத தேயிலை ஏற்­று­ம­திக்­காக ஒன்­றரை இலட்சம் தொழி­லா­ளர்­களும் (இவர்­களில் 100 வீதம் பெருந்­தோட்ட மக்கள்), 72 வீத தேயிலை உற்­பத்­திக்­காக நில உட­மை­யா­ளர்கள் (இவர்­களில் 99 வீதம் சிங்­க­ள­வர்கள்) பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள். இதுவே சர்­வ­தேச சமூ­கத்­தினர் புரிந்­து­கொள்­ளக்­கூ­டிய மிக வெளிப்­ப­டை­யான பார­பட்­ச­மாகும். இது தொடர்­பாக முதல் முறை­யாக நாமே ஐ.நா.வில் சென்று பேசியும் உள்ளோம். இது­ தொ­டர்­பாக சர்­வ­தேச ரீதி­யாக இருக்கும் மலை­யக உற­வு­களும் இவ்­வி­ட­யத்தை அழுத்­த­மாக கையில் எடுத்து, ஆங்­காங்கே ஒரு பேசு பொரு­ளாக்­கு­வதன் மூலம் நிச்­ச­ய­மாக, சம்­பள பிரச்­சி­னை­யல்­லாத ஒரு தொகை பிரச்­சி­னைக்கு அப்­பாற்­பட்டு, உரிமை சார்ந்த விட­ய­மாக மாற்­றப்­ப­ட­வேண்டும்.

கேள்வி: முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா­விற்கு அதி­க­மா­கவே சம்­பளம் கொடுக்­கலாம் என தெரி­வித்­துள்­ளாரே? உங்­க­ளு­டைய அர­சாங்கம் அமை­ய­பெற்றால் இந்த 1000 ரூபா கோரிக்கை நிறை­வேற்­றப்­ப­டுமா?

பதில்: இல்லை. நான் ஏற்­க­னவே கூறி­யதை போன்று இது தொகைக்குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட விடயம் அல்ல. எங்­க­ளது விஞ்­ஞா­ப­னத்தில் கூறி­ய­தைப்­போன்று, எமது பெருந்­தோட்­டத்­துறை மீள்­கட்­ட­மைப்பு தொடர்­பாக நாங்கள் தெளி­வாக கூறி­ருக்­கிறோம். நாங்கள் புதி­தாக எமது மக்­க­ளுக்­காக ஒன்றும் கேட்­க­வில்லை. பெரும்­பான்மை மக்­க­ளுக்கு எவ்­வாறு சிறு தோட்ட உட­மை­யாக தேயி­லை­துறை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றதோ, அதே போன்று, மலை­யக தமிழ் மக்­க­ளுக்கும் வழங்­குங்கள் என்­பதே எமது கோரிக்கை. மறு­புறம் பார்க்­கையில், இலங்­கையில் 1000 ரூபாய் பிரச்­சி­னை­யாக மட்டும் பார்க்­கப்­ப­டு­கின்­றதே தவிர பெரும்­பான்மை மக்­க­ளுக்கு இது ஒரு பிரச்­சி­னை­யா­கவே தெரி­ய­வில்லை.

இந்த 1000 ரூபாயை மஹிந்த ராஜ­பக்ஷ பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக அவ­ரிற்கு கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் 52 நாட்கள் அவ­காசம் வழங்­கப்­பட்­ட­போதும் அவரால் பெற்­றுக்­கொ­டுக்­க­மு­டி­யாமல், மஹிந்த கூறிய காரணம் ஆறு­முகன் தொண்­டமான் இது தொடர்­பாக எனக்கு எது­வித தக­வலும் வழங்­க­வில்லை என்­பது மட்­டுமே. ஆனால் ஒரு வர­லாற்று விட­ய­மாக, இச்­சம்­பள விட­யத்தை கொண்டு சென்று நல்­ல­தொரு தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யு­மென எனக்கு நம்­பிக்கை இருக்­கி­றது.

கேள்வி: மலை­யக கல்வி வளர்ச்­சியில் அர­சி­யல்­வா­தி­களின் தலை­யீடு தடை­யாக இருப்­ப­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. இது குறித்த உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில்: இது அவ­ரவர் கூறு­கின்ற அபிப்­பி­ராயம் என நான் கரு­து­கிறேன். ஒருவர் கல்வி கற்­பதில் அர­சியல் தலை­யீடு செல்­வாக்கு செலுத்த முடி­யு­மென கூற­மு­டி­யாது. இதற்­கப்பால், கல்­விசார் நிர்­வா­கங்­களின் மீது அர­சியல் தலை­யீடு காணப்­ப­டலாம். அதா­வது, ஆசி­ரி­யர்­களை தங்கள் பக்கம் வைத்­துக்­கொள்ள வேண்டும் என்­ப­தற்­காக அவர்­க­ளுக்கு தொழில்சார், சுய சலு­கை­களை வழங்­கு­வதன் மூலம் தங்கள் கட்­சிக்கு வலு சேர்த்­து­கொள்ள முனை­கின்­றனர். ஆனால் அனைத்து ஆசி­ரி­யர்­களும், நிர்­வா­கி­களும் இப்­ப­டி­யான கட்சி சார்ந்­த­வர்­க­ளாக இருப்­ப­தில்லை. எனவே ஒட்டு மொத்த மலை­யக கல்வி நட­வ­டிக்­கை­க­ளிலும் அர­சி­யல்­வா­தி­களின் தலை­யீடு தடை­யாக அமை­யு­மென எண்­ண­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. கடந்த காலங்­களை விட மலை­ய­கத்­திலே கல்வி வளர்ச்சி சிறப்­பாக அமைந்­துள்­ள­மையை பல பெறு­பே­றுகள் வாயி­லாக காண­கூ­டி­ய­தாக உள்­ளது.

கேள்வி: ஹட்டன் கல்வி வல­யத்தின் சில பாட­சா­லை­களில் சாதா­ரண தரத்­திற்கே மாண­வர்கள் அனு­ம­திக்­கப்­ப­டாமல் அவர்­களின் உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. இது பாரிய அடிப்­படை உரிமை மீறல் பிரச்­சி­னை­யாகும். அது பற்றி உங்­க­ளுக்கு தெரி­ய­வந்­ததா?

பதில்: ஆமாம். நான் எற்­க­னவே கூறி­ய­தை­போன்று, ஹட்டன் கல்வி வலய தமிழ் பாட­சா­லை­களில் இவ்­வா­றான அர­சியல் தலை­யீ­டுகள் இருப்­ப­தாக கடந்த காலங்­களில் அதிக முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. ஒரு கல்வி அதி­கா­ரியும் பாட­சா­லையின் அதி­பரும் தமது பாட­சா­லையின் பெறு­பேற்றை 100 % பெற்­றுக்­கொள்­வ­தற்­காக எடுக்­கின்ற முயற்­சி­க­ளிலே மாண­வர்கள் பெரிதும் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். பிரச்­சினை இங்­கி­ருந்து தான் தோற்றம் பெரு­கின்­றன.

குறிப்­பாக பாட­சாலை மட்­டத்தில் பரீச்­சைகள் நடாத்தி, இதன் பெறு­பே­று­களின் அடிப்­ப­டையில், மாண­வர்­களை வடி­கட்டி, இறுதி தேர்­வுக்கு அனுப்­பு­கின்­றார்கள். குறை­வான மதிப்­பெண்­களை பெற்ற மாண­வர்­களை மறு­ப­டியும் 10 அல்­லது 11 வகுப்­பு­க­ளுக்கு அனுப்­பு­வ­தனால் மாண­வர்கள் மன­உ­ளைச்­ச­லுக்கு ஆளா­கின்ற நிலை காணப்­ப­டு­கி­றது. அது தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட மாண­வர்கள் மனித உரி­மைகள் சார்ந்த வழக்கு தொடர்ந்­துள்­ள­தா­கவும், பாரா­ளு­மன்ற உறுப்பினர் என்ற ரீதியில் என்னிடமும் முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் காலத்தில் நான் பாராளுமன்ற கல்விசார் குழுவில் கலந்தாலோசிக்க இருக்கிறேன்.

கேள்வி: தொடர்ச்சியாக மலையகம் சார் அமைச்சர்களுக்கு தோட்ட உட்கட்டமைப்பு சார்ந்த பதவிகளே கிடைக்கின்றன. சுகாதாரம், கல்வி, வெளிநாட்டு அலுவல்கள் போன்ற அமைச்சு பதவிகள் கிடைக்காமைக்கான காரணம் என்னவென நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: நியாயமான கேள்வி தான். இதில் ஒரு மாற்றம் என்னவெனில், தற்போது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என்று ஒன்றில்லை. 1996 ஆம் ஆண்டு இவ்வமைச்சு உருவானது. சந்திரிக்கா அம்மையாரால் பெருந்தொட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு அமைச்சு. இதன் பின்னர் அவர் வழியில் வந்த மஹிந்த அவர்கள் அதனை இல்லாமல் செய்தார்.

அத்தோடு, புடவைக் கைத்தொழில் அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, தபால் துறை அமைச்சு, சிறு கைதொழில் அமைச்சு, பிரதி சுகாதார அமைச்சு போன்ற அமைச்சு பொறுப்புக்களில் மலையகம் சார் அமைச்சர்களுக்கு இருந்திருக்கிறார்கள். 2005 - 2010 வரையான காலப்பகுதியில் இலங்கை பாராளுமன்றத்தில் 11 பேர் மலையகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். இதில் 9 பேர் அமைச்சர்களாக இருந்துள்ள நிலையில், ஒருவர் உட்கட்டமைப்பு அமைச்சரென்றால், மிகுதி 8 பேரும் வேறு துறைசார் அமைச்சர்களாக தானே இருந்திருக்கிறார்கள்.

கேள்வி: எதிர்காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இதனை பெற்றுகொடுத்தே ஆகவேண்டுமென நீங்கள் கருதும் விடயம் ஏதாவது இருக்கிறதா..?

பதில்: ஆம். காணிகளை பெற்று கொடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்கால இலக்காக நான் கருதுகிறேன். இதுவே அம்மக்களின் அத்தனை அடிப்படை பிரச்சினைகளுக்கும் மூலாதாரமானது. எனவே இதனை பெற்றுகொடுத்தே தீருவேன் என நம்புகிறேன்.

கேள்வி: யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒண்றிணைந்து, அங்கிருக்கும் அரசியல் கட்சிகளை உள்ளடக்கி, அவர்களின் சமூகம் சார்ந்த பொதுவான கோரிக்கைகளை முன்னிருத்தி எந்த கட்சிக்கு ஆதரவு வழங்கலாமென ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளனர். இவ்விடயம் மலையகத்திற்கும் சாத்தியமா..?

பதில்: 2000 ஆம் ஆண்டளவில் மலையக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று சேர்ந்து, உருவாக்கிய அமைப்பின் தொடர்ச்சிதான் என பெருமையாக கூறுவேன் நான். அப்போது செயற்பட்ட குழுவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஒருவனாக செயற்பட்டு இன்று பாராளுமன்ற உறுப்பினராகயிருக்கிறேன் என்பதே வரலாற்று உண்மை.

நேர்காணல் - சற்குணநாதன் லோகதர்ஷினி