பெருந்தோட்ட வைத்தியசாலைகள் உட்பட பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள 450 சுகாதார நிலையங்களை சுகாதார அமைச்சின் கீழ் கையகப்படுத்துவது குறித்த உபகுழுவின் அறிக்கை, சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் நேற்று  கையளிக்கப்பட்டது.

இதற்கமைய குறித்த அறிக்கையை கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கையளிப்பதற்கும், அதன் பின்னர் பெருந்தோட்ட வைத்தியசாலைகள் உள்ளிட்ட 450 சுகாதார நிலையங்களை பகுதி பகுதியாக சுகாதார அமைச்சின் கீழ் கையகப்படுத்தவும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இதுவரை பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சுகாதார வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருக்கவில்லையென்பதுடன், அவர்களுக்கான பெருந்தோட்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களை உள்ளராட்சி சபைகளுடன் இணைந்து சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனங்கள் நடத்தி வந்தன.

இவற்றில் அரசாங்க வைத்தியர்களின் சேவைகளுக்குப் பதிலாக, பெருந்தோட்ட சுகாதார உதவியாளர்களின் சேவைகளே பெற்றுக்கொடுக்கப்பட்டன.

2006ஆம் ஆண்டு 44 பெருந்தோட்ட நிறுவனங்களை அரசாங்கம் கையகப்படுத்துவதற்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், இதனால் பெருந்தோட்ட சுகாதார உதவியாளர்களை உள்ளீர்க்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கையகப்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அதனை ஆராய உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கையகப்படுத்துவது பொருத்தமானது என நேற்றையதினம் கூடிய சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 

சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தலைமையில் நேற்று (23) கூடியிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் கலந்துகொண்டிருந்தார். சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் இதில் பங்கெடுத்திருந்தனர்