(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தினை உருவாக்கிக் கொள்ள மக்கள் ஆணையினை  கோருகின்றோம். தமிழ்-முஸ்லிம் சமூகத்திற்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை  ஏமாற்றவில்லை  என   எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை பிரகடனம்  வெளியிடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள தாமரை தடாக கலையரங்க மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

வெளியிடப்படும் கொள்கை பத்திரங்களை கொண்டு நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் தற்போது தீர்மானங்களை மேற்கொள்வார்கள் என்று  எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் கடந்த மற்றும்  நடப்பு அரசாங்கத்தின் நிர்வாகத்தினையும், எமது  கொள்கையினையும்  ஆராய்ந்து சிறந்த அரசியல் தீர்மானத்தை முன்னெடுப்பார்கள்.

மக்களை மையப்படுத்திய, அரச நிர்வாகத்தை முன்னெடுக்கும் விதத்திலான  ஐந்து ஆண்டுகால  கொள்கை திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் ஒரு தரப்பினருக்கு சாதகமாகவும், பிறிதொரு தரப்பினருக்கு பாதகமாகவும் உருவாக்கப்படவில்லை. நாட்டு மக்களுக்கு தேவையான விடயங்களை கொண்டு பொதுவாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.