(நா.தனுஜா)

மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் அவ­ரு­டைய குழு­வி­னரால் வெறுக்­கத்­தக்க வகையில் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­கின்ற செயற்­பாடு இடம்­பெற்று ஒரு­வ­ருடம் நிறை­வ­டைந்­தி­ருக்­கி­றது. அதன்­வி­ளை­வாக பாரா­ளு­மன்­றத்தின் ஜன­நா­யகம் 52 நாட்கள் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­த­கைய மோச­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்கள் தற்­போது ஒழுக்­க­மா­ன­தொரு சமுதா­யத்தை உரு­வாக்­குவோம் என்று வாக்­க­ளிக்­கின்­றார்கள் என்று நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர கடு­மை­யாகச் சாடி­யி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் கடந்த ஆண்டு ஒக்­டோபர் மாதம் 26 ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டு, மஹிந்த ராஜ­பக் ஷ பிர­த­ம­ராக நிய ­மிக்­கப்­பட்டார். அத­னை­ய­டுத்து நாட்டில் கடு­மை­யான அர­சி­ய­ல­மைப்பு நெருக்­கடி நிலை­யொன்று தோன்­றி­யது. 52 நாட்கள் வரை நீடித்த இந்த நெருக்­க­டி­நிலை இறு­தி­யாக உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்­புடன் முடி­விற்கு வந்­தது.

அர­சி­ய­ல­மைப்பு நெருக்­கடி இடம்­பெற்று ஒரு­வ­ருடம் முடி­வ­டைந்­துள்­ளமை தொடர்பில் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர அவ­ரு­டைய உத்­தி­யோ­க­பூர்வ டுவிட்டர் பக்­கத்தில்  இட்­டுள்ள பதிவில்,

மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் அவ­ரு­டைய குழு­வி­னரால் வெறுக்­கத்­தக்க வகையில் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­கின்ற செயற்­பாடு இடம்­பெற்று இன்­றுடன் (நேற்று) ஒரு­வ­ருடம் நிறை­வ­டைந்­தி­ருக்­கி­றது. அதன்­வி­ளை­வாக பாரா­ளு­மன்­றத்தின் ஜன­நா­யகம் 52 நாட்­க­ளுக்கு நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­த­கைய மோச­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்கள் தற்­போது ஒழுக்­க­மா­ன­தொரு சமூ­தா­யத்தை உரு­வாக்­குவோம் என்று வாக்­க­ளிக்­கின்­றார்கள்  என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை  சனிக்­கி­ழ­மை­யுடன் அர­சியல் நெருக்­க­டி­நிலை ஏற்­பட்டு ஒரு­வ­ருடம் பூர்த்­தி­ய­டைந்­தி­ருப்­பதால், அது­கு­றித்து எரான் விக்­கி­ர­ம­ரத்ன விசேட அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருக்­கிறார். அதில் மேலும் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­வது,

ஒரு­வ­ருட காலத்­திற்கு முன்னர் அர­சி­ய­ல­மைப்பு நெருக்­க­டி­நிலை நாட்டின் ஜன­நா­ய­கத்­திற்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தி­யது. மக்­களின் சக்­தி­யி­னாலும், சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய போன்ற தலை­வர்­களின் உறு­திப்­பாட்­டி­னாலும், சுதந்­திர ஜன­நா­யக அமைப்­புக்­களின் வலி­மை­யாலும் நாட்டின் ஜன­நா­யகம் மீண்டும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

கடந்த வருடம் பிர­த­ம­ராகும் வாய்ப்பு சஜித் பிரே­ம­தா­சவுக்கு வழங்­கப்­பட்ட போதிலும் அவர் அர­சி­ய­ல­மைப்­புக்கு மதிப்­ப­ளித்­த­துடன், சட்­ட­வி­ரோ­த­மாக அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வதை நிரா­க­ரித்தார். 2018 ஒக்­டோ­பரில் 52 நாட்கள் நாட்டில் அர­சி­ய­ல­மைப்பு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­திய அதே சர்­வா­தி­காரக் குழுவே தற்போது மீண்டும் அதிகாரத்தைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

நாட்டின் அரசியலமைப்புக்கு மதிப்பளிக்க முடியாதவர்களும், சட்டத்தின் பிரகாரம் செயற்பட முடியாதவர்களும் ஒரு பத விக்குரிய பொறுப்பை சரிவர நிறைவேற்றுவார்களா என்று நம்மை நாமே கேட்டுப்பார்க்க வேண்டும். எமது நாட்டுமக்கள் ஜனநாயக அடித்தளத்தின் ஊடாக சுபிட்சத்தை அனுபவிப்பதற்கு தகுதியுடையவர்களாவர்.