இருபிரதான கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதற்கான மேற்கொண்டுள்ள தெரிவுகள் சரியாகவே இருக்கின்றன. ஆனால் அவ்விருவரும் புதிய திட்டங்கள் பற்றி கூறியதை நான் எங்குமே அவதானிக்கவில்லை. அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சூழ்ந்திருந்த தரப்புக்களே தற்போது இவ்விருவருக்கும் ஆதரவளித்து வருகின்றன. ஆகவே இந்த நபர்களையும் அதே தரப்புகள் சூழ்ந்திருக்கின்மையானது மீண்டும் பழைய நிலைமைக்கே கொண்டு சென்று விடுவதற்கான ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:-திடீரென சுயாதீன ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு ஏன் தீர்மானித்தீர்கள்?

பதில்:- 2015 ஆம் ஆண்டு நான் உள்ளிட்ட புத்திஜீவிகள் சமுகத்தினர் ஆட்சிமாற்றத்திற்கு பாரியளவில் உழைத்திருந்தார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதும் அம்மாற்றத்தினை சரியான பயன்படுத்தாது அனைத்து துறைகளையும் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டார்கள். 

இந்நிலையில் ஆட்சிமாற்றத்தின்போது பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவைப்பாடும் பொறுப்பும் எனக்குள்ளது. அதனடிப்படையில் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதென தீர்மானித்தேன். இதில் வெற்றி, தோல்வி என்பதற்கு அப்பால் எமது நாட்டினை முன்னகர்த்துவதற்கு தேவையான முன்மொழிவுகளை மக்கள் மத்தியில் பரிந்துரைப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகவும் பிரதான வேட்பாளர்களுக்கு அதனை தெளிவுபடுத்துவதற்கான தருணமொன்றாகவும் கருதுகின்றேன்.

கேள்வி:- உங்களிடத்தில் உள்ள முக்கிய முன்மொழிவுகள் பற்றி சுருக்கமாக கூறுங்கள்?

பதில்:- 2015 இல் நிறைவேற்று அதிகாரத்தினை நீக்கி மக்களை மையப்படுத்தி அதிகாரப்பகிர்வினைச் செய்வதையே பிரதான இலக்காகக் கொண்டிருந்தோம். ஆனால் மைத்திரியைப் பயன்படுத்தி இலகுவாக ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைத்து தேர்தலில் வெற்றிபெறமுடியாத ரணில் விக்கிரமசிங்க அவற்றை தம் வசப்படுத்தி நிறைவேற்று அதிகார பிரதமரை கட்டமைப்பதற்கே முனைந்திருந்தார். ஒரு நிறைவேற்றதிகாரத்தினைக் களைந்து மற்றொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட நபரை உருவாக்க இடமளிக்கவே முடியாது.

மக்களுக்கானவகை பொறுப்புக் கூறுவதற்கும் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அத்தியவசியமான தேவையாக இருப்பது அரசியமைப்பு மாற்றமாகும். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக எமது அரசியலமைப்பில் வெளிப்படையாக காணப்படும் பிரச்சினைகளில் குறித்த இலகுவான மாற்றங்களை ஏற்படுத்த நான் முயற்சிக்கிறேன். அதற்காக சில பரிந்துரைகளை முன்வைக்கின்றேன்.

குறிப்பாக, நிறைவேற்று அதிகாரம்,சட்டவாக்கத்துறை அதிகாரம், நீதித்துறை அதிகாரம் என்பவற்றுக்கு மேலதிகமாக மக்களது மேற்பார்வை அதிகாரத்தை அரசியலமைப்புக்குள் உள்வாங்குதல், மக்களது தேவைக்கான பொறுப்புணர்வை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை அம்சங்கள் சார்ந்த உள்ளுராட்சிமன்ற சட்டம் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

அத்துடன் நிர்வாக பலப்படுத்தலும், தொடர்ந்தேர்ச்சியை மேம்படுத்தலும், மக்களுக்கிடையிலான முரண்பாட்டுக்கும், சமத்துவ மின்மைக்கும் மொழியினை ஒர் கருவியாக பயன்படுத்துவதை விடுத்து அபிவிருத்திக்கான ஓர் உந்து சக்தியாக உபயோகித்தல், பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் தமது முழுமையான திறனை மேம்படுத்தும் அதேவேளை விசேட தேவைகளையும், சிறப்பான பாராமரிப்பையும் பெற்றுக்கொள்ளுதல், குறித்த தொகுதி பிரிவுகளுக்கான தேவை, மற்றும் அக்கறையுள்ள குழுக்களுக்கு ஒருமித்த குரலை வழங்கும் அதேவேளை பொறுப்புணர்வை மேம்படுத்தும் வகையில் விகிதாசார பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சிறந்ததொரு தேர்தல் முறைமை உருவாக்குதல் ஆகியன அவையாகின்றன.

கேள்வி:- எட்டாவது ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் நாட்டின் தலைவர் ஒருவருக்குரிய  கடமைகளான தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, பௌத்த சமயத்திற்கான முன்னுரிமை போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்துகின்றரே தவிர பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுப்பது பற்றிய முன்மொழிவுகள் பற்றி பிரதிபலிக்காத போக்கினை எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- நீங்கள் கூறியது சரியானது. பிரதான வேட்பாளரார்களாக இருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவும் சரி, சஜித் பிரேமதாஸவும் சரி வெறுமனே தனித்தனி நபர்களாக நோக்குகின்றபோது, இருவரிடத்திலும் தனித்திறமைகள் இல்லாமலில்லை. கடந்த காலங்களில் அவர்களின் வெற்றிகரமான செயற்பாடுகள் அவற்றை பிரதிபலிப்பதாக இருக்கின்றன. இருபிரதான கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதற்கான மேற்கொண்டுள்ள தெரிவுகள் சரியாகவே இருக்கின்றன. 

ஆனால் அவ்விருவரும் புதிய திட்டங்கள் பற்றி கூறியதை நான் எங்குமே அவதானிக்கவில்லை. தற்போது மிகவும் சிக்கலானவொரு நிலைமை எழுந்துள்ளது.

அதாவது, கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சூழ்ந்திருந்த தரப்புக்களே தற்போது இவ்விருவருக்கும் ஆதரவளித்து வருகின்றன. ஆகவே இந்த நபர்களையும் அதே தரப்புகள் சூழ்ந்திருக்கின்மையானது மீண்டும் பழைய நிலைமைக்கே கொண்டு சென்று விடுவதற்கான ஆபத்தே உள்ளது. புதிய சிந்தனைகள் தொடர்பில் சிந்திப்பதற்கோ, முன்மொழிவதற்கோ, செயற்படுத்துவதற்கோ இந்த தரப்புக்கள் இடமளிக்குமா என்ற கேள்வி எனக்கு இருக்கின்றது.

கேள்வி:- கடந்த காலத்தில் பிரதான தலைவர்கள் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களைச் சூழ்ந்திருதவர்களே தடையாக இருந்தீர்கள் என்ற குற்றச்சாட்டை எந்த  டிப்படையில் முன்வைத்துள்ளீர்கள்?

பதில்:- போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கும் வங்கிக்கடன் வசதிகளை மேற்கொள்வதற்கு அறக்கட்டளையொன்றை ஏற்படுத்துவதற்கு முனைந்தேன். இதற்காக அப்போது வவுனியா அரச அதிபராக செயற்பட்ட பி.எஸ்.எம்.சார்ள்ஸ{ம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தார்.

ஆனால் இறுதி தருணத்தில் மொஹான் பீரிஸ் அதற்கான அனுமதியை வழங்குவதற்கு மறுத்தார். பின்னர், புதுக்குடியிருப்பு, மாந்தை மேற்கு, துணக்காய் போன்ற பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையத்தினை அமைத்தோம்.

2013 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையிக் குழுவின் நானும் உறுப்பினராக இருந்தேன். பேச்சுவார்த்தைகளின்போது பல்வேறு விடயங்களில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டு முன்னேற்றகரமாக இருந்தன. கூட்டமைப்பின் உறுப்பனர்கள் நடுநிலையான சிந்தனைகளுடன் தான் அப்போது இருந்தார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரன் மட்டும் செனட் சபை, 13ஆவது திருத்தச்சட்டம், உள்ளுராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்களை அதிகரித்தல் போன்ற விடயங்கள் கடுமையான நிலைப்பாட்டில் இருந்தார். இருப்பினும் இணக்கப்பாடுகள் கணிசமான அளவில் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் இருக்கும்போது சஜின்வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதியாகவிருந்த மஹிந்தவிடம் சென்று தவறான விளக்கங்களை வழங்கினார். கூட்டமைப்பின் கோரிக்கையை விடவும் அதிகமான அதிகாரங்கள் வழங்கத்தயாராவதாக கூறிவிட்டார். அதன் பின்னர் என்னை கூட்டங்களில் இணைத்துக்கொள்வது தவிர்க்கப்பட்டது.

நேரடியாக மஹிந்தவிடத்தில் நானும் நிமல்சிறிவும் சந்தித்து விளக்கமளிக்கும் முயற்சியும் தோல்வி கண்டது. அதனைவிடவும் தேர்தலின் பின்னர் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பும் இணக்கத்தினை எட்டிய விடயங்களுக்கு அதிகமான கோரிக்;கைகளை முன்வைத்தது. இதனால் பேச்சு முறிந்தது. அத்துடன் சுமந்திரன் போன்ற நடுநிலையாளர்களின் மனதிலும் தலைமைத்துவ சிந்தனை எழுந்தது. தற்போது அந்த சிந்தனையால் எவ்விதமான முன்னேற்றங்களையும் காணமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆணைக்குழுவை அமைப்பதாக கூறியபோதும் அதனைச்செய்யவில்லை. அதன்பின்னரே தருஸ்மன் குழு அமைக்கப்பட்டது. அதேபோன்று சி.ஆர்.டி.சில்வாவின் இடைக்கால அறிக்கையை மையப்படுத்திய செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க முடியும். இவ்விடயங்களை கையாள்வதற்கு மொஹான் பீரிஸ் நியமக்கப்பட்டார். ஆனால் எவ்விதமான விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

அவ்வறிக்கையின் விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு என்னை நியமிக்குமாறு கோரியபோதும் மொஹான் பீரிஸ் அதற்கு உடன்பட்டிருக்கவில்லை. பின்னர் என்னை கண்காணிப்புஉறுப்பினராக நியமித்தார்கள். செயற்பட்டுக்குழுவை கூட்டுமாறு எத்தனையோ தடவைகள் கோரியபோதும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவுக்கு நேரமில்லை என்று கூறிக் காலம் கடத்தினார்கள். அதன் பின்னர் நானும் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியதியால் அவ்விடயம் அவ்வாறே கிடப்பில் போடப்பட்டது.

போர் நிறைவடைந்ததும் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்குமாறு அழுத்தங்களை வழங்கினேன். மஹிந்த ராஜபக்ஷ அதற்கு செவிமடுத்து நடவடிக்கைகளை எடுத்தார். பின்னர் என்னை ஜெனீவாவுக்குச் அரசாங்கத்தின் சார்பில் செல்லுமாறு கோரினார்கள். இரண்டு தடவைகள் அக்கோரிக்கையை நிரகாரித்த பின்னர் மூன்றாவது தடவையாக ஏற்றுக்கொள்ளும் முடிவை எடுத்தேன். அச்சமயத்தில் எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாட்டுத்திட்டத்தினை காண்பிக்குமாறு கோரினேன். செனுக்கா செனவிரட்னவும், மொஹான் பீரிஸ{ம் எதனையும் செய்திருக்கவில்லை.

வெளிவிவகார அமைச்சராக இருந்த பீரிஸ் அவ்வாறான ஒருவிடத்தினையே அறிந்திருக்கவில்லை. இதன்காரணமாகவே 2012 இல் ஜெனீவாவில் எமக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதன்பின்னர் தான் மஹிந்த  ராஜபக்ஷ மொஹான் பீரிஸை நீக்கி லலித்வீரதுங்கவை செயலாளராக நியமித்தார். அவர் ஒருமாதத்திலேயே செயற்பாட்டுத்திட்டத்தினை வரைந்து சமர்ப்பித்தார். அமைச்சரவையும் அனுமதி வழங்கியது.

எனினும் மொஹன் பீரிஸ் பிரதம நீதியராக நியமிக்கப்பட்ட பின்னரே அத்திட்டம் குறித்த நடைமுறைகள் ஆரம்பமாகியிருந்தன. தாரா விஜயதிலக்க விடயங்களை சரியாக கையாண்டு சென்றபோதும் பீரிஸ் அவருடைய பணிகளை முன்னெடுப்பதற்கு இடமளித்திருக்கவில்லை.

கேள்வி:- இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனீவா தீர்மானத்தினை மறுபரிசீலனைக்கு உட்படுத்த முடியுமா?

பதில்:- ஜெனீவா விடயத்தில், 2015 தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டமையானது தவறானதாகும். அமெரிக்காவினால் தீர்மானம் முன்மொழியப்பட்டபோது ரவிநாதஆரியசிங்க அதனை மாற்றுவதற்கு முயற்சித்தார். இருப்பினும் சுமந்திரன் மற்றும் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் அங்கு சென்று அமெரிக்க பிரதிநிதியான சூசன் ரைஸிற்கு அழுத்தமளித்தார்கள். அச்சமயத்தில் சூசன் ரைஸம்ஸும் தாம் முன்மொழிந்த பழைய தீர்மானத்தினையே முன்னகர்த்துப்படி அழுத்தங்களை வழங்கினார்கள்.

இச்சமயத்தில் ஆரியசிங்க அதிலுள்ள பாதகமான விடயங்களை எழுத்துமூலமாக இங்கு அனுப்பியபோதும் அவை பொருட்படுத்தப்படாது ஏற்றுக்கொள்ளுமாறே அறிவுறுத்தப்பட்டது. எம்மீதான குற்றச்சாட்டுக்களை விடுவித்துக்கொள்வதற்கு பல சந்தர்ப்பங்கள் இருந்தன. பிரித்தானியா நேஸ்பி பிரபு சான்றாதரங்களை அனுப்பி வைத்திருந்தபோதும் அதுதொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. பரணகமவின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோதும் அது கிடப்பில் போடப்பட்டு விட்டது.

இவ்வாறு சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டு சர்வதேசத்துடன் பகைமைகள் தான் அதிகரிக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் மீண்டும் ஜெனீவா தீர்மானத்தினை மறுசீரமைப்புச் செய்வது எனக் கூறுவதென்பது இயலாத விடயமாகின்றது.

கேள்வி:- இலங்கை அரசாங்கம் சர்வதேசத் தரப்புக்களுடன் கொண்டிருக்கும் உறவுகளில் தொடர்ச்சியான விரிசல்கள்; ஏற்பட்டுவருவதாக காணப்படும் விமர்சனத்தினை எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக்காலத்தில் ஜீ.எல்.பீரிஸ் என்ற பயந்தான்கொள்ளயிடம் வழங்கி இந்தியாவையும், அமெரிக்காவினையும் பகைத்துக்கொண்டார். சீனாவைப் பயன்படுத்தி அனைத்தையும் மேற்கொள்ள முடியும் என்றும் கருதினார். இதற்கு அவரைச்சூழ இருந்தவர்களே காரணமாக உள்ளனர்.

போர் நிறைவடைவதற்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் உதவிகளை அளித்தார்கள். ஆனால் எமக்கும் பிரித்தானிய உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் வேறுபட்ட பிரச்சினைகளே இருந்தன. புலம்பெயர் தமிழர்களின் வாக்குகள் பிரித்தானிய போன்ற நாடுகளில் முக்கியமாக காணப்பட்டமையால் டேவிட் மில்லிபான்ட் போன்றவர்கள் நெருக்கடியான சூழலுக்கு முகங்கொடுத்திருந்தனர். இந்த விடயத்தினை டேவிட் மில்லிபான்டே வெளிப்படுத்தியிருக்கின்றார்.

அவ்வாறிருக்கையில், 2008ஆம் ஆண்டு ஹிலரி கிளின்டன் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அவர் தோல்வியடைந்தார். பின்னர் அவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதும் ஜி.எல்லை வருகை தந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் சென்றிருக்கவில்லை. பாலித்த கொஹன்ன நியூர்க்கில் இருந்தபோது இந்த அழைப்பு பற்றி தொடர்ச்சியாக கூறியபோதும் பீரிஸ் அச்சம் காரணமாக அங்குசென்றிருக்கவில்லை.

அதேபோன்று தூதுவர்களுடனான சந்திப்பின்போது ஜி.எல் பீரிஸ் விரிவுரை வழங்குவது போன்று தான் செயற்படுவார். தூதுவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிறிதொரு நாளில் பதிலளிப்பதாக கூறி தட்டிக்கழிப்பார். ஒருதடவை அமெரிக்க தூதுவர் பற்றிசியா புட்டினிஸ் அடிப்படைவாதம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது பதிலளிக்க மறுத்தார். அச்சமயத்தில் தீர்மானம் எடுக்கவல்லவர்கள் அரசாங்கத்தில் யார் என்ற கேள்வியை என்னிடத்தில் அவர் தொடுத்தார். அப்போது நான் ஜி.எல்.பீரிஸ், மொஹான் பீரிஸ் ஆகியோரின் பெயர்களையே முன்மொழிந்தேன். ஆனால் அவர்கள் இருவர் மீதும் நம்பிக்கை இல்லை என்று பற்றீசியா கூறிவிட்டார். இப்படித்தான் நிலைமைகள் இருந்தது.

இந்தியாவுடனான உறவையும் இவ்வாறு தான் சீரழித்தார்கள். 2012இல் எமக்கு ஆதரவாக ஜெனீவாவில் வாக்களிப்பதாக அவர்கள் கூறியதோடு அதனை பகிரங்கப்படுத்தவேண்டாம் என்றும் கூறினார்கள். ஆனால் தமது சுயலாபத்திற்கான அதனை பகிரங்கப்படுத்தவும் தமிழ் நாட்டில் எதிர்ப்பலை எழுந்தது. அதனையடுத்து டெல்லி அச்சமடைந்து விட்டது. அதனையடுத்து டெல்லியிலிருந்து அனுப்பிய விடயங்களுக்கு ஜி.எல்.பதிலளிக்காது தவிர்த்தமையால் நிலைமைகள் மாறின. அதன்பின்னர் இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாடுகளை இறுக்கமாக கொண்டிருந்தார்.

சீனாவைமட்டும் நம்பி நகர்ந்தவேளையில் மேலதிகமாக நிதி தேவைப்பட்டது. அதனை சீனாவிடத்திலிருந்து பெற்றதும் சீனாவின் கட்டுக்குள் அரசாங்கம் சென்றாகிவிட்டது. இதன்பின்னர் மஹிந்த அரசாங்கத்தில் இருந்தவர்களே சீனாவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டால் அந்த உறவுகளிலும் மோசமான நிலைமைகள் எழுந்தன. துற்போது எமது வெளிநாட்டுக்கொள்கைகள் என்ன எங்கு செல்கின்றோம் என்பதே தெரியாதுள்ளது.

நேர்காணல்:- ஆர்.ராம்