இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட்களிலும், இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

முதல் பயிற்சிப் போட்டியானது மார்ச் மாதம் 7 - 9 ஆம் திகதி வரை கட்டுநாயக்க மரியானாஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்திலும், இரண்டாவது பயிற்சிப் போட்டி 12 - 15 ஆம் திகதிகளில் கொழும்பு, சரவணமுத்து மைதானத்திலும் நடைபெறும்.

இத‍ேவேளை முதல் டெஸ்ட் போட்டியானது மார்ச் மாதம் 19 - 23 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 27 - 31 ஆம் திகதி வரை கொழும்பு, ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

இந்த மைதானத்தில் இறுதியாக இலங்கை அணி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தது.

இறுதியாக இலங்கை அணி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தது. இந்த தொடரை இங்கிலாந்து அணி 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.

இந்தத் தொடரானது டெஸ்ட் உலகக் கிண்ணத் தொடரில் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.