இன ஒற்றுமையை சிதைப்பதற்கு பல்வேறு வழிகளில் சதிகள் இடம்பெற்றுவருகிறது அவற்றிற்கு இடம்கொடுக்காமல் ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டும். என ஜனாதிபதி வேட்பாளரான பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர்  சகாயமாதாபுரம் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயத்தில்  இடம்பெற்ற விசேட பூஜை நிகழ்வுகளில் கலந்துகொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அனைவருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன். நாங்கள் தமிழ் , சிங்கள ,முஸ்லீம்கள் என்ற வேறுபாடு இல்லாமல் இலங்கையர் என்ற ஒற்றுமையுடன் வாழவேண்டும். 

அந்த ஒற்றுமையை வலியுறுத்துவதற்காகவே நாம் இங்கு வந்திருக்கின்றோம்.இந்த நாடு புனிதமானது. சிறப்பானது பெருமைக்குரியது. சிங்களவர்கள் இந்து ஆலயத்திற்கு வருவது போல, தமிழர்கள் பௌத்த ஆலயத்திற்கு வந்திருக்கின்றார்கள். அவர்களது கலாச்சாரங்களையும் பின்பற்றி கொள்கின்றார்கள். 

இந்த ஒற்றுமையை சிதைப்பதற்கு பல்வேறு வழிகளில் சதிகள் இடம்பெற்று வருகிறது. அது அரசியல் சார்ந்தோ அல்லது சமூகத்தின் வேறு சில சார்ந்தோ இருக்கலாம். இவற்றிற்கு இடம் கொடுக்காமல் நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். 

அந்த ஒற்றுமையை  கலைப்பதற்கு யாரும் இடமளிக்க கூடாது. இந்த தேசம் பல்வேறு சர்ச்சைகளால் பிரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. எனவே அதற்கு உடந்தையாக இருக்காமல், யாருடைய செயற்பாட்டிற்கும் காது கொடுக்காது அனைவரும்  சமத்துவமாக இருக்க வேண்டும் என்றார்.

இதேவளை குறித்த ஆலய நிர்வாகத்தினர் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க அருகில் அமைந்துள்ள விமான படைத்தளத்திலிருந்து ஒரு பகுதி காணியினை ஆலயத்தின் தேவைக்காக பெற்று தருவதாகவும் அவர் உறுதிமொழி அளித்திருந்தார்.