எங்களது அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அநியாயங்கள் நடந்தபோது, "இப்போது சுகமா?" என்று மஹிந்த ராஜபக்ஷ கேட்டார். இந்த சம்பவங்களின் பின்னாலிருந்த இனவாத நாசகாரக் கும்பல்கள் அவரது அணியில்தான் சங்கமித்திருக்கின்றன என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்றிரவு  ஏறாவூர்பற்று பிரதேசத்தில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சமூகத்துக்கு எதிராக அநியாயங்கள் நடந்தபோது நாங்கள் அமைச்சரவையில் தைரியமாகப் பேசினோம். சட்டமும் ஒழுங்கும் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தடங்கல்கள் குறித்து ஆராய்ந்தோம். அநீதியாக நடந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றுவதற்கான சூழல் இந்த ஆட்சியில்தான் ஏற்பட்டது. ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் நாங்கள் இப்படி தைரியமாக பேசமுடியாது. அவ்வாறு பேசினால், எங்களுக்கு மேல் பாய்ந்து விழுவார்கள்.

ஏறாவூரிலுள்ள ரம்மியமான புன்னக்குடா கடற்கரையை ஆக்கிரமித்து அடாத்தாக இராணுவமுகாம் அமைப்பதற்கான முயற்சியை தடுப்பதற்கு நாங்கள் பலவிதமான முற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த அழகிய கடற்கரையில் பீரங்கிகளை கொண்டுவந்து ஆட்டிலெறி ரெஜிமன்ட் முகாமை அமைப்பதற்கு அனுமதி வழங்கமுடியாது. இதன்மூலம் இன்னுமொரு சாலாவ வெடிப்பு சம்பவத்தை நாங்கள் எதிர்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.