பத்மஸ்ரீ விருது பெற்ற கோவையை சேர்ந்த மூத்த யோகா ஆசிரியர் நானம்மாள் 99 ஆவது வயதில் காலமானார். 

தமிழகத்தின் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நானம்மாள். அவருடைய தாத்தா மன்னார்சாமியிடம் யோகாசன பயிற்சியை கற்றுக்கொண்டார். 

நானம்மாள், இறக்கும் வரை கடினமான  யோகாவையும் சர்வ சாதாரணமாக செய்து வந்ததுடன், மிகவும் வயதான யோகா ஆசிரியையாகவும் வலம் வந்தார்.

இவரிடம் யோகா கற்றுக்கொண்ட 600 பேர் இன்று உலகம் முழுவதும் யோகா ஆசிரியர்களாக உள்ளனர். இதில் 36 பேர் நானம்மாளின் குடும்பத்தினரே ஆவர்.

இவரது யோகா மாணவர்கள் சீனா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

நானம்மாளுக்கு, கடந்த 2018ம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. ஏற்கெனவே நானம்மாள், ஜனாதிபதியிடம் ‘பெண் சக்தி’ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது