(நெவில் அன்தனி)

பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா ஆண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தென் மாகாணத்தை 4 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட வட மாகாணம் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.

இந்த வெற்றியில் முன்னாள் தேசிய வீரரும் மீண்டும் தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கு கடும் பிரயத்தனம் எடுத்துவருபவருமான அணித் தலைவர் ஜெபமாலைநாயகம் ஞானரூபன் போட்ட ஹெட்-ட்ரிக் கோல்கள் பெரும் பங்காற்றின.

வட மாகாண அணி போட்டியின் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டது. ஆனால் 25 நிமிடங்களின் பின்னர் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடிய வடக்கு மாகாண அணி சார்பாக போட்டியின் 34 ஆவது நிமிடத்தில் ஞானரூபன் அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.

போட்டியின் முதலாவது பகுதியில் தென் மாகாணத்துக்கு பத்து கோணர்கள் கிடைத்தபோதிலும் அவற்றை அவ்வணி முறையாக பயன்படுத்தத் தவறியது.

இடைவேளையின் போது ஒரு கோல் முன்னிலையில் இருந்த வட மாகாண அணி இடைவேளையின் பின்னர் மேலும் 3 கோல்களைப் போட்டு இலகுவாக வெற்றிபெற்றது. அத்துடன் மேலும் பல கோல்போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது.

போட்டியின் 67ஆவது நிமிடத்தில் எம். நிதர்சன் கோல் போட வட மாகாணம் 2 க்கு 0 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து 3 நிமிட இடைவெளியில் ஞானரூபன் (83ஆவது நிமிடம், 84ஆவது நிமிடம்) மேலும் இரண்டு கோல்களைப் போட்டு வட மாகாண அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்நிலையில் இப்போட்டியில் அதி சிறந்த வீரராக எவ்வித கேள்விக்கும் இடமின்றி வட மாகாண அணியின் ஞானரூபன் தெரிவானார்.